a K.Vijay Anandh review
எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத நொடியில் நடக்கும் ஒரு மரணம் அதனைத் தொடர்ந்த உணர்ச்சிப் போராட்டம் இரண்டாம் பாதி.
சாகித்ய விருது பெறும் தமிழ் எழுத்தாளர் கெளரி சங்கர், அவரது அன்பான மனைவி, அவர் இந்த அளவிற்கு எழுத்துலகில் உயரக் காரணமான கல்லூரி காலத்துக் காதலி என்று கவிதையான முதல்பாதி.
பாலுமகேந்திரா வின் படத்தலைப்பு, பாலுமகேந்திராவின் மகனின் பெயரை முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த பிரகாஷ்ராஜ் க்கு வைத்திருப்பது, பாலுமகேந்திரா விற்கு மிகவும் பிடித்த நடிகைகள் என்று ஒட்டுமொத்தமாக இந்தப் படத்தை பாலுமகேந்திராவிற்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார் இயக்குநர் எம் ஆர் பாரதி. இவரது சிந்தனையில் பாலுமகேந்திரா புகுந்து விட்டார் என்றால், ஒளிப்பதிவாளர் ராஜேஷ் கே நாயர் உடம்பிற்குள்ளேயே பாலுமகேந்திரா வின் ஆத்மா புகுந்துவிட்டது போலும். அந்தளவிற்கு, பாலுமகேந்திரா வே ஒளிப்பதிவு செய்தது போன்ற பிரமிப்பு, ஒவ்வொரு காட்சியிலும்.
டெல்லியில் சாகித்ய அகாடமி விருது வாங்கிய கையோடு, தனது கல்லூரி காலத்தில் பூத்த முதல் காதலைப் பார்க்க சென்னைக்கு விமானம் ஏறுகிறார் பிரகாஷ் ராஜ். அதுவும், கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்குப் பிறகு .
கல்லூரி படிக்கும் போது திருப்பரங்குன்றம் த்தில் வைத்து திட்டமிட்டது, அந்த 24 மணி நேரச் சந்திப்பு, காதலி மோகனா - அர்ச்சனா வுடனான சந்திப்பு.
காமம் கலக்காத கண்ணியமான நட்பு, கணவனை இழந்த அர்ச்சனாவுடனான பிரகாஷ்ராஜ் இன் உரையாடல்களில் அவ்வளவு உண்மை மற்றும் யதார்த்தம்.
அதிகமாக சந்தோஷப்படும் போதும் அதிகமாகத் துக்கப்படும் போதும் பசியை மறந்துவிடுகிறார் அர்ச்சனா என்றால், அர்ச்சனாவைச் சந்தித்த அந்த அதிக சந்தோஷ தருண ங்களில் மாத்திரைகளை மறந்து மரணித்தும்விடுகிறார், பிரகாஷ்ராஜ்.
முதலமைச்சரே அவரது தீவிர வாசகர் என்கிற போது, அவரது மரணம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த, ஈஸ்வரி ராவ் நடத்தும் தொலைக்காட்சி விவாவத ங்களில் என்ன ஏதென்றே தெரியாமல் அர்ச்சனா மீது சேற்றை வாரி இறைக்கிறார்கள்.
அதைப் பார்த்துவிட்டு, அர்ச்சனாவின் மகளும் அம்மாவைத் தூற்றுக்கிறார்.
அடுக்கக நிர்வாகிகள் மிகவும் பொறுப்பாக நடந்துகொள்கிறார்கள் என்பது ஆறுதல், அர்ச்சனாவின் வீட்டுப்பணிப்பெண்ணும்.
இழவு வீட்டில் ஆதாயத்திற்கு அலையும் அரசியல்வாதியாக விஜய் கிருஷ்ணராஜ் அர்ச்சனாவிடம் மூக்குடைபடுகிறார்.
குதர்க்கமாகக் கேள்விகள் கேட்டாலும், ஒரு பிரபலத்தின் மரணத்தின் பின்னணியில் ஏதேனும் சதி இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்கத் தன் கடமையைச் செய்யும் காவல்துறை அதிகாரி நாசர் மீது, நமக்கு வெறுப்பு எதுவும் எழவில்லை. அவரது விசாரணை மிகவும் இயல்பாக அமைந்திருக்கின்றது.
21 வருடங்கள் தன்னுடன் குடும்பம் நடத்தினாலும், கணவரது எழுத்துக்களில் வெளிப்படும் நாயகி தான் அல்ல, மோகனா தான் என்று புரிந்து, அர்ச்சனா - பிரகாஷ்ராஜ் இடையிலான நட்புக்கு மகுடம் சேர்க்கும் ரேவதி, அழகு.
அரவிந்த் சித்தார்த் இசையில் இளையராஜா பாடியிருக்கும் வைரமுத்து எழுதிய பாடல் அருமை.
மு.காசி விஸ்வ நாதனின் எடிட்டிங் கச்சிதம்.
இதுபோன்ற உலகத்தர சினிமாக்களைப் படைப்பாளிகள் எளிதாக எழுதிவிடலாம். ஆனால், முதலீடு செய்வதற்கு ஒரு ரசனை வேண்டும், அதுவும் சினிமா முழு வணிக மசாலா ஆகிவிட்ட இந்த நேரத்தில்.
அதனை சாத்தியப்படுத்தியிருக்கும் வள்ளி சினி ஆர்ட்ஸ் வள்ளியம்மை அழகப்பனுக்கும் பாராட்டுகள்.
இதுபோன்ற நல்ல கதைக்களம் நேர்த்தியான திரைப்படங்கள் , அளவான பட்ஜெட்டில் எடுக்கப்படும் போது, ஐம்பதோ, எழுபத்தைந்தோ திரையரங்ககள் கிடைத்தாலும், முழுமையாக நான்கு காட்சிகள் கிடைக்கப் பெறுமாயின், பல எம் ஆர் பாரதிக்கள் வருவார்கள். ஒரு வருடத்தில் வெளிவரும் தமிழ்ப்படங்களின் எண்ணிக்கை 500% அதிகரிக்கும், தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு அறுசுவை விருந்து பரிமாறும் விதமாக அமையும். அது தமிழ் சினிமாவிற்கு நல்லதுதானே!