a K.Vijay Anandh review
சுதந்திர இந்தியாவில் நேரு குடும்பத்து காங்கிரஸ் ஆட்சி, கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு பிறகு மோடி தலைமையிலான பாஜக ஆட்சி. நடுவில் காங்கிரஸ் சார்பாக தான் என்றாலும் அன்றைய லால் பகதூர் சாஸ்திரி ஆட்சி, பெரிதும் நினைவிற்கு வராத அந்த காலகட்டத்தில் நடக்கும் கதையாக சீதா ராமம் விரிவதே மிகப்பெரிய சுவராஸ்யத்தை ஏற்படுத்திவிடுகிறது.
இன்றைய தேதியில், இந்தியாவின் தலை சிறந்த இளம் நடிகர்களுள் துல்கர் சல்மான் முக்கியமானவர் என்று சொன்னால் அது மிகையாகாது. படத்திற்கு படம் வேறுபட்ட சவாலான கதாபாத்திரங்கள், ஏன் தொடர்ந்து காதல் படமாகவே இருந்தாலும் ஒவ்வொரு காதல் படத்திலும் வெவ்வேறு பரிணாமங்கள் என்று அசத்துகிறார். உறவுகள் என்று யாரும் இல்லாத இராணுவ அதிகாரி ராம் ஆக அட்டகாசமாக நடித்திருக்கிறார். அந்த துறுதுறு, மிடுக்கு, பொதுமக்களிடம் பழகும் போது இருக்கும் கனிவு, காதலில் உருகிப்போவது, தேடி வந்த ஒருவள் பாலியல் தொழிலாளில் என்பதை அறிந்து அவள் உட்பட அவளைப் போன்றே பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட பல பெண்களின் வாழ்க்கையை மாற்றுவது என்று ஒவ்வொரு கட்டத்திலும் நம்மை வசீகரித்துவிடுகிறார்.
யாருமே இல்லை என்கிறாரே, நாம் இவரை காதல் கணவராக பாவித்து கடிதங்கள் எழுதுவோமே என்று தான் ஆரம்பிக்கிறார் மிருணாள். அந்த காதலில் துல்கர் உருகுவதை விட , பின்னர் இவரே உருகிப்போகிறார், அழகோ அழகு. மிருணால், சீதா மகாலட்சுமியாக ஒவ்வொருவர் நினைவிலும் நீங்காத இடம்பிடிப்பார்.
வழக்கம் போக, ராஷ்மிகா மந்தனா மிகவும் ஸ்டைல் மற்றும் லேசான திமிரை எப்பொழுதும் கொப்பளித்து கொண்டிருக்கும் முகபாவனையுடன் வசீகரிக்கிறார். அஃரினா என்கிற பெயருடன் இந்தியா என்றாலே - இந்துக்கள் என்றாலே - அட இந்துப்பெயர்கள் என்றாலே அப்படி ஒரு வெறுப்புடன் இந்திய பேராசிரியரிடமே லண்டனில் படித்துக்கொண்டிருக்கிறார். இந்தியக்கொடியை எரிக்க வேண்டும் என்கிற வெறியில், பேராசிரியரின் காரையே தீக்கிரையாக்க, அதற்கு நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும் என்கிற நிலையில், எதிர்பாராத விதமாக ராமின் கடிதத்தை எடுத்துக்கொண்டு சீதாமகாலட்சுமியை தேடி இந்தியாவிற்கு வரவேண்டியதாகிவிடுகிறது.
ஒரு சாதாரண assignment ஆக கடிதத்தை எடுத்துக்கொண்டு கிளம்புபவருக்கு ஆச்சிரியங்களும் அதிசயங்களும் மனமாற்றங்களும் ஏற்படுகின்றன. அவரது பிரமிப்பு படம் பார்க்கும் ரசிகர்கள் வாயிலாக எதிரொலிக்கிறது.
இறுதியாக அவர் சீதாலட்சுமியை சந்தித்தாரா..? கடிதத்தை சேர்த்தாரா..? ராம் என்னவானார்..? என்று ஒவ்வொன்றும் மிகவும் சுவராஸ்யமாக, ஒவ்வொரு கட்டத்திலும் அடுத்து என்ன அடுத்து என்ன என்கிற மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் கதை பயணிக்கின்றது.
இந்திய நடிகராக இருந்து கொண்டு சில தமிழ் நடிகர்கள் ஜெய்ஹிந்த் சொல்லத்தயங்கும் காலகட்டத்தில், பாகிஸ்தான் இராணுவவீரர் கதாபாத்திரத்தையே ஜெய் ஸ்ரீராம் சொல்லவைத்திருக்கிறார் இயக்குநர் ஹனு ராகவ்புடி. காஷ்மீருக்குள், பாகிஸ்தான் இராணுவத்தின் துணையுடன் தீவிரவாதிகளை அனுப்புவது பாகிஸ்தானை சேர்ந்த இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் தான் என்பதை மிகவும் துணிச்சலாக நேர்மையாக பதிவுசெய்திருப்பதுடன், பாகிஸ்தான் உளவாளி இந்தியாவிடம் மாட்டிக்கொண்டால் அவனுக்கு கிடைக்கும் ராஜ உபச்சாரத்தையும் அதே நேரம் இந்திய உளவாளிகள் பாகிஸ்தானிடம் மாட்டிக்கொண்டால் அவர்கள் படும் கொடுமைகளையும் கெளதம் வாசுதேவ மேனன் பேசும் இயல்பான வசனங்களிலேயே வெளிப்படுத்தி விடுகிறார் இயக்குநர்
பாகிஸ்தான் ராணுவ தளபதியுடனான பாகிஸ்தானுக்கான இந்திய தூதரின் சந்திப்பு, நூர்ஜஹானை பெண் கேட்டு வரும் ஓமன் இளவரசரின் பிரதி நிதி, நூர்ஜஹான் அண்ணனுடனான சந்திப்பு, எல்லை தாண்டிய ஆப்ரஷேனுக்காக இராணுவ வீரர்களுடன் மேலதிகாரிகள் பிரகாஷ் ராஜ், கெளதம் வாசுதேவமேனன் உரையாடும் காட்சிகள் எல்லாவற்றையும் விட ராம் - மிருணாள் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் என்று ஒவ்வொரு காட்சிகளிலும் நேர்த்தியான வசனங்கள் , கம்பீரமான காட்சிப்படுத்துதல்கள் என்று அட்டகாசப்படுத்தியிருக்கிறார்கள்.
விஷால் சந்திரசேகரின் இசையில், ஒவ்வொரு பாடல்களும் இனிமை இனிமை இனிமை. 60 களில் நடக்கும் கதை என்பதால், அவ்வளவாக.. ஏன் முற்றிலுமாக ஆங்கில அல்லது பிறமொழி கலப்பே இல்லாத வசனங்கள் ஒரு பக்கம் என்றால், 80 களின் காலகட்டத்தில் நம்மை சொக்கிப்போட்ட ஏசுதாஸ், எஸ் பி பி பாடல்களை திரும்பவும் கேட்பது போல அழகு தமிழில் அற்புதமான பாடல்கள்.
சுதந்திர இந்தியாவில் , , இந்தியா முழுவதும் ஆண்டுகொண்டிருந்த சிறிய மற்றும் பெரிய அரசர்கள் ஒழிந்துபோய்விட்டார்கள், அரேபிய இஸ்லாமியர்கள் மற்றும் லண்டன் கிறுத்தவர்களால் ஒழிக்கப்பட்டு விட்டார்கள், எஞ்சியிருந்த நமது பாரம்பரிய ஜமீன்தார்களை சுதந்திர இந்தியாவில் ஆட்சியமைத்தவர்கள் ஒழித்துக்கட்டிவிட்டார்கள் சரி...ஆனால் இன்னும் இஸ்லாமிய அரச குடும்பங்கள் அவர்களின் அதே அந்தஸ்துடன் நாட்டாமை செய்துகொண்டிருப்பது ஒரு அவமானமாக படவில்லையா நமக்கு! இந்தப்படம் சில விவாதங்களை முன்னெடுத்து அதன் மூலம் பல நல்ல விஷயங்கள் நடக்குமானால் இந்தியாவின் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.
சீதா ராமம், இந்த நூற்றாண்டின் சிறப்பான படங்களுள் ஒன்றாக என்றும் நிலைத்து நீங்காப்புகழ்பெறும்!