a K.Vijay Anandh review
நல்ல வேளை, ராசி நட்சத்திராவின் காதலை நிராகரித்து, “ நான் ஒரு பட்டமரம், நீ இப்பொழுதான் சிறகை விரிக்க ஆரம்பித்திருக்கும் பறவை..” என்று நேர்மையான அறிவுரை வழங்கி உரியவர்களிடம் ஒப்படைத்து விட்டு வந்துவிடுகிறார் பாரதிராஜா.
பாரதிராஜாவின் மீண்டும் ஒரு மரியாதை பார்த்துவிட்டு அவரிடம் சொல்ல நினைத்தது ஒன்றே ஒன்று தான். “ ஐயா, தனித்தமிழ்த்தேசிய வியாதிகள் தொற்றிக்கொள்ளாமல் பார்த்துக் கொண்டு, படைப்பாளியாகவே இறுதி மூச்சு வரை பயணித்து விடுங்கள். சரியாகச் சொல்வதானால், நீங்கள் படைப்பாளியாக மட்டுமே பயணித்துக் கொண்டிருந்தீர்களேயானால் ஓ மை கடவுளே என்கிற படத்தை ஒரு சில வருடங்களுக்கு முன் நீங்களே இயக்கியிருக்கக் கூடும்..”
ஒத்துவராத வாழ்வியல் சூழ் நிலையில் மனைவி மெளனிகாவுடன் அகப்பட்டுக் கொள்ளும் பாரதிராஜா, ஒரு கட்டத்தில் மனைவியையும் பறிகொடுத்து தனிமரமாக்கப்படுகிறார். அட ஐரோப்பா என்றால் கொக்கா என்ன, அங்கேயும் தான் ஆதரவற்ற முதியோர் இல்லங்கள் இருக்கின்றன. அப்படி ஒரு இல்லத்தில் சேர்த்துவிடப்படும் பாரதிராஜா, ஒரு நல்ல நாளில் அங்கிருந்து தப்பிக்கிறார். சக இல்லவாசி ஜோமல்லூரி கொடுத்த ஒரு அசைன்மெண்டோடு.
திருடத்தான் கூடாது, எந்த வேலை என்றாலும் செய்து சாப்பிடலாம் என்று தேம்ஸ் நதிக்கரையில், பட்டறையைப் போடுபவரிடம் வந்து கையை நீட்டுகிறார் ராசி நட்சத்திரா.
அந்த நொடியிலிருந்து அவர்களிருவருக்குமான பிணைப்பு ஆரம்பிக்கின்றது.
ராசி நட்சத்திராவுக்கும் குடும்பத்தில் ஒரு பிரச்சினை.
இருவரும் பிரச்சினைகளிடமிருந்து விடுபட்டு, ஒரு பத்து நாள் பயணிப்பது தான், இந்தப்படம்.
அந்த ஓல்டுமேன் பால் பாண்டி நம்ம பாரதி ராஜா இல்லை, தமிழ்பேசத்தெரிந்த யாரோ ஒரு ஹாலிவுட் நடிகன் என்கிற நினைப்புடனே படம் பார்த்தால், அந்த நடிகனுக்கு ரசிகர் மன்றமே ஆரம்பித்திருப்பார்கள்.
ராசி நட்சத்திராவும், இயல்பாக நடித்திருக்கிறார். சரளமாக தமிழில் வசனங்கள் பேசுமிடங்களில் வசீகரிக்கிறார்.
ராசி நட்சத்திராவின் பரத நாட்டிய குரு சம்பந்தப்பட்ட காட்சிகள் அருமை.
சாலை சகாதேவனின் ஒளிப்பதிவில் லண்டனும் மற்ற பகுதிகளிலும் தூய்மையான இயற்கை அழகு கொஞ்சுகிறது.
என் ஆர் ரகு நந்தன், ஷரன் சூர்யா, யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் இசையில் மதன் கார்க்கி, நா முத்துக்குமார், வைரமுத்து, அகத்தியன், கபிலன் வைரமுத்து ஆகியோர் எழுதிய பாடல்கள் அருமையாக இருக்கின்றன.
பின்னணி இசையில் ஸ்ரீகாந்த் தேவாவும் அசத்தியிருக்கிறார்.
ஐயா, நம்பிக்கையுடன் அமர்ந்து சர்வதேச ரசிகர்களுக்கான ஒரு திரைக்கதை அமைத்து, ஹாலிவுட்டில் இயக்கிவிடுங்கள். இன்று அதற்கான சாத்தியங்கள் மிகவும் நிறையவே கொட்டிக் கிடக்கின்றன. நீங்கள் உருவாக்கிய நெப்போலியனைச் சென்று பாருங்கள்
இந்தப்படத்தைப் பற்றி, பாரதிராஜாவின் மொழியினிலேயே சொல்லவேண்டுமானால், “ இது வரை வைகை நதிக்கரையோரம் வரிந்துகட்டி கதை சொல்லிக் கொண்டிருந்த உங்கள் பாரதிராஜா, தேம்ஸ் நதிக்கரையில் “கதை”க்களி ஆடியிருக்கிறான்..”
ஒரு சில குறைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், மீண்டும் ஒரு மரியாதையை அவருக்குப் பெற்றுத்தந்திருக்கிறது, இப்படம்.
OM ஏன் MOM ஆனது தெரியவில்லை, MOM உம் நன்றாகத்தான் இருக்கிறது.