a K.Vijay Anandh review
பா ரஞ்சித்தின் தம்மம், சிம்புதேவனின் கொட்டப்பாக்கு வந்தலும் மொட்டை மாடி சித்தரும், எம் ராஜேஷின் Mirrage மற்றும் வெங்கட்பிரபுவின் Confession என்று நான்கு வெவ்வேறு கதைகள். ஒவ்வொன்றிலும், யாருக்கு குறிவைக்கப்படும் இலக்கில் யாரோ பலிகடா ஆகிறார்கள், அந்த ஒரு புள்ளியில் நான்கு கதைகளும் இணைகின்றன.
பா ரஞ்சித்தின் தம்மம்
தான் உண்டு தன் வயல் உண்டு என்று விதைப்புக்கு முந்தைய வேலைகளை பார்த்துக்கொண்டிருக்கும் குரு சோமசுந்தரம், வயக்காட்டில், வரப்பு, ஓடைகளில் மீன்பிடித்து விளையாடிக்கொண்டிருக்கும் அவரது மகள். வினையாக வரும் கலையரசன், சட்டென்று மாறிப்போகும் சூழ்நிலை. வெறும் வயக்காடுகள் தான் லொகேஷன். தெளிந்த வாய்க்கால் தண்ணீரில் ஓடும் மீன் அதைப்பிடித்து விளையாடும் சிறுமி, சம்பந்தப்பட்ட காட்சிகளை ஜஸ்ட் லைக் தேட்டாக காட்டி கடந்து போய்விடாமல், வாய்க்கால் தண்ணீருக்குள் கேமரா வைத்து அண்டர் வாட்டர் ஷாட் எடுத்தாலும் அழகாக தான் இருக்கும் என்கிற மெனக்கெடல்களில் பா ரஞ்சித் உள்ளிட்ட படக்குழுவினரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நடிகர்களின் நடிப்பாற்றலும் அழகு, குறிப்பாக அந்த சிறுமி அட்டகாசப்படுத்திவிடுகிறாள்.
சிம்புதேவனின் கொட்டப்பாக்கு வந்தலும் மொட்டை மாடி சித்தரும்
லாக் டவுன் கால கட்டத்தில், விக்னேஷ்காந்த் போடும் ஸ்கெட்ச்சை அறியாமல் லே அவுட் போடுகிறார் பத்திரிகையாளர் தம்பி ராமையா. அந்த ஸ்கெட்ச்சில் யார் பலிகடா ஆகிறார் என்பது சுவராஸ்யமான கிளைமாக்ஸ். தம்பி ராமையா, மோனோ ஆக்டிங் வைத்து இவரை மட்டுமே நாற்பது நிமிடங்கள் காட்டியிருக்கலாம் போல, வேறலெவல் உடல்மொழியில் அசத்துகிறார். இன்னொரு ஜாம்பவான் நாசர் சேர்ந்தால், எப்படி இருக்கும். இருவரும் சேர்ந்து அட்டகாசப்படுத்தியிருக்கிறார்கள். படுத்துக்கொண்டே ஜெயித்த அரசியல்வாதி மாதிரி, படுத்துக்கொண்டே நடித்து வில்லத்தனம் செய்யும் விக்னேஷ்காந்த் என்று இந்த எபிசோடும் அருமை.
எம் ராஜேஷின் Mirrage
நடராஜ் சுப்ரமணியன், பிரியா பவானி சங்கர் இன்னொரு கதாபாத்திரம் என்று மூன்றே கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு, ஒரு மன ரீதியான குறைபாட்டுடன் விறுவிறுப்பான கதையாக பயணிக்கிறது. வெப் சீரிஸ் நடிகர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் எக்ஸ்ட்ரா ஸ்பேஸ் தருகிறது என்பதை இந்த எபிசோடில் கண்கூடாகவே உணரலாம்.
வெங்கட்பிரபுவின் Confession
என்னங்க இன்னைக்கு நைட் டூட்டியா என்று அப்பாவியாக கேட்கும் ஐஸ்வர்யா, ஆமாம் என்று மெல்லிய குரூர புன்னகையுடன் கிளம்பும் பிரசன்னா. இன்னொரு பக்கம் எப்படியாவது சம்பாதித்து கொண்டே , லண்டனுக்கு சென்று வேலைபார்த்து, மிகவும் வசதியாக வாழ்ந்துவிட வேண்டும் என்று துடிக்கும் அமலா பால். பிரசன்னாவிற்கு கொடுக்கப்படும் Assignment என்ன ? அவர் பார்க்கும் நைட் டூட்டிக்கு எவ்வளவு சம்பளம்..? எப்படி விண்ணப்பிக்கலாம்..? என்கிற யோசனைகள் ரசிகர்களுக்கு ஏற்படலாம். அதையும் மீறி, நமது கடந்தகால தவறுகளை நினைவில் நிறுத்தி திருத்திக்கொள்ளவும் ஒரு வாய்ப்பை உருவாக்கிவிடுகிறார் வெங்கட்பிரபு
Victim , very well narrated and executed web series