a K.Vijay Anandh review
பள்ளிக்கூடத்திற்கு அடுத்து கல்லூரி தானே! அதனடிப்படையில் சாட்டையில் பள்ளிக்கூடமாக இருந்த கதைக்களம் அடுத்த சாட்டையில் கல்லூரியாக மாறியிருக்கின்றது.
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான உறவு ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்கிற அதே கருத்துதான் என்றாலும், இதில் சாதீய அவலங்களை ஒரு பிடி பிடித்திருக்கிறார்கள். தொழில் நுட்ப ரீதியாகவும் பிரமாண்டப் படுத்தியிருக்கிறார்கள்.
பள்ளியில் அவ்வளவாக ஒட்டாத சாதி, கல்லூரி காலத்தில் ஒட்டிக் கொள்வது யதார்த்தம். அந்த யதார்த்தத்தைக் களமாக்கி அடுத்த சாட்டைக்குத் திரைக்கதை அமைத்து, மிகவும் தைரியமான விஷயங்களை இறுதிக் காட்சியில் சொல்லவும் செய்திருக்கிறார் இயக்குநர் எம் அன்பழகன்.
மாணவ சமுதாயத்தில் ஒரு இழவு விழுந்துவிட்டால் போதும், அதை வைத்து பிண அரசியல் மற்றும் பொருளாதார ஆதாயம் அடைய நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு காத்திருக்கும் அரசியல்வியாதிகளுக்குத் தீவிர சிகிச்சை அளித்திருக்கிறார்கள்.
அடுத்த சாட்டை படத்தில் அமைக்கப்பட்ட ஒரு காட்சி போலவே, முதலில் சிறிய நடிகர்களிலிருந்து ஆரம்பிக்கலாம்.
ஆதியாக வரும் கெளசிக், இது முதல் படம் என்றாலும் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். சாதிப்பாகுபாடால் பாதிக்கப்படும் போது, அவமானப்படும் இடத்திலும் சரி, எதிர்த்துப் போராடும் இடங்களிலும் சரி, எல்லாவற்றிற்கும் மேலாக, தந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் போன நிலையில், கல்யாணத்திற்குக் காத்திருக்கும் அக்கா, பள்ளி செல்லும் தங்கை ஆகியோருக்குமாக சேர்த்து குடும்பபாரத்தை சுமக்கத் தயாராகும் அந்த முதிர்ச்சியை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். குடும்பப் பொறுப்பும் சமூகப்பொறுப்பே என்பதை இவரது கதாபாத்திரத்தின் மூலம் இயக்குநர் பலருக்கும் புரிய வைத்துவிடுகிறார். இன்னும் சொல்லப்போனால், அடுத்த சாட்டையின் பம்பரமே இவர் தான்.
போதும் பொண்ணு அதுல்யா ரவி, இதுவரை இவரை கவர்ச்சியாகவே பார்த்து ரசித்தவர்களுக்கு ஒரு கண்ணிய விருந்து படைத்திருக்கிறார். உன்னை எனக்குப் பிடிக்கும்டா.. ஆனால் இப்ப என்ன அவசரம்..? படிப்பை முடித்து நல்ல நிலைக்கு வருவோமே! உன்னை மாதிரி ஆட்களால் தான் என்னைப் போன்ற பல பெண்கள் படிக்கவே முடியாமல் போய்விடுகிறது.." என்று அவர் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் பேசி நடிக்கும் போது, பள்ளி & கல்லூரி கால ங்களில் காதல் ராக்கெட் விட்டு பல பெண்களின் படிப்புக்கு இடையூறு விளைவித்தவர்களின் நெஞ்சம் குற்றவுணர்ச்சி பெறும். இப்பொழுது மாணவர்களாக இருப்பவர்கள், அந்தத் தவறை செய்யத் துணிய மாட்டார்கள். அதுல்யா, போதும் கவர்ச்சி, இனி தொடர்ந்து இப்படியே நல்ல கதாபாத்திரமாகத் தேர்ந்தெடுத்து நடியுஙகள்.
ஸ்ரீராம், பசங்க படத்தில் இவரைத் தூண்டிவிட்டுக் கல்லாக் கட்டுவார்கள் இவரது நண்பர்கள். இதில், யுவனைத் தூண்டிவிட்டு இவர் கல்லா கட்டுவார். நெற்றி நிறைய பட்டையுமாக, ஒட்டுமொத்தமாக சிறப்பாக நடித்திருக்கிறார்.
யுவன், வெறும் கண்கள் மற்றும் முகபாவனைகளிலேயே நடிக்கும் அற்புதமான இளம் நடிகன். இடைவேளைக்கு முந்தைய காட்சியில், இவர் ஒரே இடத்தில் நிற்க, சமுத்திரக்கனி முதல் கெளசிக் வரை அத்தனை பேரையும் ஆட்டுவிக்கும் அந்த கம்பீர நடிப்பு அழகு. அந்தக் காட்சியில் அவர் தோற்றுப் போகிறார் என்பது சுவராஸ்யமான முரண். இந்த காட்சியை அமைக்கப்பட்ட விதமும் அற்புதம், இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் ராசாமதிக்கு பெரிய பாராட்டுகள்.
அப்படியே, பெரிய நடிகர்களுக்குச் செல்வோம்.
சிங்கப்பெருமாள் தம்பிராமையா, நீவிர் நிஜமாகவே நடிப்புச் சிங்கம் தான் ஐயா. தன் மீது, எல் கே ஜி குழந்தைக்குக் கூட கொலைவெறி ஏற்படுத்தும் வில்லத்தனம். தூக்கிவிடப்பா ஏத்திவிடப்பா.. செம.
ஜார்ஜ், பிரின்சிபலின் பள்ளித்தோழன் இன்று அவருக்கே உதவியாளர். ஆம், இக்கட்டான நேரத்தில் உதவியே விடுகிறார். "தம்பி ராமையா சின்ன வயசுல அப்படிப் பாதிக்கப்பட்டதனால தான் இப்படி நடந்துகிட்டாப்ல, இனி திருந்திடுவாரு.." என்று.
ஹூமாயூன், அவர் தான் நிஜத்தில் அந்தக் கல்லூரிக்குச் சொந்தக்காரர். ஆனால், ஒரு பிடி மாஸ்டர் மாதிரி இயல்பாக வந்துபோகிறார்.
பாலசந்தரஇன் உதவியாளராக இருந்த மோகன் உட்பட அனைத்து துணைக் கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
தயாளன் சமுத்திரக்கனி, இவ்வளவு ஸ்டைலாம பிட்டான Style & Fit தமிழ்ப்பேராசிரியரை அமெரிக்காவில் கூட பார்த்திருக்க முடியாது. அவருக்கு உடையலங்காரம் மற்றும் ஒப்பனை செய்தவர்கள் இவரை ரசித்து செய்திருக்கிறார்கள். அட ஒளிப்பதிவாளர் ராசா மதி கூட இவரைத் தான் உச்சகட்ட அழகாகக் காட்டியிருக்கிறார். நடிப்பும், வசன உச்சரிப்புகள், அறிவுரை வழங்குதல் ஆகியவற்றில் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும், ஒரு நிதானம் தெரிகிறது, அது ரசிக்க வைத்திருக்கிறது.
யுகபாரதி, தேன்மொழி தாஸ் எழுதிய பாடல்கள் அனைத்துமே ஜஸ்டின் பிரபாகரன் இசையில் அற்புதமாக இருக்கின்றன.
இந்தப்படத்தில், நல்ல காட்சிகள் நிறையவே இருக்கின்றன. குறிப்பாக, கவிதாலயா கிருஷ்ணன் இன் 160 பேர்களை உறுப்பினர்களாகக் கொண்ட கூட்டுக் குடும்பம்.
முத்தாய்ப்பாக, இரண்டாம் பாதியில் ஒரு பாடலில் வரும் ஒரு காட்சி. டி என் பி எஸ் சி தேர்வுக்கு முயலும் செங்கல் சூளை யில் பணிபுரியும் தன் தாயிடம் ஆசி வாங்கும் போது, அசால்ட்டாக அந்தச் சாம்பல் கலந்த மண்ணை எடுத்து நெற்றியில் பூசிவிடும் காட்சி, டக்கென்று கண்களில் கண்ணீர் வரவழைத்துவிடும், நம் மண்ணை நேசிப்பவர்களுக்கு.
சில நெருடல்கள்,
160 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தில் ஒருவனாக வர ஆசைப்படும் சமுத்திரக்கனி, திருமணத்திற்குப் பிறகு மனைவியுடன் தனிக்குடித்தனம் நடத்துவது.
அட, மாணவர் நாடாளுமன்றம் அமைக்கப்படும் முன்பாகவே அந்தக் கல்லூரி வளாகம் முழுவதும் சுத்தமாகத் தானே இருக்கிறது என்று எண்ணத் தோன்றும் வகையில், கழுகு பார்வையால் கல்லூரி வளாகம் முழுவதையும் முன்பாகவே காட்டிவிடுவது.
முத்தாய்ப்பான பாராட்டப்பட வேண்டிய காட்சி...
கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் இருக்கும் போது வராத சாதி, சாவு வீட்டுல ஆதாயம் தேட மட்டும் வந்துருமா..! செருப்பு பிஞ்சுடும் ஓடிப்போய்டு என்று கெளசிக்கின் அக்கா பேசும் காட்சி.
படித்த ஆசிரியர்கள் வேண்டாம், படிக்கும் ஆசிரியர்கள் தான் வேண்டும் என்று பலமுறை சொல்லப்படும் காட்சிகள்...
ஆம், மாணவர்களைப் படிக்கும் ஆசிரியர்கள் வேண்டும். மாணவர்களது படிக்கும் திறன், குடும்ப பொருளாதார சூழ்நிலை மற்றும் சமூகப் பின்னணியால் அவனுக்கு ஏற்படும் மன உளைச்சல்கள் ஆகியவற்றைப் படித்து புரியும் ஆசிரியர்களால் மட்டுமே நல்ல மாணவ சமூகத்தை உருவாக்க முடியும்.
அம்மா திலகவதி ஐபிஎஸ் தனது பணிக்காலத்தில் பல குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்து திருத்தியிருப்பார். மகன் டாக்டர் பிரபுதிலக்கோ, குற்றவாளிகளே உருவாகிவிடக்கூடாது என்கிற நோக்கில் அடுத்த சாட்டையை எடுத்திருக்கிறார்.
சிறந்த ஆசிரியர்கள் அமைந்துவிட்டால், காவல்துறை, நீதிமன்றங்களுக்கு வேலையே இருக்காது தானே!