a K.Vijay Anandh review
”காட்டைப் புடுங்கிக்குவான்.. பணத்தைப் புடுங்கிக்குவான்…படிப்பை மட்டும் எவனாலும் புடுங்க முடியாது…” சிவசாமி தனுஷ் பேசும் வசனத்தில் இதுவரை எடுத்துக் கொள்வார்கள் போராளி வேஷம் போட்டுக்கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள். அடுத்து வரும் மீதி தான் அதிமுக்கியமான ஒன்று, “அந்தப் படிப்பைக் கொண்டு நீ அதிகாரத்திற்கு வரவேண்டும். அந்த அதிகாரத்தைக் கொண்டு, யாரையும் வெறுக்காமல், அவய்ங்களை மாதிரி யாருக்கும் தீங்கிழைக்காமல் நல்லது செய்யவேண்டும்… ஒரே மண்ணு ஒரே மொழி, நமக்குள் எதற்கு பிரிவினை..? “
படத்தின் இறுதிக்காட்சியில் தனது இளைய மகன் சிதம்பரம் - கெவினிடம் தனுஷ் பேசும் இந்த ஒற்றை வசனம் போதும், வெற்றிமாறனுக்கு நன்றிகள், பாராட்டுகள்.
இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம், சிவசாமி, எல்லாவற்றிற்கும் காரணம் தான் பின்பற்றும் ஆன்மீகம் தான் என்று அதனைத் தூற்றவில்லை, தனது சுய ஆன்மீக அடையாளங்களை இழக்கவில்லை, துறக்கவில்லை. போலியான சமத்துவப்பிரச்சாரங்களுக்கு மயங்கி அதில் ஏமாறவில்லை, நம் பாரத நாட்டினை அடிமைப்படுத்தியவர்களின் மதங்களுக்குத் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை, அந்த வகையில், சிவசாமி, சாமியாகவே உயர்ந்து நிற்கிறார். நெற்றி நிறைய திரு நீறும் நடுவில் ஒரு பொட்டுமாக, சிவசாமியும், அவரது மனைவி பச்சம்மாளாக வரும் மஞ்சு வாரியரும், நம் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் ஆதர்ய நாயகர்களாகக் கண்முன் காட்சி தருகிறார்கள். மச்சான் பசுபதி கூட, அப்பொழுதுதான் குளித்து முடுத்து ஈரம் காயாமல் நிற்கும் மூத்த மருமகனுக்கு திருநீறு பூசிவிடுவது மிகவும் யதார்த்தம்.
தனுஷ், ஒரு நடிப்பு அரக்கன் தான். அதுவும் வெற்றிமாறனுடன் கைகோர்த்துவிட்டால், விஸ்வரூபம் எடுத்து விடுகிறார். சாராயம் காய்ச்சுதல், அடிதடி, வெட்டுக்குத்து என்று ஒரு பாதி போய்விட்டாலும், மனைவி, குழந்தைகள், குடும்பம் என்று அமைதியாக வாழத்துடிக்கும் அந்த முதிர்ச்சியில் முத்திரை பதித்துவிடுகிறார். தனது கோபங்களும், ஆக்ரோஷங்களும் மகன்களுக்குத் தொற்றிவிடக்கூடாது என்று மிகவும் கவனமாக, அதுவும் மூத்த மகன் வேல்முருகன் – தீஜய் அருணாச்சலத்தை இழந்த நிலையிலும் அவர் காட்டும் நிதானம் கூட பயமுறுத்திவிடுகிறது.
தனுஷின் இளைய பருவம், கொஞ்சம் கலர்ஃபுல்லாக இருப்பதும், அடுத்த இருபது வருடங்களில் கொஞ்சம் வறட்சியாகக் காட்சியளிப்பதையும் ஒளிப்பதிவாளர் உல்டாவாகக் காட்டியிருக்கலாம் என்றாலும், முந்தின தலைமுறை அனுபவித்த வளம் , இன்றைய தலைமுறைக்கு இல்லை என்கிற விதமாகக் கூட அதனை எடுத்துக் கொள்ளலாம்.
முதல் பாதியில், அண்ணன் சுப்பிரமணிய சிவா வின் பஞ்சமி நிலப்போராட்டங்களுக்குப் பக்க பலமாக நின்று, தன் குடும்பம் அத்தனையையும் இழக்கிறார். அவருக்கும், அவரது அண்ணன் மனைவியின் தங்கை மாரியம்மாளாக வரும் அம்மு அபிராமி க்கும் இடையிலான அந்தக்காதல் அழகு. அதிலும், குதிகாலில் கட்டை வைத்து, சென்றாயனிடம் செருப்பு தைய்த்து, மாரிம்மாள் காலுக்கு அணிவித்து அழகு பார்க்க, அதிலிருந்து ஆரம்பிக்கிறது பிரச்சினை. நிதிஷ், ஏ வெங்கடேஷ் கூட்டணியின் அடக்குமுறையை வேரோடு வெட்டிச்சாய்க்கிறார், இளவயது தனுஷ். தற்காப்புக்காக எடுத்த அருவாள் என்று, தனுஷ்க்காக பிரகாஷ்ராஜ் வாதாடி, குறைந்தபட்ச தண்டனையை வாங்கித் தருகிறார்.
செய்த தவறுகளுக்காகத் தண்டனை அனுபவித்துவிட்டு, மஞ்சு வாரியாரை மனைவியாக ஏற்றுக் கொள்வதிலிருந்து சிவசாமியின் பக்குவமும் நிதானமும் அன்பும் கலந்த வாழ்க்கை ஆரம்பிக்கின்றது.
தனுஷுக்கு அடுத்து ஒரு நடிகரைக் குறிப்பிட வேண்டுமானால், அது கெவின் கருணாஸ் தான். அதே வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில், நீ கேளேன் நீ கேளேன் என்று வாயைக் கொடுத்து புண்ணாக்கிக் கொள்வார் கருணாஸ். அதே கருணாஸின் மகன் இதில் என்னமாய் வாய்பேசுகிறார், அதை அப்பாவாக தனுஷ் நின்று கேட்கிறார் என்றால், என்ன மாதிரியான ஒரு நடிப்பு பரிணாம வளர்ச்சி.
அண்ணனாக வரும் தீஜய் அருணாச்சலமும், முத்திரை பதிக்கிறார். அப்பாவை அவமானப்படுத்திய வடக்கூரான் நரேனை செருப்பால் அடித்து அவர் பேசும் அந்தக் காட்சி ஒன்றே போதும், சிறந்த நடிகராக வலம் வருவார்.
சாணி தெளிப்பது முதல், சாப்பாடு ஆக்கிப்போடுவது வரை மஞ்சு வாரியார், மண்ணின் மகளாக வாழ்ந்திருக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக வரும் பாலாஜி சக்திவேல், தனுஷ் அண்ணனாக வரும் சுப்ரமணிய சிவா, வழக்கறிஞர் பிரகாஷ்ராஜ், பவன் என்று அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். வெள்ளையும் சுள்ளையுமாக உடுப்பு களையாமல் பஞ்சாயத்துப் பேசும் வேல்ராஜின் கதாபாத்திரம் தான் கொஞ்சம் இடிக்கிறது. மனிதர், ஒளிப்பதிவில் அசத்தி விடுகிறார்.
திரைக்கதை அமைப்பு பாட்ஷா படத்தையும் கருப்பிக்குப் பதில் சிகப்பி வருவது பரியேறும் பெருமாளையும் ஞாபகப்படுத்தினாலும், பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது தான் அசுரன். வணிக திரைப்படம் என்பதற்காக, சில மாறுதல் சேர்க்கைகள் ஒரு இயக்குநருக்கு அவசியமாகின்றன தான் என்றாலும், ஒரு முழுமையான மண்சார்ந்த படைப்பாக அசுரனை இயக்கியிருக்கிறார் வெற்றிமாறன்.
ஜீவி பிரகாஷ்குமாரின் இசையில் ஏகாதசி, யுகபாரதி, ஏக் நாத், அருண்ராஜா காமராஜா ஆகியோரின் பாடல்கள் அருமை, பின்னணி இசையும் படத்தை விறுவிறுப்பாகக் கொண்டு செல்ல உதவியிருக்கிறது.
நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டார வழக்கை ஆவணப்படுத்தியிருக்கும் விதத்தில், பன்முகங்கள் கொண்ட தமிழ்த்தாய்க்கும் பெருமை சேர்த்திருக்கிறார், வெற்றிமாறன்.
அசுரன், குணத்தால் இறைவன்!