a K.Vijay Anandh review
இந்தியன் படத்தில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் கொல்லப்படுவார்கள், அ ந் நியன் படத்தில் கடமையைச் சரியாகச் செய்யாதவர்கள் கொல்லப்படுவார்கள் அதேதான் ரமணாவிலும், ஆக தவறு செய்பவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். அவர்கள் இன்ன சாதி என்று யாரையும் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டிருக்கவில்லை.
அப்படித்தான் திரெளபதியிலும், பெண்களைப் பெற்றவர்களுக்கும் மண்ணை நேசிப்பவர்களுக்கும் எதிராகச் செயல்படுபவர்களைக் காவு வாங்குகிறான் நாயகன்.
காதல் திருமண எதிர்ப்பும் ,கலப்புத் திருமண எதிர்ப்பும் இருவேறு முனைகள். பெண்ணோ ஆணோ, முதலில் படித்து நல்லமுறையில் வாழ்க்கையில் முன்னேறி அவர்களது எதிர்காலம் நன்றாக இருக்கவேண்டும் என்று தான் ஒவ்வொரு பெற்றோரும் நினைப்பார்கள், அதற்கு தாழ்த்தப்பட்ட சமூகமும் விதிவிலக்கல்ல. இப்படம், பணக்கார வீட்டுப்பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்து பணம் பிடுங்கும் கும்பலைப் பற்றியதே!
இன்னும் சொல்லப்போனால், திருட்டுத்தனமாக அதாவது மணமகள் இல்லாமலே செய்யப்படும் பதிவுத்திருமணங்களுக்கு ஒரு இஸ்லாமியர் உதவுகிறார், ஜோசப் தாஸ் என்கிற கிறுத்துவப்பையன் பெரிய இடத்துப்பெண்ணைக் கல்யாணம் செய்து செட்டிலாகிவிடலாம் என்பதற்காக திருட்டுப்பதிவு திருமணம் செய்துகொள்கிறார், அவர்களுக்கு ஆச்சாரமான இந்து பிராமணரான ஒரு பதிவாளரும் துணைபோகிறார். ஆக, மூன்று மதங்களிலும் குற்றவாளிகள் இருக்கிறார்கள் என்பதையும் பாரபட்சமில்லாமல் சுட்டிக் காட்டியிருக்கிறார். இவர்களைக் கைப்பாவையாக வைத்துக் கொண்டு, ஒரு அரசியல் கட்சித்தலைவனும் அவனது அல்லைக்கையான போலி வக்கீலும், திருட்டுத்தனமான பதிவுத் திருமணங்கள் செய்துவைத்து, மான மரியாதையுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் அப்பாவி குடும்பங்களிடமிருந்து பணம் பறிக்கின்றார்கள். அதில் கொஞ்சம் விவரமும் கோபமும் கொண்டவன் வீறிட்டு எழுந்து இவர்களைப் பழிவாங்குகிறான்.
சாதீயச் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டு, மிகவும் நேர்த்தியான பட ஆக்கமாக திரெளபதி மிளிர்கிறாள்.
ருத்ர பிரபாகரனாக வரும் ரிஷி ரிச்சர்ட், மிகவும் யதார்த்தமாக நடித்து அசத்தியிருக்கிறார். தன் மனைவியையும் பெண்களையும் கொண்டாடும் அவரது கண்ணியம் படம் பார்க்கும் இளைஞர்களுக்குப் பாடமாக அமையும். அதுமட்டுமல்ல, ஆனா ஊன்னா சரக்கடிக்க உட்காரவில்லை, இன்னும் சொல்லப்போனால், ஒரு விவசாயியாகவும் சிலம்பவாத்தியாராகவும் அவரைக் காட்சியப்படுத்திய விதம் அருமை.
திரெளபதியாக வரும் ஷீலா ராஜ்குமாரும் கதாபாத்திரத்திற்கேற்ற கச்சிதமான தேர்வாக மிளிர்கிறார். ஒரு அக்மார்க் கிராமத்துப் பெண் அதே நேரம், சமூக மற்றும் நிர்வாக அவலங்களுக்கு எதிராகக் குரல் எழுப்பும் தைரியமான பெண்ணாக வந்து அசத்துகிறார். குறிப்பாக முதல் பாதியில் அவரைப் பற்றி ஏற்படும் எதிர்பார்ப்புக்கு ஏற்றார்ப்போல், வசீகரமும், கண்ணியமும், போராளித்தனமுமாக ஜொலித்திருக்கிறார்.
ஆவணப்பட இயக்குநர் – ஊடகவியலாளராக வரும் ராணியா வர்மா மூலம் தான் கிளைமாக்ஸ் சூடுபிடிக்கிறது. திரெளபதியை ஆணவக்கொலை செய்யப்பட்டுவிட்டதாக உருவான சர்ச்சையை அடிப்படையாக வைத்து அவர் எடுக்கும் ஆவணப்படத்தில் திரெளபதியாக நடித்திருக்கும் காயத்ரி கண்ணன் அசத்துகிறார். படத்தில் நகரப் பின்புல நடிகையாகவே வரும் அவர் திரெளபதியாக நடிக்கச் சேலை உடுத்தித் தயாராகும் போது, “இந்தச் சேலை உடுத்தினவுடனேயே செமகெத்தா இருக்கிறது..” என்று சொல்லும் போதே, திரெளபதி கதாபாத்திரத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு எகிறிவிடுகிறது. இயக்குநர் மோகன் ஜி யின் சிறப்பான பட ஆக்கத்திற்கு இந்தக் காட்சியை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம், முதல் பாதியில் உண்மையான திரெளபதியை ஒரு காட்சியில் கூட காண்பிக்காமல் கதை நகர்த்தியிருப்பது அற்புதமான திரைக்கதை யுக்தி.
இவரது கோணத்தில் படம் ஆரம்பித்து முடிவதாக இருந்தால் சந்தேகமே வேண்டாம் இப்படத்திற்கு கருணாஸ் இன் நேர்கொண்ட பார்வை என்று கூடத் தலைப்பு வைத்திருக்கலாம். ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு, சமூக நல விரும்பி வக்கீலாக வந்து பட்டையைக் கிளப்பியிருக்கிறார். இணை கமிஷனராக வரும் ஜே எஸ் கே கோபி, கிரைம் பிராஞ்ச் அதிகாரியாக வரும் நிஷாந்த் என்று சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஆறுபாலா, அம்பானி சங்கர், செஞ்சி சேகர், இளங்கோ என்று அனைவரும் அந்தந்த கதாபாத்திரமாக இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
தொழில் நுட்ப ரீதியாக மனோஜ் நாராயணனின் ஒளிப்பதிவும், ஜூபினின் இசையும் திரெளபதியை ஒரு விறுவிறுப்பான படமாக்க உதவியிருக்கின்றன.
ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கெதிரான படம், ஒரு குறிப்பிட்ட சமூகத்தலைவருக்கு எதிரான படம் என்று எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிற கதையாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிடாமல், லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் அவர்களை வைத்து ஆதாயமடையும் அரசியல்வாதிகள், அதற்குப் பலிகடா ஆக்கப்படும் பணக்கார வீட்டு அப்பாவிப்பெண்கள், ஏழை வீட்டு அப்பாவி மாணவர்கள் என்கிற புரிதலோடு படம் பார்த்தால் அனைவருமே கொண்டாடத் தகுதியான படமே!
ஒரு சிறிய உதாரணம், கதையின் மையான ஒரு பெண்ணை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பலுக்குத் துணைபோகும் இளைஞன் சரவணன் கதாபாத்தில் ஒரு பையன் நடித்திருப்பான், பத்திரிக்கையாளர் காட்சி முடிந்து வெளியே வந்தவுடன், தம்பி நீ நன்றாக நடித்திருக்கிறாய் என்று அனைவருமே பாராட்டினார்கள். சாதியைத் தலைக்குள் ஏற்றியிருந்தால், உண்மையில் அந்தப்பையன் மீது அனைவரும் கோபம் தான் பட்டிருக்கவேண்டும்.திரெளபதி சாதீய மோதல்களுக்கான படமல்ல, சமூக அவலங்களைச் சுட்டிக் காட்டும் படம் என்பது இதன் மூலம் விளங்கும்!