a K.Vijay Anandh review
தம்பி அசோக் செல்வன், தொடர்ந்து தமிழ்ப்படங்களிலேயே நடித்து ஒரு நாள் இல்லை ஒரு நாள் தமிழ் நாட்டுக்கு முதலமைச்சராக ஆகவேண்டும் என்கிற எண்ணம் இல்லை என்கிற பட்சத்தில் தயவுசெய்து, உங்களது சிறகை விரித்து பாலிவுட் ஹாலிவுட் என்று பறக்க ஆரம்பியுங்கள். அந்த அளவிற்கு ஒரு சரவதேச அளவில் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளத்தக்க நடிகனுக்குத் தேவையான அத்தனை இலக்கணங்களும் உங்களிடம் ஒரு சேர அமைந்திருக்கிறது என்றால் மிகையல்ல. ஏன், இந்தப்படத்தையே சரவதேசப்படமாக்கலாம்.
இயல்பாகவே, வசீகரம் அத்துடன் நடிப்புத் திறமையுடன் கூடிய இந்திய அளவில் மிகச்சொற்பான நடிகர்களுள் நீங்களும் ஒருவராய்ப்போனதில், தமிழகத்திலிருந்து என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. நட்பு, கல்யாணத்தோல்வி, காதல் முதல் கஷ்டமான காலகட்டங்களில் கம்முனு இருப்பது வரை மனிதர் அசத்தியிருக்கிறார்.
அட கதைக்கு வருவோமா..? ஆனால், அதைச் சொன்னால் புரியாது.. சொல்லிட்டாலும் புரியாது. ஒரு இரண்டு மணி நேரம் பார்த்து அனுபவியுங்கள், ஓ மை கடவுளே இப்படி ஒரு மென்மையான அதே நேரம் அதிரடியான பொழுதுபோக்கு படத்தைப் பார்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டனவே என்று நீங்களே உணர்வீர்கள்.
RomCom வகைப்படம் தான், சத்தியமாக நம்ம ஹரீஷ் கல்யாண் வகை ரொமாண்டிக் காமெடி படம் அல்ல. அதில், சீனுக்கு சீன் எது இருக்கிறதோ இல்லையோ ‘அது’ இருக்கும். இந்தப்படத்திற்கு ஏன் ரொமாண்டிக் காமெடி என்று பெயர் வைத்தார்களோ தெரியவில்லை, அதுவும் சொன்னால் புரியாது.
அட சொந்தப்பொண்டாட்டி கூடவே நீ டி ஆர் மாதிரிதானப்பா இருக்கே என்று, அசோக் செல்வனைப் பார்த்து சலித்துக் கொள்ளக்கூடும், பரிதாபத்துடன்.
ஒரு வரியில் சொல்வதானால், அசோக் செல்வன் கனவு காண்கிறாரா..? அல்லது தன் வாழ்க்கையில் நிஜமாகவே அவர் மட்டும் தன்னைச் சார்ந்தவர்களுடன் கொஞ்சம் பாஸ்ட் பார்வேட் Fast Forward சென்று வருகிறாரா..? என்பதை ரசிகர்களே முடிவு செய்துகொள்ளலாம்.
ரித்திகா சிங், நமது எதிர்க்கட்சித்தலைவர் நெற்றியில் வைத்த சந்தனத்தை வெளியே வந்தவுடன் அழித்தது போல அல்லாமல், ஒரு கிறுத்துவப் பெண்ணாக இருந்தும் அசோக் செல்வன் அம்மா வைத்துவிடும் குங்குமத்துடன் வரும் போது தேவதைகளுக்கெல்லாம் தேவதையாகத் தெரிகிறார். வெறும் அழகு மட்டுமல்ல, கல்லூரியில் பட்டம் வாங்கின நேரத்திலும் கல்யாணத்தை உதறிவிட்டு வந்து நிற்கும் நேரத்திலும் அசோக் செல்வனைப் பார்த்து, ”நீ மட்டும் நிக்கிறதைப் பார்க்கக் கஷ்டமா இருக்குடா..” என்று ஒரே வசனத்தைத் தான் பேசுகிறார். ஆனால், அந்தக் கால இடைவெளிக்கான முதிர்வு முகத்தில் இயல்பாகவே ஒட்டிக் கொள்கிறது. போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும் என்று தன் ஹை ஹீல்ஸ் செருப்பைக் கழட்டிப்போட்டுவிட்டு ஓடிவரும் அழகே அழகு.
வாணி போஜன் மட்டும் என்ன தக்காளி தொக்கா, கெளதம் வாசுதேவ மேனன் பட நாயகிகள் தான் அவ்வளவு அழகாக இருப்பார்கள் என்றால், அவரது உதவி இயக்குநர்களுமா என்று பொறாமைப்படும் அழகு. சின்னப்பையனிடம் சின்னப்பெண்ணாக நடந்துகொண்டுவிடாமல், சின்னப்பையனைப் பெரிய காரியமாற்றக் காரணமாகிறார்.
இந்தாளைப் பற்றிச் சொல்லாவிட்டால் ஓ மை கடவுளே முழுமை பெறாது. விஜய்சேதுபதியா..? இல்லை இல்லை சாரா, படத்தில் ஒரு வசனம் வரும் வாணிபோஜன் சொல்வார், “God’s plan..” என்று. சாரா தமிழ் சினிமாவிற்குக் கிடைத்திருப்பது கலைகளின் நாயகனான கடவுளின் விருப்பமன்றி வேறு எதுவாக இருக்க முடியும். ஐயா சா(மி)ரா கதாநாயகனாக நடிக்கப்போகிறேன் என்று காணாமல் போய்விடாதீர்கள். வருடத்திற்கு குறைந்தது 12 படங்களிலாவது நீங்கள் வேண்டும், அப்பொழுதாவது மாதம் ஒரு ஹிட் படம் என்கிற நல்ல செய்தியைத் திரையுலகம் சந்திக்கட்டும்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு, அந்த அழகான விஜய்சேதுபதி, கருப்புக்கோட்டுக் கடவுளாக ரமேஷ் திலக்குடன் வந்து கலகலப்பூட்டிச் செல்கிறார்.
எம் எஸ் பாஸ்கர் என்றாலே ஒரு நீளமான காட்சி அமைந்துவிடுகிறது. அவரது பால்ய வயதில் கக்கூஸ் இல்லாமல் அம்மாவைப் பறிகொடுத்த காட்சியை விவரிக்கும் விதமும், அதனைத் தொடர்ந்து இன்று கக்கூஸ் தயாரிக்கும் தொழிலதிபராகி அவர் ஊருக்கே பல கக்கூஸ் கட்டிக் கொடுத்ததாகச் சொல்லும் இடங்களிலும் அசோக் செல்வனை மட்டுமல்ல, படம் பார்க்கும் அனைவரையும் குறிப்பாக இளைஞர்களையும் விசும்ப வைத்துவிடுகிறார். ஒட்டுமொத்தமாக, சமூகத்திற்குத் தேவையான மிகப்பெரிய விஷயத்தை சில புகைப்படங்கள் மற்றும் இரண்டு நடிகர்களுடன் காட்சிப்படுத்திய விதத்தில் அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து அழுத்தமாகவே முத்திரை பதித்திருக்கிறார்.
லியோன் ஜேம்ஸ் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் அருமை.
எடிட்டர் பூபதி செல்வராஜ் கையில் தான் இந்தப்படத்தின் மொத்த சுவராஸ்யமும் ஒளிந்து கிடந்திருக்கிறது, அட்டகாசப்படுத்தியிருக்கிறார்.
விது அய்யனா, அட்டகாசமான ஒளிப்பதிவு.
எதிர்பார்த்த விஷயங்களைத் தருவது அல்ல, வாழ்க்கை
எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்வதும் அல்ல, வாழ்க்கை.
எதிர்கொள்வதை எதிர்காலமாக்கிக் கொள்ளுங்கள் என்பது தான் வாழ்க்கை
என்கிற புதிய தத்துவத்தைக் கொஞ்சமும் தொய்வின்றி கதையாக்கிச் சொல்லியிருக்கிறார் இளம் படைப்பாளி அஷ்வத் மாரிமுத்து.
ஓ மை கடவுளே, சிறந்தவற்றுள் சிறந்த படம்.