a K.Vijay Anandh review
வெல்வெட் நகரம்
நடிகையும் இயற்கை ஆர்வலரும் மலவாழ் மக்களின் வாழ்வாதாரத்திற்காக குரல் கொடுப்பவருமான நடிகை கஸ்தூரி படுகொலை செய்யும் நிமிடத்தில் இருந்து – சட்டவிரோதமாகச் செயல்பட்டவர்களை அம்பலப்படுத்தும் அவரது கனவு நிறைவேறும் வரையிலான திக் திக் நிமிடங்களே வெல்வெட் நகரம்.
அதற்காகப் பயணப்படுகிறார் ஊடகவியாளர் வரலட்சுமி சரத்குமார் தனது தம்பியும் நடிகருமான அஸ்வினுடன். அடுத்த 24 நிமிடங்களில் அவர் சந்திக்கும் நபர்களில் சிலர் வரமாகவும் பலர் சாபமாகவும் ஆகிப்போக, அன்றைய இரவு அவர்கள் சந்திக்கும் திகிலான மணித்துளிகள் ரசிகர்களையும் கொஞ்சம் பயமுறுத்தத்தான் செய்கின்றன.
முகிலனாக வரும் பிரதீப் பெனட்டோ ராயன், வில்லன் அர்ஜய் ஆளான சந்தோஷ் கிருஷ்ணாவுடன் முட்டிக்கொள்ள அந்த இரவு அவர்களுக்கு மட்டுமல்ல, வரலட்சுமி மற்றும் அஸ்வினுக்கும் நம் எதிர்க்கட்சித்தலைவர் சொன்னது போல “கருப்பு” இரவாகிவிடுகிறது.
வில்லன் அர்ஜய் உம் புதுவரவான ரமேஷ் திலக் உள்ளிட்ட அவரது ஆட்களும் தான் வில்லனென்றால், காக்கிச் சட்டை மதன்குமாரும் வில்லனாகிப் போவதில் கதையின் டிவிஸ்ட் ஒளிந்து கிடைக்கிறது.
பிரதீப்பின் ஜோடியாக வரும் மாளவிகா உள்ளிட்ட அனைவரும் ஒருபக்கம் பதைபதைப்பும் இன்னொரு புறம் சந்தோஷ் கிருஷ்ணா போன்றோரின் மிரட்டலும் குறிப்பாக சந்தோஷ் கிருஷ்ணாவின் கொலைவெறியும் யதார்த்தமாக வெளிப்பட்டிருக்கிறது. என்னடா இவன் அடிவாங்கிக்கிட்டே இருக்கானே என்று அஸ்வினைப் பார்த்து சலிப்படையும் அந்த நொடியில் அவருக்கு ஆக்ரோஷம் தொற்றிக்கொள்ளுமிடம் அருமை.
எடிட்டர், ரேமண்ட் டெரிக் கஸ்டா, ஒளிப்பதிவாளர் பகத் குமார் குறிப்பாக கலை இயக்குநர் குமார் கங்கப்பா ஆகியோர் சிறப்பாக ஒத்துழைத்திருக்கிறார்கள்.
ஒரு பிரச்சினை, அதை நோக்கியே அல்லது அதைச்சார்ந்தே காட்சிகள் அமைப்பது ஒரு வகையான திரைக்கதை. ஒரு பிரச்சினை, அதன் தொடர்புடைய ஒன்றைத் தேடும் படியான திரைக்கதையில் சில கிளைக்கதைகளையும் இணைத்திருப்பது இன்னொரு வகையான திரைக்கதை.
திரைக்கதை இப்படித்தான் இருக்கவேண்டும் என்கிற வரையறை இல்லாத சுதந்திரத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு வெல்வெட் நகரத்தை இயக்கியிருக்கிறார் மனோஜ் குமார் நடராஜன். ஆனாலும், விறுவிறுப்பைக் கூட்டியிருக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.