a K Vijay Anandh review
பொதுவாக சென்னையை மையமாக வைத்து வருகின்ற படங்கள் என்றாலே ஒரு குறிப்பிட்ட அல்லது ஒடுக்கப்பட்ட இன மக்கள் என்றும் அவர்களுக்கு நிலமோ வீடு வாசலோ இல்லாதவர்கள் என்றுமே காட்சிப்படுத்தப்பட்டு வருவதைப் பார்க்கலாம்.
இந்தப் படம் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, தோட்டமும் துரவுமாக சென்னையில் வாழ்ந்துகெட்ட சமூகத்தைப் பற்றிப் பேசியிருக்கிறது. மக்கள் நெருக்கத்தால், கான்கிரீட் காடாகிப் போன இன்றைய சென்னை அன்றைய தேதியில், வயலும் வாய்க்கால்களுமாக கிராமஙகளின் தொகுப்பாகத்தான் இருந்திருக்கிறது.
அப்படிப்பட்ட நிலையில் இருந்து கான்கிரீட் காடாகிப் போக ஆரம்பிக்கும் அந்த தருணம் தான் படம்.
அதனைக் காட்சிகள் மூலம் உணர்த்தியிருந்தால் ரசிகர்கள் படத்தோடு அதிகம் ஒன்றியிருக்கக் கூடும்.
ஆனால், தனது மற்றும் தனது சொல் கேட்கும் பகுதி மக்களின் கீரைத் தோட்டங்களை விற்கும் நாயகர்களின் அப்பா பாலு ஆனந்த் பேசும் வசனத்திலும், பெங்களூர் மும்பைலாம் வாஷிங்டன் மாதிரி டெவலப் ஆகிக்கிட்டு இருக்கு நம்மூரை அப்படி டெவலப் செய்யலாம்னு பார்த்தா நிலத்தைக் கொடுக்க மாட்டேன்னு அடம் பிடிக்கிறியே என்று வில்லன் ராஜ்குல்கர்னி பேசும் வசனத்திலுமாக வைத்துவிடுகிறார் இயக்குநர் ஜேபி.
நிலபுலன் இருக்கு, படிப்பு இல்லை, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நாயகர்கள் ஜேபி யும் அவரது தம்பி அக்ஷயும் பணத்திற்காக ஓடும் ஓட்டம் தான் பணம் காய்க்கும் மரம்.
மிகவும் வேகமாகவும் அல்லாமல் ஆபாசமாகவும் அல்லாமல், உடலையும் அலட்டிக் கொள்ளாமல் நிதானமாகப் பேசியே சிரிக்க வைக்கிறார்கள். அதிகாலை எழுவது பற்றிய வசனங்களில், சீக்கிரமா எழும் பறவைக்குத் தான் டா புழு கிடைக்கும் என்கிற யதார்த்த மொழியைப் பாலு ஆனந்த் பேச, அதனால தான் நாங்க லேட்டா எழுந்திருக்கிறோம்... ஏன்..? ஏன்னா சீக்கிரமா எழுகிற புழு செத்துப் போயிடும்ல..
கொஞ்சம் அபத்தமாக இருந்தாலும், தன்னைத் தாழ்த்திக் கொண்டு விழிப்புணர்வு செய்யும் வடிவேலு ரக காமெடிகள் படம் முழுவதும் வியாபித்து இருக்கின்றன.
வில்லன் அனுப்பும் ஆட்கள் வக்கீல் உடை அணிந்து கொண்டிருக்கும் டோமரை வெளு வெளு என்று வெளுக்க, இனி தம்பியுடன் இருந்தால் தான் பாதுகாப்பு என்று வீட்டிற்கு வந்து தூங்கும் டோமரை தம்பி என்று நினைத்துக் கொண்டு மறுபடியும் வில்லன் ஆட்கள் வெளுக்க, இப்பவும் நான் எனக்காக அடிவா ங்கலயாடா என்று புலம்பும் டோமர் ஜேபி அடுத்த காட்சியில் மருத்துவமனையிலும் பிணமாக அடிவாங்கும் காட்சி வயிறுகுலுங்க சிரிக்க வைக்கும் ரகம், .ஒரு இயக்குநர் நாயகன் உருவாகிவிட்டார்.
எதிரியை அழித்தும் முற்றுப்புள்ளி வைக்கலாம், அவனது பிறப்பைப் பற்றிய கவலையைப் போக்கி திருத்தியும் அரவணைத்துக் கொள்ளலாம் என்பதாக இறுதிக்காட்சி அமைக்கப்பட்டிருப்பது பாராட்டத்தகுந்த விஷயம்.
கடைசியில், அரசியல்வாதிகளைப் பொருத்தவரை மக்கள் தான் பணம் காய்க்கும் மரம். அவர்களிடமிருந்து எடுத்ததை அவர்களுக்கே திருப்பிக் கொடுத்தாலும் வள்ளல் என்கிறாய்ஙக..
என்கிற வசனத்தைச் சரியாகப் புரிந்துகொண்டிருந்தால், காமராஜர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த திராவிட அரசியல் என்பதே தமிழகத்தில் தோன்றியிருக்காது என்றால் அது மிகையல்ல.
நடிகர்களாக பாலு ஆனந்த், பாரதி கண்ணன், ஜேபி, அக்ஷய், ராஜ் குல்கர்னி, அகல்யா, கெளதமி, படவா கோபி, போஸ் வெங்கட் என்று அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
மொட்டை வில்லன் சோனு பாண்டே தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கும் ஒரு நல்ல நகைச்சுவை கலந்த வில்லன்.
எல் வி கணேஷின் இசையும் ஹார்முக் இன் ஒளிப்பதிவும் ஆனந்த லிங்க குமாரின் எடிட்டிங்கும் குறையில்லா வண்ணம் இருக்கின்றன.
யாரையும் புண்படுத்தாத, ஆபாசங்கள் இல்லாத நகைச்சுவைக் காட்சிகள் நிறைந்த மரமாக பணம் காய்க்கும் மரம்!