a K.Vijay Anandh review
உலகத்தரமான படங்களை நம்மாலும் கொடுக்க முடியும் என்று காட்டியிருக்கிறார்கள் கமலி from னடுக்காவேரி குழுவினர்.
என்னதான் பெண் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி பல்வேறு தரப்பிலும் இருந்து பேசவும் வலியுறுத்தவும் ஆரம்பித்துவிட்டாலும், கிராமப்புறங்களில் அதுவும் பொருளாதார ரீதியாக முன்னேறிய குடும்பங்களில் கூட பெண்களுக்கான கல்வியில் சமரசம் செய்துகொள்வது நடந்துகொண்டுதான் இருக்கிறது.
வீட்டில், ஒரு ஆண் பிள்ளை இருந்துவிட்டாலோ, பெண்குழந்தைக்கான வாய்புகள் முற்றிலும் மறுக்கப்படவே செய்கிறது. அல்லது, ஒரு குறைந்தபட்ச வாய்ப்பு மட்டுமே வழங்கப்படுகிறது.
அப்படி ஒரு சூழ் நிலையில் இருந்து தனக்கான வாய்ப்பை தானே உருவாக்கி அதில் உச்சம் தொட்டு ஒட்டுமொத்த பெண் குழந்தைகளுக்கும் முன்னுதாரணமாய் திகழ்கிறார் கமலி - கமலியாக நடித்திருக்கும் ஆனந்தி.
அட பத்திரிக்கையாளர் காட்சியில் இயக்கு நர் சொன்னது சரிதான். இந்த கதாபாத்திரத்திற்கு ஆனந்தியை விட பொருத்தமான நடிகையைத் தேர்வு செய்வது கடினம் தான்.
அதே ஹைட்டு வெயிட்டுதான், ஆனால் பள்ளிச் சீருடையில் இருந்து ஐ ஐ டி மாணவி வரையிலான ஆனந்தியின் உடல்மொழி பிரதிபலிப்புகள் அபாரம்.
ஒரு தலைக்காதல் தான் ஒரு காரணியாக இருந்தாலும், சற்றே இடறிப் பின் சுதாரித்து, ஒரு கட்டத்தில் அதனைத் தூக்கிப்போட்டுவிட்டு கல்வியில் சாதித்து, தனது கல்லூரிக்கும், குடும்பத்தினருக்கும், ஊருக்கும் பெருமை சேர்க்கிறார், கமலி.
தோற்றத்திலும் வசீகரம், அறிவிலும் - கல்வியறிவிலும் நிறைகுடமாக வந்து அசத்தியிருக்கிறார் ரோகித் ஷெரப்.
தோழிக்காக எதைவேண்டுமானாலும் செய்யும் ஸ்ரீஜா, பிரதாப் போத்தனை, ஆனந்திக்கு கோச்சிங் கொடுக்க ஒத்துக் கொள்ள வைக்கும் சேட்டைகளில் ஆரம்பித்து அனைத்தையும் சிறப்பாக செய்திருக்கிறார்.
இந்தப்படத்தின் நாயகன் என்றால் அது பிரதாப் போத்தன் தான். ஓய்வு பெற்ற பேராசிரியராக கிராமத்து மாணவி ஆனந்தியை ஐ ஐ டிக்கு அனுப்பிய பெருமிதத்துடன் அமரும் காட்சியில் பல ஓய்வுபெற்ற பேராசிரியர்க்களுக்கு ஒரு உந்துதலை ஏற்படுத்திவிடுகிறார்.
தான் வாங்கிய பட்டங்களோ விருதுகளோ அல்ல பெருமை, ஒரு நல மாணவியை உருவாக்குவது தான் ஒரு நல்லாசிரியரின் பெருமை என்பதை, பிரதாப் போத்தன் கதாபாத்திரம் வாயிலாக உணர்த்துகிறார் இயக்கு நர் ராஜசேகர் துரைசாமி.
இமான் அண்ணாச்சி, அழகம்பெருமாள், ரேகா சுரேஷ் ஆகியோர் அவரவர் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். இமான் அண்ணாச்சி, ஒரு யதார்த்தமான ஆசிரியராக வலம் வந்து காமெடி மட்டுமல்ல குணச்சித்திரங்களும் எனக்கு வரும்லே என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.
இசை, ஒளிப்பதிவு என்று அனைத்துமே நிறைவாக இருக்கிறது. எந்த இடத்திலும் இது மெயின் ஸ்ட்ரீம் சினிமாவில் இருந்து விலகிவிடாதபடியான தொழில் நுட்பம்.
பிரின்ஸ் கிடைக்காத சிண்ட்ரெல்லாவாக மற்றவர்களால் கிண்டல் செய்யபடும் ஆனந்தி, அதே அடைமொழியால் ஜெயித்து கல்லூரிக்கே பெருமை தேடித்தருகிறார்.
இந்த இடத்தில், கல்வியின் பெருமையை மட்டும் சொல்லியிருக்கவில்லை இயக்குநர். சினிமா அறிவும் பொது அறிவே என்பது மாதிரியான காட்சியமைப்பை அவரையறியாமலே செய்து, அந்த திரைக்கதை அமைப்பையும் அழகாக முழுமையாக்கியிருப்பதுடன், நடுவில் குங்குமம் ஆனந்தவிகடன் போன்ற பத்திரிகைகள் கொண்டு வந்திருப்பதாக காட்சி அமைத்த விதமும் அருமை.
நல்ல படமாகவும் கொடுத்து, சினிமாவையும் சினிமா சார்ந்த செய்திகளையும் பெருமைப்படுத்தியிருக்கிறார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஒன்றுக்கு குறி வைத்திருக்கலாம், இன்னொன்று போனஸாகக் கிடைத்திருக்கலாம்!
பெண் குழந்தைகள் மட்டுமல்ல, ஆசிரியர்களும் குறிப்பாக ஓய்வு பெற்ற ஆசிரியர்களும் பார்க்க வேண்டிய படம்!
இப்படி ஒரு படத்தை தயாரிக்க முன்வந்திருக்கும் தயாரிப்பாளார்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள்!
நல்ல சினிமாவே எடுக்கமாட்டேங்கிறாய்ங்க என்று ஆதங்கப்படும் ரசிகர்களுக்கு இந்த வாரப்பரிசு, கமலி from நடுக்காவேரி