a K.Vijay Anandh review
இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படம் மூலம், ஆயுதங்கள் இல்லா உலகிற்கு அழைப்பு விடுத்திருக்கிறார் அதியன் ஆதிரை. நல்ல கதைக்கரு, தினேஷ், ஆனந்தி, ரித்விகா, முனீஷ்காந்த், திலக், மாரிமுத்து என்று அட்டகாசமான நடிகர்களை வைத்து கதை சொன்ன விதமும் அருமை. இந்தப்படத்தைப் பொருததவரை நடிகர்களில் தினேஷும், தொழில் நுட்பக்கலைஞர்களில் ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார் மற்றும் இசையமைப்பாளர் டென்மாவும் மிகச்சிறப்பான முறயில் தங்களது பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
குண்டுகள் முதல் குண்டூசி வரை எதையுமே பயன்படுத்தவில்லை எனும்போது, அதாவது பயனற்றுப்போகும் போது முறையாக அவற்றை கழிவாக்கவேண்டும் என்பது தான் அறிவுப்பூர்மான செயலாக இருக்க முடியும்.
ஆனால், இரண்டாம் உலகப்போரின் முடிவில் மீந்துபோன குண்டுகளை குறிப்பாக ராக்கெட் குண்டுகளை, அலட்சியமான முறையில் கடலில் வீசிவிடுகிறார்கள், அதனை முறையாக அப்புறப்படுத்த 2000 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் எடுத்தவர்கள்.
அப்படி கடலில் வீசப்பட்ட குண்டு ஒன்று மாமல்லபுரம் கடற்கரையில் கரையொதுங்க, அதனைக் கண்டுபிடித்த ஜெர்மன் நாட்டுப்பெண் ஒருவர், காவல் நிலையத்திற்குத் தகவல் தர, காவல் நிலையத்திற்கு எடுத்தச் செல்லப்படும் குண்டு என்ன ஆகிறது என்பதே இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு பட்த்தின் விறுவிறுப்பான திரைக்கதை.
லாரி ஓட்டிக்குடும்பத்தைக் காப்பாற்றிய அப்பாவின் மறைவிற்குப் பின், அவர் ஓட்டிய லாரியையே தன் அப்பாவாகப் பாவித்து, பழைய இரும்புக்கடையில் லாரி ஓட்டுநராக வேலைபார்க்கும் தினேஷ். இப்படிப்பட்ட அழுத்தமும் யதார்த்தமும் சொல்லும் கதைகளில் நடிக்கத் தகுதியான ஒன்றிரண்டு நடிகர்களுள் இவரும் ஒருவர். தன்னைப் போட்டுக்கொடுக்கும் முனிஷ்காந்தைக் கூட வாஞ்சையோடு அழைத்து வயிறு நிறைய வைக்கும் இட்த்திலும், குண்டு வெடித்து அவர் செத்துப் போயிருப்பாரோ என்று அழும் இட்த்திலும் மனிதம் பேசியிருக்கிறார். முக்கியமாக இருட்டில் பள்ளிக்கூடம் என்று தெரியாமல் அதன் அருகே வெடிகுண்டைப் புதைத்துவிட்டு, ஐயோ வெடித்தால் ஏதுமறியாத மாணவர்கள் பாதிக்கப்படுவார்களே என்று துடிக்கும் தினேஷை ஆரத்தழுவிக்கொள்ளலாம். இந்தப்படமும் இவருக்கு விருது வாங்கிக் கொடுக்கத் தகுதியான படமே, ஒரு சில முரண்கள் எழாமல் இருந்திருந்தால்.
தனியாக காமெடி டிராக் என்று எதுவும் வேண்டாம், எனக்கு ஏதாவது ஒரு கதாபாத்திரம் கொடுங்கள், மக்களைக் கவர்ந்து காட்டுகிறேன் என்று எந்தக் கதாபாத்திரத்தில் நடித்தாலும் ரசிகர்களைச் சிரிக்க வைத்து தன் பக்கம் கவர்ந்துவிடும் முனிஷ்காந்த், குண்டின் பெரிய பலம்.
ஜே என் யூ வில் படித்தாலே இப்படித்தான் தேசத்தை விமர்சிக்கச் சொல்லும் என்பதை ரித்விகா கதாபாத்திரம் மூலம் ஆணி அடித்தாற்போல் சொல்லிவிடுகிறார் அதியன் ஆதிரை.
நிஜத்தில் இவ்வளவு கொடூரமான காயலான் கடை முதலாளிகள் இருப்பார்களா என்று தெரியாது, ஆனால் மாரிமுத்து நடித்தாலே அட இப்படித்தாம்பா எல்லோரும் இருப்பாய்ங்க என்று நம்பி விடலாம். அந்தளவுக்கு, பெரிய உடல்மொழிகள் இல்லாவிட்டாலும் உச்சக்கட்ட கொடூரத்தை வெளிப்படுத்திவிடுவதில் வல்லவர் மாரிமுத்து. அம்பேத்கர், கருப்பு நம்பியார் என்று ஒரு சில நிமிடங்களுக்கே வந்தாலும், சிறப்பாக நடித்துவிடுகிறார்கள்.
ஆனந்தி, அவர் அழகிதான் , நல்ல நடிகை தான் இல்லையென்று சொல்ல முடியாது, பரியேறும் பெருமாள் ரீகேப் போல காட்சிகள் அமைந்திருப்பது, பெரிய பலவீனம். ஒரு திருவிழாவில் இருவரும் ஒன்றாகத்தான் பங்கேற்கிறார்கள். ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கக்கூடும், அடடா இயக்குநர் பொருளாதார அல்லது பணிச்சூழல் குறித்த வேறுபாட்டை மட்டுமே எடுத்துக் கொள்கிறார் போலும் என்று நிமிர்ந்து உட்கார்ந்தால், ஆனந்தியின் அண்ணன், தினேஷை அடிக்கும் காட்சியில் சாதிய வேறுபாடு என்கிற வழக்கமான விஷயத்தை சொல்லி எதிர்பார்ப்பைப் பொய்யாக்கிவிடுகிறார். தோழர்களே, திருமாவளவனுக்கே ஒரு பெண்குழந்தை இருந்து, அதனை அவர் சார்ந்த சமூகத்தில் ஒரு பரம ஏழை அல்லது இதுபோன்ற லாரி டிரைவர் காதலித்தாலும் அவரும் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்பது தான் யதார்த்தம்.
தொழில் நுடபங்களுக்கு வருவோம்.
ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார், தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் எனலாம். ஒரு குறிப்பிட்ட பட்ஜெட்டில் குறிபிட்ட உபகரணங்களை வைத்துக் கொண்டு, அசாத்தியமான ஒளிப்பதிவை வழங்கியிருக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் அவ்வளவு நேர்த்தியாக்க் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
டென்மா, பாடல்களுக்கான இசையும் பின்னணி இசையும் அற்புதம். என்ன தான் ஏசி திரையரங்கில் வசதியாக உட்கார்ந்து பட்த்தைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், முதல்பாதியில் நாம் ஏதோ காயலான் கடையில் தகர டப்பாவில் உட்கார்ந்து இருக்கின்றோமோ என்கிற அளவிற்கு, மிகவும் யதார்த்தமான ஒலிக்கோர்வைகளைக் கொடுத்திருக்கிறார்.
மாவுலியோ மாவுலி... பாடல், ரஜினிகாந்திற்கு அட ராக்கம்மா கைதட்டு... பாடல்போல, தினேஷுக்கு அமைத்திருக்கிறது. டென்மாவின் அதிரடியும், ஸ்வேதா மோகனின் மெலடியுமாக அட்டகாசப்படுத்தியிருக்கிறது. காட்சிப்படுத்திய விதங்களும் அருமை. அனைத்துப் பாடல்களுமே மிகச்சிறப்பாகவும், கட்டிப்போடும் இசையுடனும் அமைந்திருப்பதும் குண்டின் பெரிய பலம்.
ஒரு பாடலில் வரும் சனாதனம் நொறுங்கப்போகுது... வார்த்தைகள் தான் ஒட்டுமொத்தமாக படத்தின் மிகப்பெரிய முரண்.
படத்தின் இறுதிக்காட்சியில் போரால் பாதிக்கப்பட்ட மக்களைக் காட்டும் போது, ஒரு படம் கூட இந்தியா குண்டுபோட்டு பாதித்த மக்கள் என்று காட்டப்படவில்லை. அதுதான் சனாதனத்தின் பலமே! இன்றும் சனாதனம் அல்லாத மதத்தையும் மார்க்கத்தையும் பின்பற்றும் நாடுகள் தான் அத்தகைய கொடூரமான போர்க்குற்றங்களில், குறிப்பாக அறமற்ற போரில் ஈடுபடுகின்றன. ஹிரோஷிமா நாகசாகி முதல் இன்றைய இஸ்ரேல் பாலஸ்தீனம் வரை. காரணம் சனாதனம் அங்கே இல்லாததால் தான். சனாதனம் பின்பற்றிய இந்த பாரத தேசத்தில் போர் என்று வரும் போது, அதற்கென்று ஒரு போர்க்களம் மற்றும் நெறிமுறைகள் இருந்திருக்கின்றன. ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சினையடுத்து நிர்வாணமாக ஓடிவந்த சிறுமி போல, இங்கே யாரும் ஓடிவந்ததில்லை. ஏனென்றால், போரில் கூட ஒரு தர்மம் பின்பற்றப்பட்டது, அதுவே சனாதன தர்ம்ம். சனாதன தர்மத்தின் படி நடந்த போரில், பெண்கள், குழந்தைகள், பசுக்கள், முதியவர்கள் என்று போர்க்களத்திற்குச் செல்லாத ஒருவரின் மீது, வாள் வீச்சின் காயங்கள் படுவதில்லை. இந்த தேசத்தில் அறமற்ற போருக்கு வித்திட்டதே மொகலாயர்களும் அதனைத் தொடர்ந்து நாட்டை ஆகரமிக்க வந்த கிறுத்துவர்களும் அதாவது சனாதன தர்மத்தைப் பின்பற்றாதவர்கள் தான்.
மனிதாபிமானமே இல்லாத போர்க்குற்றவாளிகள் மற்றும் தீவிரவாதிகள் பின்பற்றும் கொள்கைகளின் பக்கம் நிற்போரை உடன் வைத்துக் கொண்டு சனாதன தர்மத்தை வேரறுப்போம் என்று சொல்வது நகைப்புக்குரிய முரண் அது ஒரு மனவியாதியும் கூட.
பயன்படுத்தாத குண்டுகளைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி, அதனை கழிவாக்குதல் என்கிற கருத்தை மட்டுமே நேர்மையாகச் சொல்லியிருந்தால் இந்தப்படம் வணிக ரீதியிலான வெற்றிகளையும் தாண்டி சர்வதேச அளவில் விருதுகளை வாரிக்குவிக்கும் படமாக அமைந்திருக்கும். உலகின் அனைத்து மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கும், ஒன்று.
இரண்டாவது, ஆயுதபூஜைலாம் வேற வருது பசங்க பிசியாகிடுவாங்க என்கிற வசனம் வருகிறது இப்படததில். சனாதன தர்மத்தின் ஒரு கொண்டாட்டம் தான் ஆயுத பூஜை. பழையன கழிதலும் புதியன புகுதலும் தான் அதன் கோட்பாடு. பழையனவற்றைக் கழித்தால் தான் புதிய பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். அப்பொழுது தான் உழைப்பார்களுக்குத் தொடர்ந்து வேலையிருக்கும், கம்யூனிசத்திற்கும்.
அதைவிடுத்து, மேக் இன் இந்தியா திட்டத்தைக் கேலிசெய்து, இந்தியா மட்டும் ஆயுதங்கள் தயாரிக்ககூடாது என்றால் எப்படி..?
ஆயுதங்கள் இல்லாத நாடு சாத்தியமில்லை, ஆயுதங்கள் இல்லாத உலகம் வேண்டுமானால் சாத்தியம். கம்யூனிசமும் சர்வாதிகாரமும் கோலோச்சும் பக்கத்து நாடான சீனா ஆயுதங்கள் தயாரிக்கும் போது, இந்தியா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. சனாதன தர்மத்தைப் பின்பற்றாத அண்டை நாடுகளான பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஆயுதங்களை உற்பத்தி செய்துகொண்டிருக்கும் போது, சனாதனத்தை வாழ்வியலில் பின்பற்றினாலும் இன்றைய போர்ச்சூழலுக்கு ஏற்ப இந்தியா தன்னை தயார்ப்படுத்திக் கொள்வது காலத்தின் கட்டாயம்.
ஆயுதத்தளவாடங்கள் உற்பத்தி, வெடிபொருட்களை செயலிழக்கச் செய்து முறையாக கழிவாக்குவது என்பது இரண்டு வேறுவகையான பிரச்சினைகள்.
இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டைப் பொருத்தவரை, முறையாக கழிவாக்காத குண்டுகளைப் பற்றி மட்டுமே பேசியிருக்க வேண்டிய படம்.
கலையில் தங்களது சித்தாந்தங்களைத் திணிப்பதில் தவறில்லை, இன்னொரு சித்தாந்தம் முற்றிலும் தவறானது அதனை அழித்தொழிக்க வேண்டும் என்று அதனைப் பற்றிய சரியான புரிதல் இல்லாமலே பேசியிருப்பது அபத்தம்!
மற்றபடி ஒரு அறிமுக இயக்குநராக, அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறார் அதியன் ஆதிரை, கொண்டாடப்பட வேண்டியவர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.