a K.Vijay Anandh review
பொழுதுபோக்கில் துளி சமர்சத்திற்கு இடமில்லாமல் ஒரு காம்பேக்ட் பிலிம் மேக்கிங் எப்படி இருக்கவேண்டும் என்று இயக்கி காண்பித்திருக்கிறார் டென்னிஸ் மஞ்சு நாத்.
இன்னொரு வகையில் இப்படத்தைப் பற்றி கூறுவதானால், ஒரு திகில் படத்தை யோகிபாபு-கருணாகரன் கூட்டணியின் திகட்டத்திகட்ட காமெடி படமாக கொடுக்க முயன்று ஜெயித்தும் இருக்கிறார்கள்.
நாயகன் பிரவீன் குமார் - அட ஹீரோ வந்துட்டார்ப்பா என்று கிளைமாக்ஸ் காட்சியில் யோகிபாபு கூறும் போது தான் இவர் தான் ஹீரோ என்றே தெரிகிறது - அந்த அளவுக்கு இயல்பாக நண்பர்களுடன் நண்பராக - கூடவே சுனைனாவுடன் காட்டிற்கு பயணமாகிறார்கள்.
அங்கே, ஒரு ஆய்வுக்கூட விளைவாக நர்மாமிசம் உண்ணும் நபர்கள் வசிக்க, அவர்களிடம் மாட்டிக் கொண்டு மாண்டவர்கள் போக எஞ்சியவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே டிரிப் படத்தின் ஒரு வரிக்கதை.
நரமாமிசம் சாப்பிடுபவர்கள் அங்கே வசிக்கிறார்கள் என்று கேள்விப்படும் அந்த நொடியில் சிகப்புக்கறையுடன் காட்சி தரும் யோகிபாபுவும் கருணாகரனும் தான் அந்த நரமாமிசம் சாப்பிடும் காட்டேரி மனிதர்கள் என்று சுனைனா நினைக்க ஆரம்பிப்பதில் இருந்து தொற்றிக் கொள்ளும் சுவராஸ்யத்தை படம் முழுவதும் கடத்தியிருக்கிறார்கள்.
என்னதான் பழகிய நாயாக இருந்தாலும், அதனுடன் கட்டிப்புரள்வதற்கு ஒரு துணிச்சல் வேண்டும், அந்த வகையிலும் இரண்டு மூன்று நாட்களில் முடியும் இப்பயணத்தில் ஒரே உடையில் நடித்திருக்கும் வகையிலும் சுனைனா உட்பட நடிகர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே.
அத்துடன், காடு, மலை, பிரமாண்டமான நீர்வீழ்ச்சி என்று கரடுமுரடான இடத்தில் பயணித்து படத்தை ஒளிப்பதிவு செய்திருக்கும் உதயஷஙகர் உள்ளிட்ட தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் ஒரு சபாஷ்
சாதாரண மனிதராக விஞ்ஞான உதவியாளராக பணியாற்றும் போது கொஞ்சம் வழுக்கைத் தலையுடன் காட்சிதரும் மேக் மணி, நரமாமிசம் சாப்பிட ஆரம்பித்த பிறகு அடர்த்தியான தலைமுடியுடன் காட்சிதருகிறார். நரமாமிசம் அதாவது மனிதக்கறி உண்டால் வழுக்கைத்தலையிலும் முடிவளரும் என்று படம் பார்ப்பவர்கள் நம்ப ஆரம்பித்துவிடக்கூடாது என்று பிரார்த்திப்போம். அப்புறம் அடுத்த ஆறேழு மாதங்களுக்குள் பாதி மக்கள் தான் மிஞ்சுவார்கள் இப்பூமியில்.
இதுபோன்ற சின்னச்சின்ன கவனக்குறைவுகள் படத்தில் இருக்கவே செய்கின்றன.
முன்பே குறிப்பிட்டதுபோல, நகைச்சுவையை மட்டுமே பிரதானப்படுத்தியிருப்பதால், திகில் படத்திற்கான பிரத்யேக முயற்சிகள் - காமரா கோணங்கள் - ஆகியவற்றில் மெனக்கெடவில்லை தான் எனினும் - சலிப்புத்தட்டாத அனுபவத்தை கொடுக்கிறது இந்த டிரிப்.
டிரிப் 2 வை, சரியாகத் திட்டமிட்டுவிடுங்கள் டென்னிஸ் மஞ்சு நாத்.