a K.Vijay Anandh review
தமிழ் நாட்டின் எங்கோ ஒரு மாவட்டத்தில், எங்கோ ஒரு வட்டத்தில், எங்கோ ஒரு ஊரில், எங்கோ ஒரு வீட்டில் இந்த தலைக்கூத்தல் நடந்து ஒரே ஒரு முதியவர் கொல்லப்பட்டாலும் அது சமூகத்தின் தலைகுனிவே, அதனைத் திரைப்படம் மூலம் சுட்டிககட்ட ஒரு படைப்பாளிக்கு வானளாவிய உரிமை இருக்கிறது. அதனைச் செவ்வனே செய்திருக்கிறார் பிரியா கிருஷ்ணமூர்த்தி, அந்த செவ்வனே வுக்குத்தான் தேசிய விருதும் வழங்கப்பட்டிருக்கிறது.
உன்னைக் கள்ளிப்பால் ஊற்றிச் சிசுக்கொலை செய்யாமல் வளர்த்து, படிக்கவைத்து, கல்யாணம் செய்து பார்த்து சமூகத்தில் ஒரு கெளரவமான குடிமகனாக / குடிமகளாக வாழவைக்கும் உன் பெற்றோருக்கு, அவர்களால் முடியாத காலத்தில் தலைக்கூத்தலைப் பரிசாக நீ வழங்கினால், இந்த உலகத்தின் ஆகச்சிறந்த அயோக்கியர்களுக்கெல்லாம் அயோக்கியன் நீ தான்.
அப்படி ஒரு அயோக்கின் செந்திலாக சு பா முத்துக்குமார் அவரது மனைவி ஸ்டெல்லாவாக ஸ்டெல்லா தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமலே உச்சக்கட்ட பாவத்தைச் செய்கிறார்கள்.
கருப்பசாமி வழி வந்த வாரிசான செந்தில் ஆகச்சிறந்த அயோக்கியன் என்றால், கருப்பசாமியின் தங்கை மென்மொழி வழி வாரிசுகளான முருகன், மணி, வீரா மூவரும் முதியோர்களைக் கொண்டாடும் புண்ணியவான்களாக இந்த சமூகத்திற்கு நிறையச் சொல்லித்தருகிறார்கள். பெரியோர்களுக்கு அடிபணிவதும் சேவையாற்றுவதும் அடங்கிப்போவது அல்ல என்பதை.
ஆம், இடைவேளையிலேயே செத்துப்போய்விடும் கருப்பசாமி கதாபாத்திரமாக ஆர் ராஜு மிக மிக யதார்த்தமாக நடித்திருக்கிறார் என்றால், அவரது தங்கை மென்மொழியாக வரும் ஜெயலட்சுமி, பத்து பதினைந்து சிவாஜிகணேசன்களை ஒரு சேர பிரதிபலிக்கிறார். தனது மகன்கள் இருவரிடத்திலும் சலித்துக் கொண்டே அப்படியே இன்னொரு மகன் வீராவிடம் திரும்பி விட்டுருப்பா என்று சொல்லும் அந்தக் காட்சியில், இருவேறு உணர்ச்சிகளை மிகவும் இயல்பாகக் கொட்டி ஆச்சிரியப்பட வைக்கிறார்.
நடிப்பது சுலபம், அத்தனை படக்குழுவினரின் முன் நின்று யதார்த்தமாக வாழ்வது கடினம். படத்தில் வரும் நேர்மறை கதாபாத்திரங்கள் மட்டுமின்றி எதிர்மறைக் கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் பாராட்டுகளை அள்ளுகிறார்கள். சுகுமார் சண்முகம் முதல் டீ போடு, சோறு எடுத்து வை என்று எத்தனை கட்டளைகளை எதிர்கொண்டாலும் வசனமே இல்லாமல் அமைதியாக அத்தனை வேலைகளையும் செய்துகொண்டிருக்கும் மென்மொழியின் மருமகள் கூட அவ்வளவு வசீகரிக்கிறார்.
எட்டாயிரம் பேசி நாலாயிரமோ அல்லது அதற்கு கீழும், பணவெறியும் கொலைவெறியும் பிடித்த வாரிசுகளால் பேரம் பேசப்பட்டு வெறும் மூவாயிரமே வாங்கிக் கொண்டாலும் – அதனையும் ஓரிருவர் பிரித்துக் கொண்டாலும் கடமையைக் கச்சிதமாகச் செய்துவிடும் அப்பாவிகள். உண்மையில் , படம் பார்க்கும் போது அவர்கள் மீது கோபம் வரவில்லை, வெறும் ஆயிரம், ஆயிரத்தய்நூறுக்கு – தங்கள் வயிற்றுப்பிழைப்புக்காக – எவ்வளவு பெரிய அயோக்கியத்தனத்தைப் பாரம்பரியம் என்கிற உறையுடன் செய்து முடித்துவிடும் அளவிற்கு இன்னும் நம் மக்களை உலகின் மூத்தகுடிகளை வைத்திருக்கும் அரசியல்வாதிகளுக்கு இந்த தலைக்கூத்தலைப் பரிசாக அளித்துவிடலாமா என்கிற கோபம் வருகிறது.
பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாதவனும், சமூகத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் அரசியல் பிழைப்போனும் மனிதனே இல்லை, இந்த சமூகத்தின் சாபக்கேடு.
அரசியலையும், வர்க்கபேதத்தையும் நேரடியாகப் பேசினால் மட்டுமே அது சமூகப்படமல்ல, அப்படி ஒரு முத்திரை குத்தாமல் சமூக அவலத்தை ஆவணப்படுத்துவதன் மூலம் நம்மை கோபப்படச் செய்வதுதான் சமூகப்படம்.
பாரம், முதியவர்கள் அல்ல மாறாக சமூகத்தில் நடக்கும் அவலங்களைக் கண்டும் காணாமலும் செல்லும் தனிமனிதர்களும், அதிகாரிகளும், அரசியல்வாதிகளுமே!
அந்த வகையில், இப்படிப்பட்ட படத்தை வெளியிடுவதன் மூலமாக வெற்றிமாறனும், படத்தை எப்படியாவது மக்களிடம் கொண்டு போய்ச்சேர்க்கவேண்டும் என்பதற்காகப் பாடுபடும் மிஷ்கின், ராம் உள்ளிட்டோரும் தாங்கள் இந்த பூமிக்கு வெறுமனே பாரமாக இல்லாமல், சமூக மாற்றத்திற்கான உரங்களாக இருக்கிறோம் என்று நிரூபித்துவிட்டார்கள்.