a K.Vijay Anandh review
ஒரு சுவராஸ்யமான கதை, அதை கேட்பவர்கள் மெய்மறந்து கவனிக்கவேண்டும் என்றால், அதற்கு கதையை கொஞ்சம் முன்னப்பின்ன என்கிற அளவிலோ அல்லது சிலவற்றை அப்ப்பட்டமாகச் சொல்லிவிடாமல் கிளைக்கதைகளாகவோ சொல்லவேண்டும். அப்படி சொல்வதில் தவறே இல்லை, எப்படியிருந்தாலும் இறுதியில் உண்மை வெளிப்பட்டுவிடத்தானே செய்கிறது.
காட்சிப்படமாக திரையில் விரியும் போது, கதாபாத்திர வடிவமைப்புகளும் அதில் நடிக்கும் நடிகர்களின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானது. அந்த வகையில், வெங்கடேஷ் மகா கதை எழுத, சேகர் நீலன் வசனங்கள் எழுத அற்புதமாக இயக்கியிருக்கிறார் ஹேமம்பர் ஜஸ்தி.
பொதுவாக காதல் கதைகளில் தடைகளைத் தாண்டி காதல் வெற்ரிபெற்று கல்யாணத்தில் முடியும் கிளைமாக்ஸில், முதலிரவில் இருவரும் கட்டிப்பிடித்துபுரள்வது தான் இறுதி ஷாட்டாக இருக்கும்.
இப்படத்தில், ரசிகர்களுக்கு தெரியப்படுத்த வேண்டியதையெல்லாம் தெரியப்படுத்தி விட்டு, அப்படியே இருபக்கமாக புரண்டு படுத்துக் கொள்கிறார்கள் காதலர்கள், காதலில் ஜெயித்தவர்கள்.
தீபன், வெற்றி உள்ளிட்ட அத்தனை நடிகர்களின், முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் மட்டுமல்ல துணை கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்கள் அனைவருமே அட்டகாசமான இயல்பான நடிப்பால் நம்மை கட்டிப் போட்டுவிடுகிறார்கள்.
பாட்டு புத்தகம், திறந்த வெளி உடற்பயிற்சி கூடம் - கர்லா கட்டை - டாஸ்மாக்குக்கு முந்தைய சாராயக்கடை என்று ஆங்காங்கே நமக்கு சில Cule க்களை அள்ளித் தெளித்த இயக்கு நரின் நேர்மையை பாராடினாலும், இறுதிக் காட்சியில் தான் நாம் ஏமாந்தது - அதாவது நம்மால் யூகிக்க முடியாமல் போனது தெரியவரும்.
குழந்தையிடம் ஏமாந்து மகிழும் குதூகலம்.
அட அது என்னங்கடா 90S, 2K Kids காதலிக்கிறவன் எல்லா பத்தாண்டுகளிலும் இருந்துக்கிட்டுதான்டா இருக்காய்ங்க.
நல்லாவா படம் எடுக்கிறாய்ங்க, அதான் திருட்டுத்தனமாக படம் பார்க்கிறோம் என்கிற சப்பைக்கட்டெல்லாம் இந்தப்படத்திற்கு எடுபடாது. இதுவரை அப்படி படைப்பாளியின் உழைப்புகளைத் திருடி படம் பார்த்த ஒட்டுமொத்த பாவங்களையும் போக்கவேண்டுமானால், C/O காதல் படத்தை திரையரங்கில் சென்று பாருங்கள்.
C/O காதல் நல்ல சினிமாவுக்கான முகவரி