a K.Vijay Anandh review
கயிறு
பூம் பூம் மாடு என்று கூட வைத்திருக்கலாம். யதார்த்தப்படங்கள் என்றாலே ஈரானிய மொழிப்படங்கள் தாம் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, அட உங்கூரிலேயே அப்படி படம் வெளிவந்திருக்கு பாஸ் என்று மஜித் மஜித்தையே சொல்ல வைக்கும் அளவுக்கான அற்புதமான படம்.
சர்வதேச அளவில் 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் நடைபெற்ற பல்வேறு திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைப் பெற்றிருப்பதே இதற்குச் சான்று.
இதுபோன்ற கதையசம்சம் கொண்ட படங்களில் மிகவும் இயல்பான முகங்களே நடிக்கவேண்டும். அதற்கு ஏற்றார்ப்போல, நாயகனாக வரும் குணா, இலங்கையைப்பூர்வீகமாகக் கொண்ட இவர், பூம்பூம் மாட்டுக்காரனாகவே வந்து வசீகரித்திருக்கிறார். குடுகுடுப்பை, குறிசொல்லுதல் முதல் பூம்பூம்மாட்டுக்காரன் வரை அனைத்தும் நமது கலாச்சாரமே அன்றி தொழில்கள் அல்ல. அவற்றை எந்த நிலையிலும் போற்றிப் பாதுகாக்கவேண்டியது நமது கடமை என்று கவிதையாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஐ கணேஷ். அந்தக் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக இன்றைய சினிமாவையும் சேர்த்திருப்பதற்கு அவருக்குத் தனிப்பட்ட முறையில் நன்றிகள். வாய்ப்புகள் கிடைத்து ஜெயிப்பபவர்களும் வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் சினிமாவிலேயே இருந்து வாழ்க்கையைத் தொலைப்பவர்களுக்கும் இது ஒரு ஊக்கத்தைக் கொடுக்கும் என்றால் அது மிகையல்ல.
பள்ளிப்படிப்பை நிறுத்துவிட்டுக் கல்யாணம் செய்துகொடுக்கலாமா என்று கேட்டால் வேண்டாம், மேற்கொண்டு படிக்க வையுங்கள் என்று சொல்லும் பூம்பூம் மாட்டுக் கலாச்சாரம் மூட நம்பிக்கை இல்லைடா!
எங்களுக்குக் காளையும் கடவுளே! அந்தக்கடவுள் எங்களை எப்பொழுதுமே தவறாக வழி நடத்துவதில்லை என்பதற்கு, அந்த ஒரு காட்சி சாட்சி.
ஞானவேல் பண்டிதராக வருபவரும் அவரது கூட்டாளி சிவனடியார்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
உதார் கணேசனாக வரும் ஹல்லோ கந்தசாமிதான் படத்தை நகர்த்துவதில் பெரிய பங்கு வகிக்கிறார். நாயகனுடன் மோதலில் ஆரம்பித்து கா(த்)தலில் முடிகிறது அவரது கதாபாத்திரம்.
பூக்கட்டும் பெண் தாமரையாக வரும் நாயகி காவ்யா மாதவும் மிகவும் யதார்த்தம்.
சமூக நல்லிணக்கத்திற்கான குடியரசு விருது வாங்கிய தச்சுப்பட்டி என்கிற கிராமத்தைக் கதைக்களமாகக் கொண்டு படத்தைக் காட்சிப்படுத்தியது இயக்குநரின் உச்சக்கட்ட புத்திசாலித்தனம்.
பூம்பூம் மாடு கந்தனின் முக பாவனைகள், உடல்மொழிகள் ஆகியவற்றைக் கச்சிதமாகப் படம் பிடித்துக் கொண்டு கதைக்கு ஏற்றார்ப்போல் அழகாகச் சேர்த்திருக்கிறார்கள்.
கறிக்காக எதைவேண்டுமானாலும் கூறுபோடு, தாய்க்கு நிகரான மாட்டைக் கூறுபோடாதே என்று பொட்டில் அறைந்த மாதிரி சொல்லியிருக்கிறார், மணிமாறனைப் புரட்டி எடுத்து.
கந்தனும் தெய்வானையும் சேர்வது பல விஷயங்களைக் குறிப்பால் உணர்த்துகிறது.
இறுதிக்காட்சிக் கண்களைக் குளமாக்கிவிடும் (மகிழ்ச்சியில்)
கயிறு, ரசிகர்கள் கொண்டாடப்படவேண்டிய தமிழ்த்திரைப்படம்.