a K.Vijay Anandh review
ஆன்லைன் ஹேக்கிங்கை அடிப்படையாக வைத்துப் பின்னப்பட்ட கதைக்களம்.
ஒரு காலத்தில் காக்கிசட்டை என்றால் அது கேப்டன் விஜய்காந்த் தான். அதேபோன்று, இராணுவம் என்றாலே, இங்கே விஷால் தான். அவர் அந்த சீருடையை போட்டபிறகு இனி வேறு யாருக்கும் அது ஃபிட் ஆக வாய்ப்பே இல்லை எனும் அளவிற்கு ஆஜானுபாகுவாக அதிரடி காட்டி விடுகிறார்.
ஆன்லைன் ஹேக்கிங் மூலமாக செய்யப்படும் திருட்டாகவே இருந்தாலும், அது முழுக்க முழுக்க மனிதர்களால் தான் நிகழ்த்தப் படுகிறது, அதாவது மேனுவலாக.
மகாவும் அவரது சகோதரரும் தங்களது அக்கா ரெஜினா மூளைக்கு கட்டுப்பட்ட மனித ரோபோட்டுகளாக அவரது கட்டளையை - ரெஜினா போட்டுக்கொடுக்கும் ஸ்கெட்சை கச்சிதமாக நிறைவேற்றுகிறார்கள்.
போலீஸ் அலர்ட் ஆன பிறகும் திட்டமிட்டபடி திருட முயன்று மொத்த கும்பலும் மாட்டிக் கொள்வதில் கொஞ்சம் சுவராஸ்யம் குறைந்துவிடுவதை தவிர்க்க இயலவில்லை.
பரம் வீர் சக்ரா - கே ஆர் விஜயா - மூன்று தலைமுறை இராணுவத்தினர் - என்கிற எபிசோடு குறைவாகவே வந்தாலும் அது தான் மொத்த படத்திற்கும் உயிராக அமைந்திருக்கிறது. சீனியர் சீனியர் தான் என்கிற அளவிற்கு, இரண்டு மூன்று காட்சிகளேயே நடித்தாலும் அழுத்தமாக நடித்து நடிப்பென்றால் என்ன என்று காட்டி விடுகிறார் கே ஆர் விஜயா.
பாட்டிக்கு பயப்படும்படி ஒன்றுமில்லை என்று நாயகி ஷ்ரத்தா சொல்லிக் கொண்டிருக்கும் போது, எனக்கு அந்த பதக்கம் தான் முக்கியம் அதை மீட்கனும் என்கிற விஷால், உயர்ந்து நிற்கிறார்.
சிரிப்பதற்கு துளி இடமில்லாமல் சீரியசான காவல்துறை அதிகாரியாக விரைப்பு காட்டுகிறார் ஷ்ரத்தா..
டிஜிட்டல் இந்தியா அல்ல, இன்று சர்வதேசமே டிஜிட்டல் மயத்தில் - இணைய வலைக்குள் தான் விழுந்து கிடக்கிறது. அதனை எவ்வளவு பாதுகாப்பாக கையாள வேண்டும் என்கிற விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் படத்தின் நோக்கம். இயக்குநர் எம்.எஸ்.ஆனந்தன், இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் மெனக்கெட்டிருந்தால், சக்ரம் Ginat Wheel அளவிற்கு பிரமாண்ட வெற்றியை எட்டியிருக்கும்..