a K.Vijay Anandh review
சூப்பர் குட் பிலிம்ஸின் 90 ஆவது படம், களத்தில் சந்திப்போம். 50 க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களை அறிமுகப்படுத்தி, தமிழ் சினிமா ரசிகர்களுக்குக் கடந்த 30 வருடங்களாக ஜனரஞ்சகமான படங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்நிறுவனத்திடமிருந்து, குடும்பங்களாக திரையரங்குகளுக்கு படையெடுக்க வைக்கும் படமாக, இந்தப்படம். கதை தேர்வு என்றால், இப்படி இருக்க வேண்டும் என்று சொல்லத்தக்க வகையில், மிகவும் கண்ணியமான பொழுதுபோக்கு இப்படம் எந்தளவுக்கு என்றால், மற்றபடங்களில் ஒரு குவார்டர் சொல்லு மச்சி என்று கேட்டு வாங்கி சரக்கடிக்கும் ஜீவா, இந்தப்படத்தில் ராதாரவி வாலண்டியரா சரக்கு வாங்கி கொடுத்தும், அட அந்த டேபிள் பக்கம் கூட திரும்பாமல் இன்னொரு பக்கம் திரும்பி உட்காருகிறார் அந்தளவுக்கு கண்ணியமான படம்.
படத்தின் ஒன்லைன் அதாவது ஒருவரிக்கதை என்று பார்த்தால், ஒன்று இல்லை இரண்டு, மூன்று ஒருவரிக்கதைகளை சுவராஸ்யமான திரைக்கதையுடன் கொடுத்திருக்கிறார்கள் இயக்குநர் ராஜசேகர் மற்றும் வசனகர்த்தா அசோக் கூட்டணி.
யாருக்கு வாக்கு கொடுத்திருக்கோம்கிறதை விட யார் நம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கு விசுவாசமாக இருந்துவிடுவது என்பது ஒரு ஒருவரிக்கதை. இதை, படத்தின் கிளைமாக்ஸில் கொண்டு போய் வைத்திருக்கும் உக்தி அற்புதம்.
மற்ற இரண்டும், இப்படி இருக்குமோ என்று ஊகிக்க வைக்கும் ஒரு வரிக்கதைகள்.
இன்னொரு ஒருவரிக்கதை, அட அதை முதல் காட்சியிலேயே வைத்து விடுகிறார்கள்.
திமுக, அதிமுகவிடம் தோற்கலாம், அதிமுக, திமுகவிடம் தோற்கலாம், ஆனால், இருவரும் இணைந்து இன்னொருவரிடம் தோற்றுவிடக்கூடாது என்கிற கடந்த 60 ஆண்டு தமிழக அரசியலை அசோக் – ஆனந்த் நட்பில் வைத்து ஜமாய்த்திருக்கிறார்கள். இன்னொரு முக்கியமான விஷயம், தவறுதலாக தமிழகம் யார் கையிலாவது அடமானமாகப் போய்விட்டால் இருவரும் கூட்டணி வைத்தாவது, அதாவது ஒரே அணியில் இருந்தாவது மீட்டு விடுவார்கள் இதனை மூன்றவாது ஒருவரிக்கதையாகக் கூட கருதிக் கொள்ளலாம் – இது தமிழகத்தின் எதிர்கால அரசியலாக இருக்கலாம்.
ஒரே கொள்கை தான் – இரண்டு வீட்டிலும் திருமணம் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள் – ஒற்றுமையாகவே இருந்துவிடுங்களேன் என்று அப்பச்சி ராதாரவி அட்வைஸ் செய்யும் போது, ஈவெரா, அண்ணாத்துரை ஆகியோர் நினைவுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே காமராஜர் ஆசப்பட்ட அசைவ சாப்பாடு – இரண்டு அவித்த முட்டை – என்று ரூட்டை மாற்றிவிடுகிறார்கள் போலும்.
ஆக, மூன்று ஒருவரிக்கதைகளை ஒரு சுவராஸ்யமான திரைக்கதைக்குள் அடக்கி வெற்றிபெற்றிருக்கிறது, ராஜசேகர் –அசோக் கூட்டணி.
நாயகர்களைப் பற்றி சொல்வதானால் முதலில் சீனியர் ஜீவா… அரசு பாரில் ராதாரவி சரக்கு பார்டி வைத்த நிலையிலும் இந்தப்பூனையும் பீர் குடிக்குமா என்கிற மாதிரி உட்கார்ந்து இருக்கும் ஜீவா, நிச்சயமாக புதுசு. கிட்டத்தட்ட அதே உடல்மொழியுடனே படம் முழுவதும் வந்து அட்டகாசப்படுத்தி விடுகிறார். ஆனந்திற்குப் பார்த்த பெண்ணாக இருந்தாலும் சரி பெத்த அப்பாவாக இருந்தாலும் சரி, சகட்டுமேனிக்கு கலாய்த்து தள்ளுகிறார்.
அருள்நிதி, சீரியசான கதாபாத்திரங்களிலேயே நடித்துக் கொண்டிருந்தவர், நகைச்சுவைக் கதாபாத்திரத்திற்குள் தன்னை பொருத்த முயன்று ஜெயித்திருக்கிறார். ஆனாலும், அவர் சீரியசாகவே இருந்துவிட வேண்டும் என்பதற்காகவே ஒரு காதல் தோல்வியை வைத்திருக்கிறார்கள். சுப்ரமணியபுரம் ஜெய் மாதிரி படம் முழுவதுமாக இல்லாவிட்டாலும், புன்னகை பூத்த முகத்துடனேயே முழுப்படமும் நடியுங்கள் அருள் நிதி, கிளைமாக்ஸில் பிரியா பவானி சங்கரை சிரிக்க வைக்க சிறு புன்னகையுடன் நீங்கள் வெட்கப்படும் அந்த சில நொடிகளில் ரொம்பவே வசீகரிக்கிறீர்கள்.
புரூஸ் லீ படங்களில் அவர் சண்டை போடும் காட்சிகளை படமாக்க பிரத்யேகமான கேமராக்களை அல்லது கேமராவில் பிலிம் ஓடும் வேகத்தை அதிகப்படுத்தி காட்சிப்படுத்துவார்கள் என்று சொல்வார்கள்.
பால சரவணன் மற்றும் ரோபோ சங்கரின் கவுண்டர் காமெடிகளைப் படம் பிடிக்கவும் கிட்டத்தட்ட அதே உக்தி கையாளப்படவேண்டும் போல, அந்தளவுக்கு நானோ செகண்ட் என்று சொல்லப்படும் விநாடிகளுக்கும் குறைவான நேரத்தில் கவுண்டர் கொடுத்து சிரிக்க வைக்கிறார்கள்.
அப்பச்சி ராதாரவி, இந்தப்படத்தின் கதைக்களம் காரைக்குடி என்பது பிரமாண்டமான செட்டி நாட்டு வீடுகளையோ அல்லது அழகப்பா பல்கலைக்கழக தோரண வாயிலையோ அல்லது வேலங்குடி முருகன் கோயிலையோ பார்த்து தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. இவரது ஒப்பனையைப் பார்த்தே புரிந்துகொள்ளலாம், அந்தளவுக்கு நிதி நிறுவனம் நடத்தும் செட்டியாராக ஒப்பனையில் அசத்தியிருக்கிறார். சூப்பர் சீனியர் ஆக்டர் என்றால் சும்மாவா! அவர் தத்தெடுக்கலாம் என்று யோசிக்கும் நபர்களின் பெயர்கள் சிதம்பரம் என்றில்லாமல் அசோக், ஆனந்தாக இருப்பது பெரிய ஆறுதல்.
மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் வசீகரமான கொள்கை பரப்பு செயலாளர்கள் போல படத்தின் வெற்றிக்கு உதவியிருக்கிறார்கள்.
இளவரசு, ரேணுகா, நரேன், வேல ராமுர்த்தி போன்ற மூத்த நடிகர்களும் தங்கள் பங்கை சிறப்பாக வழங்கியிருக்கிறார்கள்.
வசனங்கள் எதுவும் சினிமாவுக்காக எழுதப்பட்டவையாகவே இல்லாமல், மிகவும் யதார்த்தமாக அமைத்திருக்கிறார், அசோக்.
ராஜசேகர் என்று கமல், ரஜினி ஆகியோரை வைத்து சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்த இயக்குநரின் மறுபதிப்பாக இந்த N.ராஜசேகர் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கலாம்.
களத்தில் சந்திப்போம், ஜீவா- அருள்நிதி கூட்டணி ஜெயித்திருக்கிறார்கள்.