a K.Vijay Anandh review
துருவா சர்ஜாவின் , சிறுவயது மற்றும் வளர்ந்த பிறகான கதாபாத்திரத்திற்கேற்ற உடல்மொழியைக் கொண்டு வந்ததின் மெனக்கெடல்களும், பேச ஆரம்பித்தாலே நீண்ட வசனங்களை சுருதி சுத்தமாக வசன ஏற்ற இறக்கங்களுடனும், ஏற்ற முகபாவனைகளுடனும் அசால்ட்டாக பேசுவதும், அம்மாவுக்காக உருகுவதும், தங்கையின் அன்பில் நெகிழ்ந்து மனம் மாறுவதும், இறுதியாக தன் வளர்ப்பு தந்தையை தந்தையாக ஏற்றுக் கொள்வதிலுமாகட்டும் இவ்வளவு சிறிய வயதிலும் செம திமிராக டன் கணக்கில் சுமைகளை தூக்கி செம கெத்து காட்டுகிறார்.
ராக்ஷிமிகா மந்தனா, துருவா சர்ஜா என்கிற ஆக்ரோஷமான சிங்கத்தின் பிடியில் சிக்கிக் கொண்ட மானாக படம் முழுவதும் வந்து கடைசியில் அந்த சிங்கத்தையே சிறைப்பிடித்து விடுகிறார்.
படத்தில் கையாளப்பட்ட அம்மா செண்டிமெண்ட், மறுதாரம், அந்த அப்பாவின் மகளை தங்கையாக ஏற்றுக் கொள்வது, தன் தந்தையைக் கொன்றவனை உண்மைகள் எதுவும் தெரிந்திருக்காத நிலையிலும் ஏதேச்சையாக துருவாவே கொல்வது என்கிற அழகான கதைக்களம் அருமை தான் என்றாலும், பிராமணர்களை வில்லனும் அவர்கள் தோள் மீது ஷூ காலை வைத்து இழிவு படுத்துகிறான் - அதுவும் அவர்கள் யாக பூஜையில் இருக்கும் போது, நாயகனும் ராக்ஷ்மிகா மந்தனாவை காதலிக்கிறேன் பேர்வழி என்று இழிவுபடுத்துகிறார். இந்தக் காட்சிகள் படத்தின் பெரும்பகுதியை ஆக்ரமித்துக் கொள்வது துரதிஷ்டமே!
இந்த உலகில் உறவுகளுக்கெல்லாம் தலையாயது அம்மா என்கிற உறவு, அப்படிப்பட்ட அம்மா உயிரோடு இருந்தும் அவளது அரவணைப்பு கிடைக்காத பிள்ளை எந்த உச்சத்திற்கும் செல்வான் என்பதே படத்தின் மையக்கரு.
அந்த மையக்கருவை உருவாக்கிய இயக்குநர் நந்தா கிஷோர் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள்!