a K.Vijay ஆnandh review
நகைச்சுவை ஜாம்பவான் நாகேஷின் ஊரான தாராபுரத்தில் இருந்து வந்து, சமகால நாகேஷ் என்று சொல்லுமளவில் வலம் வரும் சந்தானத்தை வைத்து சபாபதியை இயக்கியிருக்கிறார் ஆர்.ஸ்ரீனிவாச ராவ்.
காலேஜ்ல அரியர் வை, அப்பாவைக் கலாய், அம்மா தங்கச்சி கூட சண்டைபோடு ஆனால், வாழ்க்கையில் நேர்மையாக இருந்துவிடு. அப்படி இருந்துவிட்டால், கிடைக்கவேண்டிய நேரத்தில் உனக்கு கிடைக்கவேண்டியதும் கிடைக்கும், சிறு வயதில் நீ இழந்ததும் பல மடங்காக திரும்பக்கிடைக்கும், இது தான் சபாபதி.
ஹீரோவாக நடிக்க ஆரம்பித்ததிலிருந்து, மிகவிரைவாகவே வித்தியாசமான களங்களில் களமாட ஆரம்பித்துவிட்ட சந்தானம், இந்தப்படத்தில் திக்குவாய் சபாபதியாக நடித்திருக்கிறார். நமது கோயில்கள், பண்டிகைகள் என்று இவராவது காட்சிப்படுத்துகிறாரே என்று சந்தோஷப்பட்டுக்கொள்ளலாம். பாரிஸ் ஜெயராஜ் முதல் இவருக்கு இவரையையும் அறியாமல் கமல்ஹாசன் ஸ்டைல் தொற்றிக்கொண்டிருக்கிறது என்பதை மறுக்க இயலாது. பாரிஸ் ஜெயராஜில் ஒரு பாடல், உன்னை நினைச்சேன் ... சாயலில் அமைந்திருக்கும். டிக்கிலோனாவில், பேரு வைச்சாலும்... என்று கமல்ஹாசன் பாடலையே வைத்திருப்பார். இதில் காதலா காதலாவில் திக்குவாய் பிரபுதேவாவை கலாய்க்கும் கமல்ஹாசனின் ஸ்டைலும், தசாவதாரம் படத்தில் வரும் முகுந்தா முகுந்தா.. பாடலையொத்த நவராத்திரி பாடலும் இதற்கு சான்றுகள். கமல்ஹாசனை பார்த்து காப்பியடிக்கிறார் என்று சொல்லவில்லை, படத்திற்கு படம் மாறுபட்ட சவாலான கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்கும் அவரது கலை வழி இவருக்கும் ஒட்டிக்கொண்டிருக்கிறது, கலாம். பாரிஸ் ஜெயராஜை பார்த்துவிட்டு, இந்த சென்னை கானா களத்தை கமல்ஹாசன் எப்படி மிஸ் பண்ணினார் என்று குறிப்பிட்டிருந்தேன்.
படம் முழுவதும் திக்கி திக்கி பேசிக்கிட்டே இருப்பாய்ங்களோன்னு பார்த்தால், திகட்ட திகட்ட காமெடிகளால் வயிறு குலுங்க சிரிக்கவைத்திருக்கிறார் சந்தானம். குறிப்பாக அப்பா எம்.எஸ் பாஸ்கருடன் இவர் செய்யும் அதகளம், அட்டகாசம், எம்.எஸ்.பாஸ்கர் மட்டும் என்ன தொக்கா என்பதுபோல, படம் முழுவதும் சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டு சந்தானத்துடன் சேர்ந்து அல்லது சந்தானத்தினால் இவர் தனியாக செய்யும் ஒரு ஆவர்த்தனங்களையும் ரசிக்க முடிகிறது.
மதுரை முத்து, புகழ் ஆகியோரை இன்னும் சிறப்பாக பயன்படுத்தியிருக்கலாம். வழக்கம்போல மயில்சாமி ஒரே ஒரு காட்சியில் வந்தாலும், கலகலக்க வைத்துவிடுகிறார்.
படத்தின் ஆரம்பக்காட்சிகளின் சுவராஸ்யத்தையும் வேகத்தையும் இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தியிருக்கலாமோ என்று தோன்றாமல் இல்லை.
ஒரு காலத்தில் திருச்சியில் சின்னப்பையன்களிடமெல்லாம் திருடும் கேவலமான ஜேப்படி திருடனாக வலம் வந்து இன்று பெரிய அரசியல்வாதியாக ஆகியிருக்கும் சாயாஜி ஷிண்டேயின் சூட்கேஸ் காணாமல் போவதில் இருந்து படமும் வேகம் எடுத்துவிடுகிறது. லக்கியான ராஜா ஒருவர் இருக்காரு இருந்தாலும், நல்ல வேளையாக லக்கிராஜா என்கிற பெயரில் நம்மூரில் எந்த அரசியல்வாதியும் இல்லை, இருந்தாலும் அது என்னுடைய கதாபாத்திரம், அனுமதியில்லாமல் எடுத்துவிட்டார்கள் என்று கேஸ்போடவும் முடியாது.
தங்கச்சி வைஷ்ணவிக்கு இருக்கும் காட்சிகளைவிட காதலி பிரீதா வர்மாவுக்கு காட்சிகளை கொஞ்சமாக வைத்துவிட்டாரோ டைரக்டர் என்று தோன்றும் அளவிற்கு, இருக்கிறது.
இப்படித்தான் நம்மூரில் ஆறுகளை இலவச டாஸ்மாக் பார்களாக ஆக்கிவைத்திருக்கிறார்கள் என்றாலும், காவிரியில் அமர்ந்துகொண்டு சரக்கடிக்கும் அந்தக்காட்சிகள் அதுவும் கொஞ்சம் நீளமாகவே இருக்கும் காட்சிகள் சங்கடபடுத்துகின்றன.. படங்களில் ராஜ்கிரண் பேசுவது போல சொல்வதானால், நல்லவேளை தக்காளி கூவத்தையும் அடையாறையும் சாக்கடையாக்கிட்டாய்ங்க, இல்லையென்றால் இரு ஆறுகளிலும் இல்லை இல்லை இல்லை இரு சாக்கடைகளிலும் பிளாஷ்டிக் டம்பலர்களும், குவார்டர் பாட்டில்களுமாக நிறைந்திருக்கும்.
பிறப்பில் குறையிருக்கலாம், குணத்தில் குறையிருக்கக்கூடாது என்கிற ஒரு நேர்மறையான சிந்தனையை விதைக்கும் படமாக சபாபதியை கொடுத்த விதத்தில் இயக்கு நர் ஆர்.ஸ்ரீனிவாசன ரவையும் , ஒத்துக்கொண்டு இக்கதையில் நடித்த விதத்தில் சந்தானத்தையும் , தயாரித்த விதத்தில் தயாரிப்பாளர் சி.ரமேஷ் குமாரையும் பாராட்டலாம்.