a K.Vijay Anandh review
இளவரசுவைக் கொல்லாமல் இருந்திருந்தால், மணிமாறனாக வரும் பாலாவை இன்னும் கொஞ்சம் சரியாக படைத்திருந்தால் தம்பி ஒரு சர்வதேச அளவிலான தமிழ்ப்படம் ஆகியிருக்கக்கூடும்.
மேட்டுப்பாளையம் எஸ்டேட்டுகளுக்குள் ஜோதிகா குதிரை சவாரி செய்யும் காட்சி முதல் கோவாவில் ஆட்டம் போடும் கார்த்தி வரையிலான காட்சிகள் ஆர் டி ராஜசேகரின் ஒளிப்பதிவில் ஏதோ சர்வதேசத் தரத்திலான படத்திற்குள் வந்துவிட்டோமோ என்கிற மாயையை உருவாக்கத்தவறவில்லை.
ஆள் மாறாட்டமும் ரசிக்கக்கூடிய திரைக்கதை தான், உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரை.
வீட்டிற்குள் நடக்கும் ஒரு அசம்பாவிதம் என்கிற கிளைமாக்ஸ் அருமை.
குதிரையில் சவாரி செய்யும் வரை ஜோதிகா, கோவாவாசியான கார்த்தி இருவரும் கொள்ளை அழகு, அற்புதமான உடல்மொழி. குதிரையை விட்டு இறங்கிய ஜோதிகா, கோவாக்காரனாக இருந்து மேட்டுப்பாளையக்காரனாக மாறும் கார்த்தியால் அவர்களுடன் போட்டி போடமுடியவில்லை.
யாருக்கும் தெரியாமல் நடக்கின்றது என்று கார்த்தி நம்பிக் கொண்டிருக்கும் போது, சம்பந்தப்பட்ட அனைவருக்குமே தெரிந்து தான் நடக்கின்றது என்கிற திரைக்கதை உக்தி சுவராஸ்யம், இளவரசுக்குக் கூட தெரியும் என்பது கூட கார்த்திக்கு தெரியாமல் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாமோ என்னமோ.
செளகார் ஜானகியின் கதாபாத்திர வடிவமைப்பு அருமை.
சத்யராஜ் சொல்லவும் வேண்டுமோ ? சிறப்பாக நடிக்கிறார். சீதாவும் அமைதியாக வந்துபோகிறார்.
இந்த நிக்கிலா விமலை இன்னும் கொஞ்சம் பிடிக்கும் என்கிற அளவிற்கு அழகாக இருக்கிறார்.
அக்கா இருந்துட்டா ஒவ்வொரு தம்பிகளுக்கும் இரண்டு அம்மா இருப்பதற்குச் சமம் என்கிற வசனம் நன்றாக இருக்கிறது. அதற்கான பந்தப்பிணைப்பை கொஞ்சம் அதிகமாகக் காட்சிப்படுத்தியிருக்கலாம். குறிப்பாக சிறிய வயது அம்மு அபிராமி சம்பந்தப்பட்ட காட்சிகளை.
ஜீத்து ஜோசப் – ஜோதிகா – கார்த்தி என்று காம்பினேஷனுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைக் கொஞ்சம் கதைக்கும் கொடுத்திருக்கலாம்.
தம்பி, தங்கக்கம்பி ஆகியிருக்கவேண்டியது..!