a K.Vijay Anandh review
ஆக்ஷன் படங்கள என்றாலே சாத்தியம் இல்லாத விஷயங்களை, அதாவது ஆக்ஷன் காட்சிகளை சாத்தியம் என்பது போல் காட்டுவதுதான். அதுதான் உலகம் முழுவதும் வெளிவந்து வெற்றிபெற்றுக் கொண்டிருக்கும் ஆக்ஷன் படங்களிலும் காணப்படும் விஷயம்.
ஆனால், இதில் அன்பறிவின் அட்டகாசமான ஆக்ஷன் காட்சிகளில் நடிகர்கள் நேரடியாகச் சண்டை போடும் காட்சிகள் 99.99 நம்பும் படியும், வாகனங்களில் பறப்பது மட்டும் குறிப்பாக பைக்கில் சுவருக்குச் சுவர் தாவுவது மட்டுமே கொஞ்சம் அந்நியப்பட்டும் நிற்கின்றன.
மற்றபடி அடுக்குமாடிக் கட்டிடத்தில் இருந்து விஷால், ஆகன்ஷா பூரி சண்டை போட்டுக் கொண்டே விழுவது ஜாக்கி சானின் ஆரம்ப காலப் பட ங்களை நினைவுப்படுத்துகிறது, ரசிக்கவும் முடிகிறது.
துரத்திக் கொண்டே வரும் போது ஆகன்ஷா பூரி கடலுக்குள் குதித்து தப்பித்துவிடாத வண்ணம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டே விஷால் பிடிப்பது கைதட்டல் ரகம், தியேட்டரில் விசில் பறக்கத்தான் செய்கிறது
130 கோடி இந்தியர்களின் கனவான தாவூத் இப்ராஹிமை இந்தியாவுக்குக் கொண்டுவருவது என்பதை அவனையொத்த கதாபாத்திரமான மாலிக்கைக் கொண்டு வருவதன் மூலம் சீக்கிரம் நனவாகிடும் என்கிற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறார்கள். இதற்காகவே ஆக்ஷன் குழுவினர் இந்தியாவிற்கு வெளியே செல்லும் போது ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.
பாகிஸ்தானில் புகுந்து மாலிக் கைத் தூக்குவது நம்பமுடியாத அளவிற்கு இல்லை. ஏனென்றால், இந்திய இராணுவத்தால், அது இயலும் என்பது நிஜமாகவே நிரூபிக்கப்பட்டுள்ளது. விஷால், இந்திய இராணுவத்தில் கர்னல் பதவியில் இருக்கும் வீரராகத் தான் செல்கிறார்.
இராணுவ வீரர் என்றாலே விஷால், கொஞ்ச நாட்கள் முன்பு காக்கி சட்டை என்றாலே விஜய்காந்த் என்பது போல, அவரது உயரம், உடற்தகுதி அப்படியே மிடுக்காகப் பொருந்திப் போகிறது .
அப்படி ஒரு சர்வதேச அளவிலான வில்லனைத் தேடிப்போக மிகவும் நியாயமான காரணங்கள் அமைந்திருப்பது இந்த ஆக்ஷன் படத்திற்கான பலம்.
கொழுந்தியாள் ஐஸ்வர்யா லட்சுமியுடனான அந்தக் கறை படிந்த காதல் அழகு!
ஐஸ்வர்யா லட்சுமி, சிறிது நேரமே வந்தாலும், சிறப்பாக இடம் பிடித்துவிடுகிறார் ரசிகர்களின் மனதில்.
இந்தப்பூனையும் பால் குடிக்குமா..? என்பது போன்ற ஆகன்ஷா பூரி, தனது கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் அளவிற்கு உழைத்திருக்கிறார்.
சக இராணுவ வீரராக தமன்னா வும் அட்டகாசப்படுத்தியிருக்கிறார். உண்மையாகவே பாகிஸ்தானில் படப்பிடிப்பு நடத்தியிருந்தால், பெனாசிர் பூட்டோ தான் நேரில் வந்துவிட்டாரோ என்று பாகிஸ்தானியர்கள் நினைக்கும் அளவிற்கு சில ஒப்பனை மற்றும் கோணங்களில் பெனசிர் மாதிரியே இருக்கிறார்.
சாரா - விஷால், யோகிபாபு- விஷால் சம்பந்தப்பட்ட நகைச்சுவைக் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.
அதைப்போலவே குண்டு வைத்து தேசிய அரசியல் தலைவர் முதல் ராம்கி கொல்லப்படும் காட்சி வரை நடமாடும் ஆகான் ஷா பூரியின் கழுத்தில் இருக்கும் டாட்டூவை விஷாலும் காவல்துறை அதிகாரியும் கண்டுபிடிப்பதில் வியப்பில்லை. அவரது தோழியின் தாத்தா போன்று ஒருவரும் அதை உன்னிப்பாகப் பார்த்திருப்பதாகக் காட்டியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.
இந்திய இராணுவம் கடந்த 10 ஆண்டுகளாக கண்டுபிடிக்க முடியாத மாலிக்கை மூன்றே நாளில் விஷால் தூக்கி வரும் ஆக்ஷன் படத்தின் கிளைமாக்ஸைக் கூட நம்பலாம்,
ஆனால், விழா மேடைக்கு ஏசி அமைத்ததற்கு பில்லுக்கு பணம் கொடுக்க தயாராய் இருக்கும் தமிழக முதல்வர் பழ கருப்பையா, அவர் நல்ல ஆரோக்கியமாக இருக்கும் போதே அவரது மகன் துணைமுதல்வர் ராம்கி யை அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக அடையாளப்படுத்துவது, அவரும் மேடையிலும் சரி, இக்கட்டான நேரத்திலும் சரி உளறாமல் பேசுவது, முதலமைச்சராக இருக்கும் பழ கருப்பையாவின் இன்னொரு மகன், இராணுவ அதிகாரியாக இருப்பது, மருமகன் வெளியுறவுத்துறை அதிகாரியாக இருப்பது போன்றவற்றைத் தான் நம்பமுடியவில்லை, எல்லாவற்றுக்கும் மேல் தங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் களங்கத்தைப் பொய் என்று நிரூபித்து மீண்டும் நல்ல பெயர் வாங்குவதும், அண்ணன் கொலையுண்ட பிறகு, தம்பி விஷால் முதலமைச்சர் பதவிக்குப் போட்டி போடாமல் இருப்பதும் வேற லெவல்.
கடவுள் இல்லையென்று சொல்லவில்லை, இருந்தால் நன்றாக இருக்கும் என்று தான் சொல்கிறேன் என்பது போன்றது, முந்தின பாராவில் குறிப்பிடப்பட்டிருப்பது.
ராம்கி, சாயாசிங் அருமையாக நடித்திருக்கின்றார்கள்.
பத்ரியின் அளவான வசனங்களும் , டட்லியின் இன் நேர்த்தியான ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலம். ஹிப்ஹாப் ஆதியும் தனது பங்களிப்பை சரியான அளவில் வழங்கியிருக்கிறார்.
இது உங்கள் படமா என்று கேட்டுவிடுவார்களோ என்கிற பயமெல்லாம் வேண்டாம் சுந்தர் சி, அன்பறிவுக்கு வேலை இல்லாத காட்சிகளில் தெரிவது அனைத்துமே இது உங்கள் படம் தான் என்பதற்கான சுந்தர் சி டச்சுகள் தான்.
ஆக்ஷன், விஷாலுக்கு ஒரு சாஹோ!