a K.Vijay Anandh revirew
தீதும் நன்றும் பிறர் தர வாரா...இதன் முதல் பாதி தான் படத்தின் தலைப்பு எனினும் மொத்த கதையும் எளிதாகப் புரிந்துவிடுகிறது தானே!
ராசு ரஞ்சித், ஈசன், சந்தீப் ராஜ் மூவரும் திட்டமிட்டு சிறு சிறு திருட்டுகள் செய்து வாழ்க்கையை ஓட்டும் வடசென்னை இளைஞர்கள். அதில் ராசு ரஞ்சித்தின் காதலியாக லிஜோமோல் தாஸ், ஈசனின் காதலி – மனைவி யாக அபர்ணா பாலமுரளி ஆகியோர்.
ஒரு டாஸ்மாக் கடை திருட்டு, மூவரின் வாழ்க்கையை யும் எப்படி புரட்டிபோடுகிறது என்பதே தீதும் நன்றும்.
முற்றிலும் புதிய நடிகர்களை வைத்து எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும், முத்தமிழின் பாடல் வரிகள், சி சத்யாவின் இசை குறிப்பாக கெவினின் ஒளிப்பதிவு என்று ஒரு நேர்த்தியான படமாக தீதும் நன்றும் வெளியாகியிருக்கிறது.
உள்ளதை உள்ளபடி சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக திருட்டுப்பயல்களைக் காதலித்தாலும் அதிலேயே உறுதியாக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் வாழ்க்கையையும் மாற்றி தங்களது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்ளலாம் என்கிற அளவில் வாழும் அப்பாவியான அந்த நாயகிகள், ஒருவர் வலிகளை அதிகமாக வெளிப்படுத்தியும் ஒருவர் அமைதியாக இருந்தும் அசத்திவிடுகிறார்கள்.
அட, இப்படியெல்லாமா நடக்கின்றது என்று பயமுறுத்த வைக்கிறது இரண்டாம் பாதியில் காட்டப்படும் சிறுமியர் கடத்தல்.
ஒட்டுமொத்த இளைஞர்களின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பால் தான் ஒரு தேசம் உயரமுடியும். இப்படத்தில் காட்டப்படுவது போன்ற இளைஞர்கள் தேசத்தில் உள்ள ஒவ்வொரு ஊர்களிலும் இருக்கிறார்கள். அவர்களுக்கென்று ஒரு பொருளாதார வழியை உருவாக்கி தவறான வழிகளில் செல்வதை அரசு நிர்வாகம் தடுக்க வேண்டும் என்கிற செய்தி சொல்லாமல் விளங்குகிறது.
இரண்டாம் பாதியில், கிளைமாக்ஸுக்கு முன்பிருந்து கதையிலும் காட்சியோட்டத்தின் நீளத்திலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம், எடிட்டராகவும் நாயகனாகவும் இயக்குநராகவும் பணியாற்றியிருக்கும் ராசு ரஞ்சித்!
மகிழ்ச்சியோ துக்கமோ நமது வினைகளே நமக்கு எதிர்வினைகளாகி அவற்றை பரிசளிக்கின்றன, எந்த வினையாற்ற வேண்டுமென்பதை ரசிகர்களுக்கே விட்டுவிடுகிறார்கள்!