a K.Vijay Anandh review
பேப்பர் ராக்கெட், வெப் சீரிஸ் உலகில் சீறிப்பாய்ந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.
எல்லோருக்கும் நடக்கும் விஷயந்தான், ஏன் மகாத்மா காந்தி வாழ்க்கையிலேயே கூட இது நடந்திருப்பதாக படித்த ஞாபகம்.
நஷ்டத்தில் இயங்கும் கம்பெனிகளை லாபத்தில் இயங்கும் கம்பெனிகளோடு இணைப்பது , கம்பெனிகள் லாபகரமாக நடக்க அறிவுரை வழங்குவது அதன் மூலம் கோடிக்கணக்கில் அசால்டாக சம்பாதிப்பது என ஸ்மார்ட்டாக வேலை செய்யும் ஜீவா – காளிதாஸ் ஜெயராம்.
ஊருவிட்டு ஊருவந்து கை நிறைய சம்பாதிக்கும் இளைஞர்கள் வழக்கமாக அனுபவிக்கும் வாழ்க்கை – மது, மாது என்று. அந்த ஒரு நிலையில் அப்பாவின் போனை மட்டுமல்ல கன்னியாகுமரியில் வசிக்கும் அப்பாவையே மிஸ் செய்கிறார் காளிதாஸ்.
போனை எடுக்காமல் தூங்கிதால் தானே அப்பாவை இழந்தோம் என்கிற குடைச்சலே அவரை தூங்கவிடாமல் செய்ய மருத்துவர் பூர்ணிமா பாக்யராஜிடம் கவுன்சிங்கிற்கு செல்ல, அங்கே அவர் சந்திக்கும் சக நோயாளிகள் அல்லது உளவியல் தீர்வுக்காக வந்திருக்கும் தன்யா, ரேணுகா, கெளரி, கருணாகரன், நிர்மல் ஆகியோருடன் அடுத்து அவர் அடிக்கும் கூத்துதான் பேப்பர் ராக்கெட் வெப் சீரிஸ்.
கிரைம் திரில்லர், ஹாரார், இன்வெஸ்டிகேஷன் திரில்லர், சஸ்பென்ஸ் திரில்லர் போன்ற வகைகளாகவே பார்த்து பழக்கப்பட்ட வெப் சீரிஸ்களுக்கு மத்தியில் அழகான ஒரு நீண்ட கவிதை மாதிரி இந்த இணைய தொடரை எழுதி இயக்கியிருக்கிறார் கிருத்திகா உதயநிதி.
நஷ்டமடையும் நிறுவனங்களை லாபகரமாக மாற்ற ஆலோசனை தரும் காளிதாஸுக்கு வாழ்க்கையே வெறுத்துப்போனவர்களின் வாழ்க்கையை அழகாக்குவது அவ்வளவு கடினம் இல்லையே! அதற்காக எந்தவிதமான மெனக்கெடல்கள் அல்லது தேவையற்ற அறிவுரைகள் வழங்காமலேயே அவர்கள் போக்கிலேயே பயணித்து ஒவ்வொருவரின் வாழ்க்கையை மாற்றுவது இன்னும் சுவராஸ்யம்!
வசன்ங்கள் மிகவும் இயல்பாக அதே நேரம் மிகவும் கூர்மையாக எழுதியிருக்கிறார் கிருத்திகா உதயநிதி, பக்கபலமாக உதவியிருக்கிறார் அசோக். தனது அப்பாவிடம் “ என்னை நிம்மதியா வாழவிடமாட்டீங்களாப்பா.. அது என்ன அவ்வளவு கஷ்டமாப்பா..” என்று கேட்கும் வசனமாகட்டும், ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் ஒரு சிறுவன் “ திரும்ப எப்போ வருவீங்க..” என்று கருணாகரனை திரும்ப வாழவேண்டும் என்கிற முடிவெடுக்க வைக்கும் வசனம் என்று பல அனைத்து வசனங்களும் சிறப்பாக பட்டை தீட்டப்பட்டிருக்கின்றன.
கன்னியாகுமரி கடலும், திருநெல்வேலி தாமிரபரணியும், இயற்கை எழில் கொஞ்சும் மார்த்தாண்டாமும், மேகத்தை தொட்டுக்கொண்டிருக்கும் மேகமலையும், சிறப்பு வாய்ந்த செட்டி நாட்டு இல்லங்களும், பெரு நகரமான சென்னையும் ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவில் சொர்க்கங்களாக தெரிகின்றன.
ஒவ்வொரு எபிசோடிலும் ஒவ்வொரு பாடல்கள் என சைமன் கே கிங், வேத்சங்கர் மற்றும் தரன் குமார் அற்புதமான இசையை கொடுத்திருக்கிறார்கள்.
காளிதாஸின் அப்பாவாக வரும் நாகி நீடு, ஆச்சி வள்ளியம்மை வீட்டில் வரும் நடிகர்களாகட்டும், காளிதாஸின் சொந்த ஊரில் வரும் சின்னி ஜெயந்த அவரது மவன் காளிவெங்கட்டாகட்டும், கெளரியின் தாத்தா ஜி எம் குமார் ஆகட்டும் நிர்மலின் முன்னாள் காதலி செல்வி – முல்லையரசி ஆகட்டும் ஒவ்வொருவரும் மிகவும் சிறப்பாக மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
பேப்பர் ராக்கெட்டை ஜீ 5 இல் பார்க்கத்தவறாதீர்கள், தற்பொழுது ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
கிருத்திகா உதயநிதியின் இந்த பேப்பர் ராக்கெட் அனைவரின் இதயங்களையும் பதம்பார்க்கும்.
இவர் இயக்கத்தில் நடித்துவிடமாட்டோமா என்று ஏங்க வைக்கும் இயக்குநர்கள் வரிசையில் கிருத்திகா உதய நிதிக்கும் இடம் உண்டு என்றால் அது மிகையல்ல!