a K.Vijay Anandh review
இரும்பு மனிதன்
ஏன் இரும்பு மனிதன் என்று வைத்தார்கள் தெரியவில்லை, உண்மையில் ஒரு கரும்பு மனிதனாக அதாவது அனைவருக்கும் இனியவராக படம் முழுவதும் வருகிறார் சந்தோஷ் பிரதாப்.
இளமையிலேயே சுற்றம் என்று யாருமில்லாத நிலையில், பசிக்கொடுமையை அனுபவிக்கும் சந்தோஷ் பிரதாப், பரோட்டா மாஸ்டராக வளர்ந்து ஆளாகி தனக்கென ஒரு சிறு உணவகத்தைச் சொந்தமாக நடத்திவருகிறார். தன்னைப் போலவே ஆதரவற்ற குழந்தைகளான நிஷாந்த், அகில், திலீப் ஆகிய மூன்று பேரையும் தனது மகன்களாக வளர்க்கிறார். நடுவில், பசிக்குத் திருட வந்து பங்காளியாகிப் போகிறார் கஞ்சா கருப்பு.
உட்காரும் உணவகங்களையெல்லாம் மிரட்டி அடிமாட்டு விலைக்கு வாங்கிப் போடும் மது சூதனனின் பாச்சா, சந்தோஷிடம் மட்டும் பலிக்கவில்லை. அவரது இடைஞ்சல்களில் இருந்து எழுந்து சுந்தரம் குழும உணவகங்களை உருவாக்கி மிகப்பெரிய இடத்தைப் பிடிக்கும் சந்தோஷுக்கு அவரது மூன்று மகன்கள் வாயிலாக ஏற்படும் பிரச்சினைகளே மீதிக்கதை.
எதிர்மறையான சிந்தனைகளையே பொழுதுபோக்கு முலாம் பூசிக் கொடுத்து சமூகம் சீர்கெட ஒருவகையில் காரணமாக இருப்பவர்கள் மத்தியில், மிகவும் நேர்மறையான – இளைஞர்களுக்கு ஒரு உந்துதல் தரத்தக்க – கதையாக இரும்பு மனிதனை இயக்கியிருக்கிறார் டிஸ்னி.
கதையின் ஒரு பாதி 20 – 25 வருடங்களுக்கு முன் நடப்பதாகக் காட்டியிருப்பதால் அந்த காலகட்டத்தில் வெற்றிகரமாக வலம் வந்த நாயகி பல்லவியின் சாயலையொத்த நாயகியாக அர்ச்சனாவை நடிக்க வைத்திருப்பது ரசிக்க முடிகிறது.
சந்தோஷ் பிரதாப், எந்தக் கதாபாத்திலும் பொருந்திப்போகிற நடிகராக இந்தப்படத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார். இவ்வளவு சீக்கிரமாக, ரஜினிகாந்தின் அண்ணாமலை போன்ற மாஸான ஒரு கதாபாத்திரம் இவரைத் தேடி வந்திருப்பதிலிருந்தே சினிமாவை எவ்வளவு நேசிக்கிறார் என்பது தெரியும்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு, ரஜினி- கமல் படங்களில் வரும் ஜனகராஜ் போன்று வலுவான கதாபாத்திரத்தில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் கஞ்சா கருப்பு.
அந்த மூன்று மகன்களும் ஒவர் நைட்டில் அப்பாவை வெறுக்கக் காரணம் என்ன..? பல ஆண்டுகளாக உழைத்துச் சம்பாதித்து இழந்த சொத்துக்களை விட பலமடங்கு அதிகமாக அடுத்த சில மாதங்களில் சந்தோஷ் சம்பாதிக்கும் ரகசியம் என்ன..?
இதுபோன்ற ஒரு சில குறைகளைத் தவிர்த்து, திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக்கியிருந்தால், இரும்பு மனிதனுக்குப் படத்திற்கு வெளியிலும் ரசிகர்கள் கொடுக்கும் வெற்றி எனும் விருது உட்பட பலவிருதுகள் கிடைத்திருக்கக் கூடும்.
மோகன் ராஜன், நிரஞ்சன் பாரதி மற்றும் டிஸ்னி எழுதி கே எஸ் மனோஜின் இசையில் வரும் அனைத்துப் பாடல்களும் அருமை.
நேர்மறையை விதைக்க வேண்டும் என்கிற உறுதியில் ஓரளவு ஜெயித்திருக்கிறான் இந்த இரும்பு மனிதன்.