a K.Vijay Anandh review
கர்மா, நல்லதை விதைத்திருந்தால் காலங்கடந்தாவது நல்லது விளையும், தீயதை விதைத்திருந்தாலும் காலங்கடந்தாவது அதன் வினையை ஆற்றிவிடும்.
அப்படிப்பார்க்கப்போனால், ஹீரோ - வில்லன் என்கிற கதைக்களங்களுடன் வரும் அத்தனை சினிமாக்களின் ஒருவரிக்கதை, இல்லை இல்லை ஒரு வார்த்தை கதையும் கர்மா தான்.
வெகு சமீபத்தில் நடிகர் வெற்றி நாயகனாக நடித்து வெளிவந்த ஜீவி திரைப்படம் கர்மாவின் முடிச்சுகளை நேரடியாகச் சொல்லிய படமாக வந்து வெற்றிபெற்றது.
கபடதாரியும், கர்மா வை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான்.
234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் வெற்றிபெற்று 85% இடங்களை கைப்பற்றினால் கூட முதலமைச்சராகப் பதவியேற்றுவிடமுடியாது. பதவிப்பிரமாணம் எடுக்கும் முந்தின நொடியில் கூட கர்மா அதன் வேலையைக் காட்டிவிடும். நேற்று செய்த தவறா..? போன வாரம்..? போன மாதம்..? போன வருஷம்..? அட 40 வருஷங்களுக்கு முன்னாடி செய்த தவறுக்கான தண்டனை கூட ஏதோ ஒரு உருவில் வந்து நின்று .... ஆகிய நான் என்று சொல்வதற்கு முன்பே ஏதோ ஒரு வகையில் ஆப்படித்துவிடும்.
அப்படித்தான், ஒரு மிஷ’நரி’ கிறிஸ்டோபர், மீஞ்சூர் ரங்கநாதனாக பசு வேடம் போட்டுக்கொண்டு தமிழக மக்களை ஏமாற்ற நினைக்கும் முந்தின நாளில் சக்தி வடிவில் வந்து கர்மா வினையாற்றிவிடுகிறது.
ஒரு உயிரைக்காப்பாற்றி புண்ணியம் செய்த வகையில் அனாதைப்பிணங்களாகப் புதைக்கப்பட்ட தொல்லியல் துறையில் பணியாற்றிய சுரேஷின் குடும்பம் அரசு செலவில் மரியாதையாகத் தகனம் செய்யப்படுகிறத, 40 வருடங்கள் கழித்தாவது.
சிபி சக்ரவர்த்தி போக்குவரத்து காவலர் தான். ஆனாலும், அவருக்கு கிரைம் பிராஞ்சில் சேரவேண்டும் என்பது தான் கனவு. அதனை, அவரைத் திருமண விஷயமாகப் பார்க்கவரும் பெண்களிடம் பகிர்ந்துகொள்வதின் மூலமாக ஆடியன்சிடமும் சொல்லிவிடுகிறார் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி.
சமீபகாலமாக படத்திற்குப்படம் தன்னை மெருகேற்றிவருகிறார் சிபி சத்யராஜ். இந்தப்படத்தில், அவர் மிகவும் இயல்பாக முகபாவனைகள் மற்றும் உடல்மொழிகளுடன் அடுத்த ஒரு பெரிய இன்னிங்ஸிற்கு நான் ரெடி என்பது போல அட்டகாசப்படுத்தியிருக்கிறார்.
கதா நாயகனுடன் டூயட் இல்லை,பிரத்யேகமான அறிமுகக்காட்சி இல்ல, அசத்தலான உடைகள் கூட இல்லை, அட அவ்வளவு ஏன் அதிகமான காட்சிகள் கூட இல்லை என்றாலும், ஒரு கடன் பட்ட பத்திரிகையாளரின் மகளாக கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கும் கதாபாத்திரத்தில் வந்து நமக்கு இஷ்டமான நடிகை என்கிற இமேஜைத் தக்கவைத்துக் கொள்கிறார் நந்திதா ஸ்வேதா.
ஜே எஸ் கே பிலிம் கார்பரேஷன் சதீஷ் குமார், சிறிது நேரமே வந்தாலும் கதை இவரை மையமாக வைத்து தான் என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார்.
ஜெயப்பிரகாஷ், லாக் அப் நியூஸ் பத்திரிகையாசிரியராக, தனது முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, அதாவது ஒப்பனை மெனக்கெடல்கள் இல்லாமல் உடல்மொழியிலேயே மிகவும் வித்தியாசமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
நாசர், கமல்ஹாசன் - ரஜினி நடிக்க வரும் காலகட்டத்தில் சிவாஜியின் நடிப்பை பார்த்து நடிக்க கற்றுக்கொள்ளச் சொல்வார்கள். அடுத்து அந்த இடத்தில் கமல்ஹாசன் இருந்தார். சந்தேகமே இல்லாமல், ஒரு கதாநாயகன் அந்தஸ்து இல்லாத நடிகரை உதாரணமாகக் காட்டி நடிப்பு கற்றுக்கொள்ளவேண்டும் என்று சொன்னால் அந்த வரிசையில் முதலில் இடம் பிடிப்பது நாசராகத் தான் இருக்கும். சதா போதையில் அலங்கோலமாக இருக்கும் போதிலிருந்து, அடுத்த நாள் டக் இன் செய்து - பூட்ஸ் அணிந்து கிரைம் ஸ்பாட்டுக்கு வந்து நிற்கும் போது வரையிலான உடல்மொழி மாற்றங்கள் அட்டகாசம்.
சம்பத் ஆத்ரேயா, ஐயா நீங்க என்னதான் நடிச்சாலும் உங்கள் கதாபாத்திரத்தையொத்த அரசியல்வாதிகளை நாங்கள் நேரடியாகவே பார்த்துக் கொண்டிருப்பதால், அவர்கள் முன்னாடி நீங்கள் அதாவது அந்த கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்துவிடவில்லை என்றே தோன்றுகிறது.
இனி தொழில் நுட்ப பகுதிகளுக்கு வருவோம்...
இசையும் பாடல்களும் கதையோடு ஒன்றி பயணிக்கின்றன. குறிப்பாக சைமன் கே கிங்கின் பின்னணி இசை, கபடதாரி படத்திற்கு பெரிய பலம்.
1970 களில் நடந்த வழக்கு பதிவேடுகளை சிபி புரட்டும் வேளையில், மையக்கருவான ஜே எஸ் கே சதீஷ் குடும்பத்தாருடன் அந்த பதிவேட்டில் இடம்பெற்றிருக்கும் அத்தனை பேருமாக வந்து மறைவதாகக் காட்சி படுத்தப்பட்டிருப்பது அருமை.
அந்த விசாரணையை இதோ இப்பொழுதுதான் சக்தி மேற்கொள்கிறார் என்பது போல, சம்பந்தப்பட்ட கதாபாத்திரங்களின் வாக்கு மூலங்களைக் காண்பிக்கும் விதமும் அருமை. அந்த வகையில், எடிட்டர் சிறப்பான பங்காற்றியிருக்கிறார்.
இன்னும் இரண்டு மூன்று படங்களில் இனைந்து பணியாற்றிவிட்டால் ஒளிப்பதிவாளர் ராசாமதிக்கும் சிபி சத்யராஜுக்கும்இடையிலான கெமிஸ்ட் ரியைப் பற்றி கிசுகிசுக்கள் கூட எழுதப்படலாம். அந்தளவுக்கு, சிபி ஐ சிறப்பாக ரசித்து ரசித்து படம்பிடித்திருக்கிறார் ராசா மதி. ஒட்டுமொத்தமாகவே அளவான ஒளியமைப்பில் அனைத்து கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் ராசாமதி.
40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அவர்களது பள்ளி அல்லது கல்லூரி நாட்களில் படித்த கிரைம் எழுத்தாளர்களில் மன்னன் ராஜேஷ்குமார் எழுதிய விறுவிறுப்பான நாவல் நினைவுக்கு வரலாம். அதற்கு கீழே உள்ள வயதினருக்கு கர்மாவைப் பற்றிய காட்சி விளக்கப்படமாக - பாடமாக அமைந்து சுய ஒழுக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக அமையலாம். அந்த வகையில், மிகச்சிறப்பாக இயக்கியிருக்கிறார் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி!
கபடதாரி, காக்கி சட்டை - தனஞ்செயன் இணையின் அடுத்த வெற்றிப்படம்!