a K.Vijay Anandh review
சாயா தேவி, வலினா பிரின்ஸ், ஸ்ரீராம் கார்த்திக், விஷ்ணு ராமசாமி ஆகிய நான்கு இளசுகளை வைத்து ரசிகர்களின் சிற்றன்பங்களைத் தூண்டி காசு பார்க்க ஆசைப்படாமல், உச்சக்கட்ட கண்ணியமாக ஒரு வாழ்வியலைச் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் போஸ் வெங்கட்.
ஒரு துரதிஷ்டவசமான நிகழ்வினையடுத்து அப்பா ஜெயிலுக்குப் போக, அம்மா கோமாவில் படுக்க தனது அக்கா கணவருடன் சென்னையில் ஆட்டோ ஓட்டிக்கொண்டு அவ்வப்பொழுது ஜெயிலுக்குச் சென்று அப்பாவையும் பார்த்துக் கொள்ளவேண்டும் என்கிற பாரத்தைச் சுமந்து கொண்டிருக்கும் அந்த இளைஞன் ஸ்ரீராம் கார்த்திக் தலையில் இன்னொரு பெரிய பாரத்தையும் வைத்து விடுகிறது இயற்கை. அழகான அன்பான குடும்பச் சூழ் நிலையிலிருந்து அழுத்தமான ஒரு சூழலுக்குத் தள்ளப்படும் ஸ்ரீராம் கார்த்திக் இரட்டை வேடம் போட்டிருப்பது போன்ற வித்தியாசம் காட்டுகிறார்.
காதலுடனும் கனவுகளுடன் சென்னைக்கு ஓடி வரும் காதல் ஜோடி, பெரிய வீட்டுப்பிள்ளை விஷ்ணு ராமசாமி, அவரை விடத் தாழ்ந்த சமூகத்தைச் சேர்ந்த காதலி சாயா தேவி. இருவருமே வசீகரிக்கின்றார்கள் தோற்றத்திலும் நடிப்பிலும். 80 களில் இருந்து சினிமா பார்த்துக் கொண்டிருப்பவர்கள் ஒத்துக் கொள்வார்கள், இளமையான கார்த்திக்கும் – கமலும் சேர்ந்த ஒரு கலவையாக விஷ்ணு ராமசாமி. தனது வசதியான வாழ்க்கையைப் புறவெளியில் அவ்வப்பொழுது காட்டிக் கொண்டாலும், அகம் முழுவதும் அவருக்குள் நிறைந்திருப்பது காதலி சாயா தேவி மட்டும் தான். வாழ்ந்து காட்டிவிடலாம் என்கிற நம்பிக்கை வந்த அதேநாளில், அவரது வாழ்க்கையும் முடிந்து போவது இயற்கையின் விளையாட்டு.
ஒரு பெண் எவ்வளவு துயரங்களைத் தாங்குகிறாள். ஒரே ஒரு நாள் வாழ்ந்துவிட்டால் போதும் அவளுக்கு, கணவனது நினைவுகளையும் கருவையும் தாங்கிக் கொண்டு வாழ்நாள் முழுவதும் பயணிக்கத் தயாராகி விடுகிறாள். விஷ்ணு ராமசாமியை கார்த்திக் – கமலுடன் ஒப்பிட்ட மாதிரி ஒப்பிடுவதானால், 80 களில் கோலோச்சிய டி ஆர் பட நாயகி்கள் முதல் அத்தனை நாயகிகளோடும் ஒப்பிடலாம் சாயா தேவியை. அவருக்காக, ஒரு சொட்டு கண்ணீராவது விடுவார்கள், ரசிகர்கள் என்றால் மிகையாகாது.
வலினா பிரின்ஸ், ஆட்டோ ஓட்டுநராக வந்து அசத்துகிறார். வழுக்கைத் தலையுடன் வந்து தன் விருப்பத்தைச் சொல்பவரைத் தன் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ளும் யதார்த்தம். பல பெண்களுக்கு வாழ்வை எதிர் நோக்கும் துணிச்சலையும், அதைவிடப் பல ஆண்களுக்கு எப்படியும் நமக்கும் ஒரு பொண்ணு கிடைச்சுடுவா என்கிற நம்பிக்கையும் அளிக்கிறது அவரது சம்பந்தப்பட்ட காட்சியமைப்புகள். சென்னைத் தமிழில் பேசும் போது, மிகவும் யதார்த்தம். “பெண்களைச் சரிக்குச் சமமா மதிக்காட்டாலும், அவர்களை அசிங்கப்படுத்தாமலாவது நடந்துகொள்ளுங்கள்..” என்று அவர் கூறுவது, கடைபிடிக்கப்படவேண்டிய ஒன்று.
இரண்டாவது பாதியில் என் ட்ரி கொடுக்கும், முக்கியமான ஒரு நடிகை பிரியங்கா ரோபோ சங்கர். அவர் நெற்றியில் வைத்திருக்கும் அந்தப்பொட்டு மாதிரியே பெரிய ரவுண்டு வருவார். அவரைக் கவுன்சிலர் என்று காட்டியிருப்பதும் அருமை.
ஆடுகளம் முருகதாஸ் வழக்கம்போல அட்டகாசப்படுத்தியிருக்கிறார் என்றால் சூப்பர்குட் சுப்பிரமணி, எம் எஸ் பாஸ்கரை ஓவர் டேக் ஆயத்தமாகிவிட்டார் தன்னுடைய குணச்சித்திர நடிப்பால்.
எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் வெகு இயல்பாகப் பொருந்திப் போகும் கஜராஜ், இதில் மிகவும் யதார்த்தம் காண்பித்து அசத்தியிருக்கிறார்.
தொழில் நுட்பரீதியாக ஒளிப்பதிவாளர் இனியன் ஜே ஹரிஷ் யின் பங்கு கச்சிதம். ரிஷால் ஜெயினி யின் எடிட்டிங்கும் கதை சொல்லலை நியாயப்படுத்தியிருக்கிறது.
இளையராஜாவின் பாடல்களையும் இசையையும் காப்பி அடிப்பது தான் தவறு. அவரது ஸ்டைலை யார்வேண்டுமானாலும் பின்பற்றலாம், பின்பற்றாமல் இருக்கவும் முடியாது, நல்ல இசையமைப்பாளராக ஆகவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு. ஹரி சாய், நம்பிக்கை தருகிறார். இங்கே நடிகர்களைக் குறிப்பிடும் போது 80 களின் காலகட்டத்தை உவமைகளாக எடுத்துக் கொண்டது போலவே, இவரது இசையைப் பற்றிச் சொல்லும் போதும், 80 களின் இளையராஜாவின் இன்னிசை நினைவுக்கு வருகிறது, சொக்க வைத்திருக்கிறார். பின்னணி இசையிலும் , பல இடங்களில் இவர் வாசிக்க மறப்பது, காட்சிகளுடன் நம்மைக் கட்டிப்போட உதவியிருக்கிறது.
இன்றைய கேட்டட் கம்யூனிட்டிகளுக்கு முப்பாட்டன் , முப்பாட்டன் என்று சொல்லமுடியாது, பெரியப்பா என்று வேண்டுமானால் சொல்லலாம், கேட்டட் கம்யூனிட்டியின் பெரியப்பா காம்பவுண்டு வீடுகளின் பின்னணியில் ஒரு அழுத்தமான கதையைப் பதிவு செய்திருக்கிறார் போஸ் வெங்கட்.
எம் ஜி ஆர் நடிக்கும் போது, பின்னணியில் கட்சிக்கொடி, அண்ணாத்துரை ஈவெரா போன்றோரின் படங்கள் ஆகியவற்றைத் தைரியமாகக் காட்சிப்படுத்தியிருப்பார், தனது படங்களில்.
நாளைய திமுகவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவாக ஆசைப்படும் உதயநிதி, தனது படங்களில் அவரது முன்னோடிகளான மு.கருணாநிதியையோ, மு.க.ஸ்டாலினையோ அவர் நடிக்கும் படங்களில் ஒரு பிரேமில் கூடக் காட்சிப்படுத்தியதில்லை.
ஆனால், திமுகவின் அடிமட்டக் கொள்கைப்பிடிப்புள்ளத் தொண்டனாக இருக்கும் போஸ்வெங்கட், அவர் பின்பற்றும் திராவிட முன்னோடிகளை படத்தின் முக்கியமான காட்சிகளின் பின்புலமாகவே காட்சிப்படுத்தியிருக்கிறார்.
ஆகவே, மு.க.ஸ்டாலின் சொன்னார் என்பதற்காகவே சி ஏ ஏ வுக்கு எதிராக கையெழுத்து மற்றும் கை நாட்டு இட்ட இரண்டு கோடி பேரில், ஒரு இருபத்தைந்து லட்சம் பேராவது , போஸ் வெங்கட் படத்தைக் குடும்பத்துடன் வந்து பார்த்து ரசிக்கவேண்டும். அதே நேரம், போஸ் வெங்கட் படத்தில் திராவிடச் சிந்தனைகளைத் திணிக்கவோ காட்சிக்குக் காட்சி அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கவோ இல்லை. ஆகவே, பொதுவான திரை ரசிகர்களுக்கும் படம் மிகவும் பிடிக்கும்.
சமூகம் தாண்டி ஏற்படும் காதலால், சம்பந்தட்டவர்களின் குடும்பமும், ஏன் காதலர்களுமே வாழ்க்கையைத் தொலைக்கும் நிலைக்குத் தள்ளப்படுபதை அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறார்.
படம் பார்க்கும் பார்வையாளன், இவர்களது எதிர்காலம் எப்படி இருக்குமோ என்று அவனாகவே ஒன்றை நினைத்துக் கொண்டு, படத்தின் கிளைமாக்ஸ் தாண்டி பயணித்துக் கொண்டிப்பது உறுதி, அந்தளவுக்கு நீட்டி முழுக்கும் வசனங்களும் இல்லாமல், மணிரத்னம் படங்கள் போன்று இருவார்த்தைகளுடனான வசனங்களும் இல்லாமல். கதாபாத்திரங்களின் உனர்வுகளாலேயே படத்தைக் கொண்டு சென்றிருக்கிறார் போஸ் வெங்கட்.
கன்னி மாடம், 80 களின் கிளாசிக் திரைப்படங்களின் அனுபவங்களைத் திரும்பவும் கொண்டு வந்திருக்கிறது.