a K.Vijay Anandh review
Juvenile diabetic – சிறார்களுக்கு வரும் நீரிழிவு நோய் குறித்து பேசியிருக்கும் வித்த்திலேயே Legend நிஜமாகவே நான் Legend ர்றா என்று சொல்லியிருக்கிறார்.
ஒரு நாட்டின் முதன்மையான வளம் என்பது மனித வளமே! தேசம் முன்னேற அந்த மனித வளம் ஆரோக்கியமாக இருக்கவேண்டியது மிகவும் அவசியம். அப்படிப்பட்ட மனித குலத்தை முடக்கிப்போடும், அதன் செயலாற்றலைக்குறைக்கும் பிரச்சினைகளுள் முதன்மையானதாக நீரிழிவு நோய் விளங்குகிறது. தினம் தினம் இன்சுலின் ஊசி எடுத்துக்கொள்வதற்கு பதிலாக ஒரே ஒரு ஊசியில் குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இறங்குகிறார் லெஜண்ட் சரவணன்.
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு நேர்ந்த கொடுமைகளை நாடறியும். அவருக்கே அப்படி என்றால், பூஞ்சோலை கிராமத்து இளம் விஞ்ஞானி சரவணனுக்கு எவ்வளவு அச்சுறுத்தல்கள் இருக்கும் அதையெல்லாம் முறியடித்து மருந்து கண்டுபிடிக்கிறாரா..? இல்லையா..? என்பதே லெஜண்ட் படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை.
லெஜண்ட் சரவணன் நினைத்திருந்தால், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற பல கல் பல கண்ணாடியாக பிரமாண்டமான ஒரு காதல், நகைச்சுவை படத்தை கொடுத்திருக்கலாம். ஆனால், வெறுமனே நடிகனாகிவிட்டால் போதாது, சமூகத்திற்கு ஒரு நேர்மறையான படைப்பை கொடுக்க வேண்டும் என்று அருமையான கதைக்களத்தை தேர்ந்தெடுத்தற்கே அவரைப்பாராட்டலாம். குடும்பத்தில் அனைவரும் விரும்பும், குடும்பத்திலும் ஊரிலும் அனைவரையும் மதிக்கும் – குறிப்பாக பெண்களை மதிக்கும் நாயகன் என்றால், நமக்கு எம் ஜி ஆர் தானே நினைவுக்கு வருகிறார்! ஒரு மாஸ் வணிக பொழுதுபோக்கு படமென்றால், இன்றும் ரஜினி தான் நினைவுக்கு வருகிறார். அதனை சரியாக புரிந்து கொண்டு எம் ஜி ஆர் – ரஜினி இருவரும் கலந்த பட பாணியில் அருமையான திரைக்கதை அமைத்து ஒரு நல்ல மாஸான பொழுதுபோக்கு படமாக லெஜண்டை கொடுத்திருக்கிறார், லெஜண்ட் சரவணன்.
அவர் ஒரு சிறந்த விஞ்ஞானியாக இருக்கிறார், ஊர்மக்கள் விரும்பும் பாசக்காரனாக இருக்கிறார், வில்லன்களை புரட்டியெடுக்கும் சூப்பர் ஹீரோவாக ஜொலிக்கிறார் – அதற்கு அவர் தாய்ச்சி எனும் தற்காப்பு கலையை தொடர்ந்து பயிற்சி செய்பவராக வருகிறார், தனது சொந்த கிராமத்தில் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொள்கிறார், இன்னொரு ஜோடி கிடைக்க வாய்ப்பிருந்தும் தனது ஒரே மனைவி அவள் தான் என்று உயரிய எண்ணத்துடன் இருந்துவிடுகிறார். இப்படிப்பட்ட ஒருவரின் உடல்மொழி இப்படித்தான் இருக்கவேண்டும் என்று இலக்கணம் இருக்கிறதா என்ன..? உலகில் 800 கோடிக்கும் அதிகமான மக்கள் இருக்கிறார்கள், ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம், அதில் லெஜண்ட் சரவணன் ஒரு ரகம். அதில் கிண்டல் கேலிகளுக்கு இடமெதற்கு?
சரவணன் என்கிற பெயரை மாற்றிக்கொள்ளவெல்லாம் இல்லை, சரவணன் ஆகவே ஜெயிப்பேன் டா என்று சவால் விட்டு இறங்கியிருப்பதுடன், அவருக்கு பிறக்கும் மகனுக்கும் வேலன் என்று அந்த தமிழ்க்கடவுள் முருகன் பெயரை வைத்து பெருமை சேர்த்துள்ளார், இத்தமிழ் மண்ணிற்கு!
வாத்துமேய்க்கும் பெண்ணாக வந்து பேராசிரியராக சரவணன் மனதில் இடம்பிடிக்கும் ஊர்வசி, அழகு!
சச்சு, விஜயகுமார், லதா என எம் ஜி ஆர் பட கதாபாத்திரங்கள். சரவணனுக்கு அண்ணனாக பிரபு, பணியாளாக விவேக், பள்ளித்தோழனாக ரோபோ ஷங்கர், நாயகியின் அப்பாவாக தம்பி ராமையா என்று ஒரு பக்கம் கிராமத்தில் பெரிய நட்சத்திரப்பட்டாளம் என்றால் இன்னொரு பக்கம் சரவணின் குருவாக நாசர், வில்லனாக சுமன், லிவிங்ஸ்டன், வம்சி கிருஷ்ணா என்று மிரட்டலான நட்சத்திரங்கள். போதாக்குறைக்கு லட்சுமி ராய் வேறு ஒரு பாடலுக்கு நடனமாடுறார். இத்தனை பெரிய ஜாம்பவான் நடிகர்களுடன் நடுவில் நிற்பதற்கே புதுமுக நடிகருக்கு சவாலான விஷயம். அதனை மிகவும் லாவகமாக கையாண்டு ஜொலித்திருக்கிறார் லெஜண்ட் சரவணன்.
தொழில் நுட்ப ரீதியாக வேல்ராஜின் ஒளிப்பதிவும் ஹாரிஸ் ஜெயராஜின் இசையும் படத்திற்கு பெரிதும் ஒத்துழைத்திருக்கின்றன. பா விஜய், கபிலன், சினேகன், மதன் கார்க்கி மற்றும் வைரமுத்து என்று அழகான வரிகளுடனான பாடல்களும் சிறப்பு.
நல்ல கதைக்கருவுடன் மாஸ் மசாலா படங்களுக்கே உரித்தான காமெடி, காதல், செண்டிமெண்ட், பழிவாங்குதல் என்று அத்தனையையும் கலந்து லெஜண்டை சிறப்பான பொழுதுபோக்கு படமாக கொடுத்திருக்கிறார்கள் இயக்குநர்கள் ஜேடி & ஜெர்ரி!