a K Vijay Anandh review
தனது முன்னோர்கள் நார்த்துல்த்ரா காட்டுவாசிகளுக்குச் செய்த துரோகத்தினால் விளைந்த மிகப்பெரிய அணைக்கட்டை உடைத்து அருன்டேல் இளவரசிகள் தங்களது சாம்ராஜ்யத்தைப் பீடித்த சாபத்திலிருந்து விமோசனம் பெற வைப்பது தான் ப்ரோசன் 2 வின் ஒருவரிக்கதை.
கதாபாத்திரங்கள், அழகான வீடுகள், தெருக்கள், மிகப்பெரிய மலைகள், அடிவாரங்கள், அரண்மனை, ஆலயம், கடல், அடர்த்தியான காடுகள், விலங்குகள், பிரமாண்டமான மலை மனிதர்கள், மிகப்பெரிய அணைக்கட்டு மற்றும் ஐஸ் புயல்கள் என்று கிராபிக்ஸ் காட்சியில் மிரட்டியிருக்கிறார்கள், அத்தனையும் தத்ரூபம்.
மூத்த இளவரசி எல்சா வுக்கு ஸ்ருதிஹாசன் குரல் கொடுத்திருக்கிறார். அவ்வளவு நேர்த்தியாக இருக்கின்றது. தனக்கு இருக்கும் மாய சக்தியின் உதவியுடன் மாயக்குதிரையில் பயணித்து கடல், காடு, மலைகள் எல்லாம் தாண்டி, தங்களது இராஜ்யத்திற்கு ஏற்பட்ட கெடுதல்களின் காரணங்களை அறிந்துகொள்கிறார்.
அதே நேரம், அவர் தெரிந்துகொண்டதை அறிந்துகொண்ட இளைய இளவரசி அன்னா, பிரமாண்டமான மலைமனிதர்களை வைத்து அணையை உடைத்து காட்டைக் காப்பாற்றுகிறார். அன்னாவிற்கு திவ்யதர்ஷினி குரல் கொடுத்திருக்கிறார்.
எல்சா மற்றும் அன்னாவிற்கிடையிலான சகோதர பாசப்பிணைப்புகளில் வெளிப்படுத்தியிருக்கும் முகபாவனைகளை நிஜமான மனிதர்கள் கூட வெளிக்காட்ட இயலுமா என்பது சந்தேகமே! அந்த அளவிற்கு கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் காட்சிகளில் மெனக்கெட்டிருக்கின்றார்கள்.
அன்னாவின் காதலன் கிரிஸ்டாஃப் ஒரு நாயகனைப் போல் வருகிறார் என்றால், பனிக்கட்டி குறுமனிதனாக வரும் ஓலாஃப் தனது நகைச்சுவையால் கதையைக் கலகலப்பாக்கி நகர்த்தியிருக்கிறார். ஓலாஃப் க்குக் குரல் கொடுத்திருப்பது சத்யன், அதுவும் பிரமாதமாக இருக்கிறது.
வால்ட் டிஸ்னி யின் 58 ஆவது படமாக வெளிவந்திருக்கும் ஃப்ரோஷன் 2 ஐ இயக்கியிருக்கிறார்கள் கிறிஸ் பக் மற்றும் ஜெனிபர் லீ.
குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களும் வியந்து ரசிக்கும் படமாக வெளிவந்திருக்கிறது ஃப்ரோஷன் 2 .