a K Vijay Anandh review
1994 இயக்குநர் இமயம் பாரதிராஜா வின் கருத்தம்மா, தமிழ் சினிமா தொடாத அல்லது தொட அஞ்சிய பெண் சிசுக்கொலை யை வெள்ளித்திரையில் வெளிச்சம் போட்டுக் காட்டியது. அந்தப்படத்தின் மூலம் கிடைத்த விழிப்புணர்ச்சி மற்றும் அரசின் நடவடிக்கைகளால் பெண் சிசுக்கொலை பெருமளவு தடுக்கப்பட்டுவிட்டது.
2019 இயக்குநர் மதுமிதா, இன்னும் அதிக துணிச்சலுடன் கிராமப்பகுதிகளில் நடக்கும் முதியவர் கொலைகளைப் பற்றி அலசியிருக்கிறார், கேடி என்கிற கருப்புத்துரை படத்தில்.
சிசுவைக் கொல்வது, கருவிலேயே கலைப்பதே மிகப்பெரிய பாவச்செயல். ஆனால், குழந்தை குட்டிகளைப் பெற்று வளர்த்து, படிக்க வைத்து, ஆளாக்கி, கல்யாணம் செய்து வைத்து, அவர்களின் குழந்தை குட்டிகளை வாஞ்சையாக வளர்த்து ஆளாக்கிக் கொண்டிருக்கும் வீட்டின் தலைமகனைக் கேவலம் சொத்துக்களைப் பிரித்துக் கொள்வதற்காகவும், யார் பார்த்துக்கொள்வது என்கிற பிரச்சினைகளைக் களைவதற்கும், சோதிடரை வரவழைத்து நாள் குறித்துக் கொல்ல முயற்சி செய்யிறீங்களேடா…
இது குறித்து, அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும். சமூக ஆர்வலர்களும் இது குறித்த தகவல்களை அரசுக்குத் தந்து உதவவேண்டும். குழந்தை திருமணத்தை புகார் கொடுத்து தடுத்து நிறுத்துவது போல, இப்படி முதியவர்கள் கொல்லப்படுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும்.
சரி, கே டி என்கிற கருப்புத்துரைக்கு வருவோம். அப்படி, சில மணி நேரங்களில் தன் சாவுக்கு நேரம் குறிக்கப்பட்ட நிலையில், மு ராமசாமி தப்பித்து விடுகிறார். மூன்று மகன்கள், ஒரு மகள் பேரன் பேத்திகள் , சில சுற்றம் உறங்கிய நிலையில், ஊரைவிட்டே கிளம்பிப்போகிறார்.
அவருக்கு தென்காசிப்பக்கம் ஒரு சிறுகிராமத்தில் ஒரு உறவுகிடைக்கின்றது. மூன்று மகன்கள், ஒரு மகள் பேரன் பேத்திகள் கொடுக்காத மன மகிழ்ச்சியை குட்டி - நாக விஷால் கொடுக்கிறான். அவனும் ஒரு அநாதை, ஆனாலும் கெளரவத்தோடு கோயிலில் சிறு சிறு வேலைகள் செய்து உண்டு உறங்கி வாழ்க்கை நடத்துகிறான்.
கருப்புத்துரையின் அனுபவ அறிவுக்கும், குட்டியின் ஏட்டறிவுக்கும் இடையே நடக்கும் சண்டைகள் சுவராஸ்யம். கிடைத்த வேலையைச் செய்து கிடா பிரியாணி சாப்பிட்டு மகிழ்வது, கருப்புத்துரையின் கொள்கை என்றால், கருப்புத்துரையின் ராசியை வைத்தே கல்லாகட்டுவது குட்டியின் குறும்புத்தனம் மட்டுமல்ல சாணக்யத்தனமும் கூட.
அங்கே அவர்களுக்குக் கிடைக்கும், கோயில் அர்ச்சகர், உணவக முதலாளி, கூத்துகட்டுபவர் என்று அத்தனை பேரும் கச்சிதமாக வாழ்ந்திருக்கிறார்கள்.
நாம் அதிகம் நேசிப்பவர்களை நம்முடனே வைத்துக் கொள்ள நினைப்பதோ அல்லது அவர்களுடனே நாம் இருந்துவிடலாம் என்று நினைப்பதோ கூடாது, எட்ட நின்று அவர்கள் நன்கு வாழ்வதைப் பார்த்து ரசிக்கவேண்டும். நமது பாசமே பாசக்கயிறாக ஆகிவிடக்கூடாது, என்று கருப்புத்துரையின் முன்னாள் காதலி, முன்னாள் என்று சொல்வதை விட, பள்ளிப்பருவத்தில் கிடைக்கும் முதல் காதலி சொல்லிப் புரியவைக்கிறார்.
“நீ எப்பத்தான்டா சின்னப்புள்ள மாதிரி நடந்துக்கப் போற..?..” என்று ஒரு சின்னப்புள்ளையிடம் கேட்கும் முரணான கேள்வி, அந்த இடம் அற்புதம்.
அப்படி படம் முழுவதும் அளவான அழகான வசனங்களால் நிரப்பியிருக்கிறார் சபரிவாசன் ஷண்முகம். மெய்யேந்திரன் கேம்புராஜின் ஒளிப்பதிவில் நமது கிராமங்கள், கோயில்கள், திருவிழாக்கள், வாய்க்கால் வரப்புகள் என்று அனைத்தும் ரம்மியமாகத் தெரிகின்றன. விஜய் வெங்கட்ரமணன், அளந்து வெட்டியிருக்கிறார். ஒலி வடிவமைப்பாளர் சுபாஷ் சாஹூ, ஒலிக்கலவை செய்த சுபிர் தாஸ் ஆகியோரும் தங்களது பணிகளைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். சபரிவாசன் ஷண்முகம் மற்றும் கார்த்திகேய மூர்த்தி ஆகியோரின் பாடல்வரிகள் மெல்லிய தென்றல்போல வருடுகிறது. கார்த்திகேய மூர்த்தி, பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார், தனது அட்டகாசமான பாடல்களுக்கான இசை மற்றும் பின்னணி இசை மூலம்.
விக்ரம் மெஹ்ரா, சித்தார்த் ஆனந்த்குமார் ஆகியோர், இப்படி ஒரு கதை கேட்டு தயாரிக்க முன்வந்திருப்பது, தயாரிப்பாளர்களுக்கும் ரசனை இருக்கிறது என்பதற்கு உதாரணம்.
மதுமிதா, முதல் பாராவில் குறிப்பிட்டது போல, பாரதிராஜாவுக்கு அடுத்து, அநாயசமான ஒரு கதைக்கருவை எடுத்துக் கொண்டு, அட்டகாசப்படுத்தியிருக்கிறார்.