a K.Vijay Anandh review
காலேஜ் குமார்
இதுவரை பிரபு நடித்த 224 படங்களிலும் இப்படி ஒரு ஓபனிங் சீன் Opening scene அறிமுகக்காட்சி அவருக்குக் கிடைத்திருக்குமா என்றால் சந்தேகமே!
225 ஆவது படமாக வெளிவந்திருக்கும் காலேஜ் குமார் படத்தில், பக்தி, பணிவு, மகிழ்ச்சி, படபடப்பு, அவமானம், ஆத்திரம் என்று அத்தனையையும் ஒரே காட்சியில் காட்டி அசத்துகிறார் பிரபு, அதுவும் படத்தின் முதல் காட்சியும் அதுதான், அவர் அறிமுகமாகும் காட்சியும் அதுதான்/.
அப்படி ஒரு சூழ் நிலையில் அவருக்குப் பிறக்கும் மகனைத் தன்னை அவமானப்படுத்திய இன்று தனது எஜமானராக ஆடிட்டராக இருக்கும் தனது பள்ளித்தோழனைப் போல உருவாக்கி காட்டுவேன்டா என்கிற சபதம் தான் படத்தின் அதிரடியான ஆரம்பம்.
தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை இயல்பாகவே ஒரு டாக்டராகவோ பொறியாளராகவோ ஆக்கவேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்கள் ஒரு புறம். ஒரு சவாலான சூழலில் வாரிசுகள் பிறக்கும் போது, தன்னை அவமானப்படுத்திய எதிரியைப் போன்று வரவைக்க நினைக்கும் பெற்றோர்கள் மறுபுறம், இதில் பிரபு இரண்டாவது ரகம்.
இயல்பாகவே, சவாலுக்காகவோ அடுத்த 21 ஆண்டுகளில் இப்படித்தான் நடக்கவேண்டும் என்று நாம் நினைப்பதும், நமது கனவுகளையும் ஆசைகளையும் குழந்தைகள் மீது திணிப்பதும் எவ்வளவு முட்டாள்த்தனம் என்பதை கலகலப்பாகவும் விறுவிறுப்பாகவும் சொல்லி அசத்தியிருக்கிறார், இயக்குநர் ஹரி சந்தோஷ்.
பிரபுவும், அவருக்கு ஜோடியாக வரும் மதுபாலாவும் நேர்த்தியான அனுபவ நடிகர்கள் என்பதை நிரூபிக்கிறார்கள், ஒவ்வொரு இடங்களிலும். ஒரு கட்டத்தில், இது கமல்ஹாசனுக்கு ஒரு வசூல்ராஜா எம் பி பி எஸ் போல, பிரபுவுக்கு ஒரு வசூல்ராஜா சி ஏ என்பது போலத் தெரிந்தாலும், மகனின் கல்லூரித்தோழர்களுடனான அரட்டை, மனைவியுடன் சிணுங்கல், மகனிடம் வீராப்பு என்று பிரபு முப்பரிமாணம் காட்டி அசத்தி விடுகிறார்.
தனது சமையாலாலேயே மகனின் கேண்டீன் வியாபாரம் படுக்க, அதைத் தன் சமையாலேலேயே தூக்கி நிறுத்தும் பாசமான அம்மாவாக மதுபாலா அசத்தியிருக்கிறார்.
அப்பா – மகன் கதைதானே , இதைவிட்டால் பிரபு – விக்ரம்பிரபு காம்பினேஷனுக்கு வேறு ஒரு நல்ல கதை கிடைத்துவிடுமா என்ன..? ஆனாலும், ராகுல் விஜய் – அவ்வளவு அழகு, துறுதுறு என்று மிகச்சிறப்பான நடிகராக ஜொலித்திருக்கிறார்.
அப்பாவுக்காகச் செய்யும் தில்லுமுல்லுகள், பின் அப்பாவுக்காக வியர்வை சிந்த ஆரம்பிப்பது, அதனை ஒரு பழிவாங்கலாகவோ அல்லது நீ என்ன செஞ்சு கிழிக்கப்போற பார்க்கலாம் என்று இளக்காரமாகவோ எண்ணாமல் ஸ்போர்டிவாக எடுத்துக் கொண்டு சவால்களில் ஜெயிப்பதும், அப்பாவை ஜெயிக்க வைப்பதுமாக ரசிகர்களைக் கவர்ந்துவிடுகிறார்.
நாயகி, பிரியாவுக்குப் பெரிய வேலைகள் இல்லாவிட்டாலும், சகமாணவரான மாமனாருக்குப் பக்கபலமாக நிற்கும் இடங்களில் அசத்துகிறார்.
நாசர், மனோபாலா, சாம்ஸ் அனைவருமே காலேஜ் குமாருக்குப் பக்கபலமாக இருக்கிறார்கள்.
வணிக சினிமாக்களுக்கென்ற வழக்கமான சிறப்பான இசை மற்றும் பாடல்கள், இசையமைப்பாளர் குதுப் – இ – கிருபாவுக்கு பாராட்டுகள். இரட்டை ஒளிப்பதிவாளர்களான குரு பிரஷாந்த் ராய், கே எம் பிரகாஷ் இருவரும் அசத்தியிருக்கிறார்கள், குறிப்பாக டூயட் பாடலில் கடற்கரையோரங்களை மிகவும் வித்தியாசமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
குழந்தைகளின் மீது தங்கள் கனவுகளைத் திணிக்காதீர்கள், அவர்களுக்கான கனவுகளை அவர்களே கண்டுகொள்ளட்டும் என்கிற கருத்தைச் சொல்லும் காலேஜ் குமாரைத் தயாரித்திருக்கும் எல் பத்மநாபாவுக்கு, காலேஜ் குமார் ஒரு வெற்றிப்படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.