இந்த நிலை மாறும்
பொதுவாக, படத்தின் தலைப்பு, உள்ளது உள்ளபடியே, திரைக்கதையில் ஏதாவது ஒரு இடத்திலோ அல்லது ஒரு சில இடங்களிலோ, அட எங்கேயும் இல்லாவிட்டாலும் கிளைமாக்ஸிலோ ஒரு Conclusion போன்றோ உச்சரிக்கப்படும். இந்தப்படத்தில், படம் முழுவதும் எந்த இடத்திலும் உச்சரிக்கப்படாத தலைப்பு, இறுதிக்காட்சியில் அதுவும் எதிர்மறையாக உச்சரிக்கப்படும். நீதிபதியாக வரும் டெல்லி கணேஷ் அலட்டிக்கொள்ளாமல் நின்று – உட்கார்ந்து நிதானமாக தீர்ப்பு வாசிப்பார், இன்றைய இளைஞர்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்காவிட்டால் சமூகத்தின் இந்த நிலை மாறாது என்று.
இது ஒரு உதாரணம், இதுபோல, பட ஆக்கத்தில் ஆங்காங்கே புத்திசாலித்தனமான அல்லது பாரம்பரியமான வழக்கங்களில் இருந்து மாறுபட்டு வித்தியாசம் காட்டியிருக்கிறார் இயக்குநர் அருண்காந்த்.
அருண்காந்தின் ஆஸ்தான நடிகர்களாக ஆகிப்போன நாயகன் ராம்குமார், குணச்சித்திர நடிகர்கள் சந்தான பாரதி, ஒய் ஜி மகேந்திரா, நகைச்சுவை நடிகர் ஒன் அண்ட் ஒன்லி ( அருண்காந்த் பயன்படுத்திக்கொள்ளும் அளவில் ) சாம்ஸ் என்று அனைவருமே மிகவும் இயல்பாக நடித்து அசத்த இவர்களுடன் அஸ்வின் வந்து சேர்ந்திருக்கிறார்.
போலீஸ் ஸ்டேஷன் ரேடியோ ஸ்டேஷன் என்கிற ஐடியாவும் புதுமை அதில் விவாதிக்கப்படும் விஷயமும் புதுமை. அதாவது ஏற்கனவே இருக்கும் சமூகப்பிரச்சினை ஆனால், இதுவரை விவாதிக்கப்படாமல் இருந்திருக்கிறது என்கிற வகையில் புதுமை.
அனுபவ நடிகர் ஒய் ஜி மகேந்திரா, படத்தில் அதுவும் லீடிங் லாயர் அவரை அசால்டாக எதிர்கொண்டு தனது நண்பர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை ஒன்றிமில்லாமல் ஆக்கும் ராம் குமார் ஆச்சிரியப்படுத்துகிறார். இவரை, மற்ற இயக்குநர்களும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
வழக்கமாக இருந்தால் சாம்ஸ் மட்டுமல்ல சந்திரபாபுவைப் பார்த்தாலும் சலிப்புதான் தட்டும், அதனை நன்றாகவே புரிந்துகொண்டு ரேடியோ ஜாக்சன் என்கிற அருமையான கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார்கள். மைக்கேல் ஜாக்சன் சிகையலங்காரம் மற்றும் உடல்மொழிகளுடன் வந்து அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் சாம்ஸ்.
“:படிப்பதும் கேட்பதும் அல்ல உண்மைகள், சில உண்மைகளை மறைப்பதற்காக எழுதப்பட்ட பொய்கள்..” என்று சாம்ஸ் பேசும் மைக்கேல் ஜாக்சனின் வசனத்தில் நம் இந்தியாவின் உண்மையான வரலாறு ஒளிந்துகிடக்கிறது.
அத்தோடு, வளர்ந்து வருபவர்களுக்கும் வளர்ந்தவர்களுக்குமான உரிய இடங்களைக் கொடுக்கவேண்டும் என்று ஊடகங்களைக் கேட்டுக் கொள்ளுமிடமும் அருமை.
தொழில் நுட்ப ரீதியாக சுகுமாரன் சுந்தர், Indoor அல்லது Interior இல் வித்தியாசமான கோணங்களைக் கையாண்டிருப்பவர் ஒரு சில Exterior shots இல் மிகச்சிறப்பான கோணங்களால் அசத்தியிருக்கிறார்.
வணிக மசாலாக்களால் ஆக்ரமிக்கப்பட்டிருக்கும் தமிழ் சினிமாவின் இன்றைய நிலை மாறவேண்டுமானால், இது போன்ற சுயாதீன படைப்பாளிகளின் படைப்புகளுக்கு ஒரு குறைந்தபட்ச வரவேற்பு கொடுக்கப்படவேண்டும். அதற்காக, அவர்கள் எதையும் எப்படியும் படமாக எடுத்தாலும் என்பது அர்த்தமல்ல, அவர்களும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட வேண்டும், அருண்காந்தும் விதிவிலக்கல்ல.