a K.Vijay Anandh review
மற்றவர்களை துன்புறுத்தாதவரை உன் இயல்பான குணத்தை எதற்கும் மாற்றிக்கொள்ளாதே, அதுவே உன் தேடல்களுக்கான தீர்வைத்தரும் – இது தான் குலு குலுவின் ஒருவரிக்கதையாக இருக்கலாம்.
எனக்கு ஒரு உதவி செய்யமுடியுமா என்கிற வார்த்தை சந்தாணம் காதில் எதிரொலித்துக்கொண்டிருக்கும் அளவிற்கு பார்ப்பவர்கள் எல்லோரும் அவரிடம் உதவி கேட்கிறார்கள். அவரும் தனக்கு முதலுதவி தேவைப்படும் அளவிற்கு முட்டிமோதி உதவுகிறார். முதல் பாராவில் குறிப்பிட்டது போல அந்த அவரது இயல்புதான், தனது தாய்மொழியை பேச இன்னொருவர் கிடைத்துவிடமாட்டாரா இந்த உலகில் என்கிற தேடலுக்கு தீர்வையும் தருகிறது.
அமேசன் காட்டுவாசியான சந்தாணம், தனது சிறுவயதிலேயே குடும்பத்தை இழந்து, சமூகத்தை இழந்து நாடு நாடாக பயணப்பட்டு தமிழகத்தில் வந்து சேர்கிறார். வரும் வழியில் பல நாடுகள் பல தொழில்கள் என்று வாழ்ந்தவருக்கு 14 க்கும் மேற்பட்ட மொழிகள் தெரிந்திருப்பதில் வியப்பில்லையே! ஆனாலும், தமிழ் அவருக்கு பிடித்தமொழியாக ஆகிப்போகிறது. சவப்பெட்டி செய்யும் தச்சுத்தொழிலாளியாக வாழ்க்கையை நகர்த்துகிறார். அப்படி அவர் கடந்துகொண்டிருக்கும் வழக்கமான நாட்கள், ஒரு உதவி செய்யப்போய் எப்படி விறுவிறுப்பான நாளாக மாறுகிறது என்பதே சுவராஸ்யமான திரைக்கதை.
கே ஜி எஃப் யஷ் – லோகேஷ் கனகராஜின் விக்ரம் கலந்து பெற்ற குழந்தையாக இப்பட்த்தில் சந்தாணம் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் என்றால் அது மிகையல்ல. ஸ்டேண்ட் அப் காமெடியில் இருந்து காமெடி நடிகர் – கதாநாயகன் என்று உயர்ந்தவருக்கு இந்த கூகுள் கதாபாத்திரம் ஒரு உச்சம் எனலாம். இதற்கு மேல் அவர் என்ன செய்யப்போகிறார் என்பதே ஒரு சவால் தான் அந்தளவிற்கு இந்த கதாபாத்திரத்தை வடிவமைத்துள்ளார் ரதனகுமார்.
துளி சறுக்கிவிடாமல், சந்தாணமும் அதில் அட்டகாசமாக நடித்து பெயர் வாங்கியிருக்கிறார்.
இன்னொரு பக்கம் சொத்துக்காக அல்ல, செத்துப்போன சொந்த அப்பாவை காண இந்தியா வருகிறார், அதுல்யா சந்திரா. அவரை தீர்த்துக்கட்ட அவர் அண்ணன் ராவத் அனுப்பும் இலங்கையன் ஜார்ஜ் சகோதரர்கள் ஆள் மாற்றி ஒருவரை கடத்திவிட அதைத்தொடர்ந்து விறுவிறுப்பான சம்பவங்களாக திரைக்கதை பயணிக்கிறது. என்னது பப்ஜி விளையாடுல தோற்கடிச்சா சீனப்பெருஞ்சுவர் தாண்டி வந்து பழிவாங்குவீங்களாடா..? சுவராஸ்யமான கற்பனை.
நாங்களும் வேற மாரி வேற மாரி என்கிற மாதிரி, இப்படி ஒரு திரைக்கதையை படமாக்கியிருக்கிறார் ரதனகுமார். இந்த லோகேஷ் கனகராஜ் & கோ விற்கு எப்படி இவ்வளவு விதவிதமான ஆயுதங்கள் குறிப்பாக துப்பாக்கிகள் கிடைக்கின்றது..? இன்னும் இரண்டு மூன்று படங்களில் இது தொடர்ந்தால் NIA வின் விசாரணை வளையத்திற்குள் வந்துவிடுவார்கள் போல, அந்தளவிற்கு படத்திற்கு படம் ஆயுதங்களை இறக்குகிறார்கள்.
கடைசி காட்சியில் தான் கதாநாயகனும் கதாநாயகியும் என்கிற விஷயமே காட்சிப்படுத்தப்படுகிறது. இந்த உலகில் தனது மொழி அழிந்துவிடாது என்கிற நம்பிக்கைய தரும் மகிழ்ச்சியும் – நம் தாய்மொழியை பேச இன்னொருவர் இருக்கிறார் என்கிற மகிழ்ச்சியும் ஈடு இணையில்லாதது. அப்படி ஒரு மிகவும் வித்தியாசமான கிளைமாக்ஸ், அனுபவிங்க ஆச்சிரியப்படுவீங்க!
குலு குலு - தாய்மொழிக்கான பயணம்!
பிகு: படத்திற்கு டைட்டில் கொடுத்து உதவிய அந்த ஆங்கில ஆசிரியையை தேடிச்சென்று ஒரு நல்ல ஆங்கில வகுப்பில் சேர்த்துவிடவேண்டியது அல்லது ஒரு ரெபிடெக்ஸ் ஸ்போக்கன் இங்கிலீஷ் புத்தகமாவது வாங்கிகொடுக்க வேண்டியது குலுகுலு குழுவினரின் தார்மீக கடமை என்றால் அது மிகையல்ல.