a K Vijay Anandh review
கிட்டத்தட்ட தமிழ் சினிமா மறந்தே விட்ட இதிகாசக் கதைகளை, தமிழ் சினிமா தவிர இந்தியாவின் மற்ற மொழிகளில் திரைப்படமாக எடுத்து உலகளாவிய அளவில் வணிகரீதியிலான வெற்றிப்படங்களாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இங்கே இதிகாசமும் வேண்டாம், கற்பனையாகப் புனையப்பட்ட – பாகுபலி போன்ற படங்களை நேரிடையாகத் தயாரிக்க/ இயக்க/ நடிக்க யாருமே முன்வராதது துரதிஷ்டம்.
நடிகர் திலகம் சிவாஜிக்குப் பிறகு, அவரது கலையுலக வாரிசான கமல்ஹாசனுக்கோ அல்லது நிஜ வாரிசான பிரபுவுக்கோ அல்லது தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாருக்கோ கிடைக்காத வாய்ப்பு கர்ணனாக நடிக்க நம்முடைய ஆக்ஷன் ஹீரோ அர்ஜுனுக்குக் கிடைத்திருக்கிறது. இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப, சண்டைக்காட்சிகளிலும் நடிப்பிலும் இன்னொரு பரிணாமம் காட்டி அசத்தியிருக்கிறார் அர்ஜுன். நிச்சயம் சிவாஜியின் ஆத்மா அகமகிழ்ந்திருக்கும்.
துரியோதனனாக தர்ஷன் நடித்திருக்கிறார்., படம் துரியோதனனைப் பற்றியதுதான் என்றாலும் அவனது 99 உடன்பிறப்புகளால் கொடுக்க முடியாத தைரியத்தையும் , பாண்டவர்களை துவம்சம் செய்துவிடலாம் என்கிற நம்பிக்கையும் துரியோதனனுக்குக் கொடுத்தது கர்ணம் மட்டும் தானே! அர்ஜுனனுக்கு நிகராக , நம் அணியில் யாருமில்லையே என்கிற குறையைத் தீர்த்தவன் கர்ணன் மட்டும் தானே!
தனிப்பட்ட முறையில், சிறந்த வில் வீரனாகவும் ஈகையில் சிறந்தவனாகவும் விளங்கினாலும், செஞ்சோற்றுக் கடன் தீர்க்கத் தான் பஞ்சபாண்டவர்களின் மூத்தவன் என்கிற உண்மை தெரிந்தும், துரியோதனனுடனான நட்பிற்கு விசுவாசமாக இருந்து குருஷேத்திரப்போரில் மடிகிறான் கர்ணன்.
ஆறடி உயர தர்ஷன் அநாயசமாக கதாயுதத்தைத் தூக்கிக்கொண்டு நடப்பதும், பீமனுடன் சண்டையிடுவதும் அபாரம். கடைசி வரை, தான் கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று, தன்னை எதிர்ப்பவர்களுக்கு கிருஷ்ணனே துணை நின்றாலும், தீரமுடன் எதிர்த்து நின்று மடிகிறான்.
மஹாபாரதம் நமது கதை, நமது கதைகள் தலைமுறை தலைமுறையாக நமது சமூகத்தில் சொல்லப்பட்டு வரவேண்டும். சினிமா என்கிற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி மிகவும் பிரமாண்டமான முறையில் சிலாகித்துச் சொல்லியிருக்கிறார்கள் தயாரிப்பாளர் முனிரத்னா வும் இயக்குநர் நாகண்ணாவும்.
இரண்டாவது பாதி முழுவதும் போர்க்களக்காட்சிகள் தாம்.
நம்மூர் கனல்கண்ணன் தான் சண்டைக்காட்சிகளை அமைத்திருக்கிறார். ஒவ்வொரு நொடியும் நம்மை இருக்கையின் விளிம்புக்கு அழைத்துச் செல்வது போன்ற மயிர்க்கூச்செரியும் சண்டைக்காட்சிகள்.
குறிப்பாக, அர்ஜுனனின் மகன் அபிமன்யு ( நிகில் குமார் ) போர்க்களத்திற்குள் வந்து எதிரிகளைத் துவம்சம் செய்யும் போர்க்களக்காட்சி அட்டகாசம். சக்கர வியூகம், நாக வியூகம், கருட வியூகம் போன்ற போர் உக்திகள் இன்றளவும் சர்வதேச அளவில் நம்மை – நம்மை இதிகாசங்களை உற்று நோக்க வைக்கின்றன என்றால் அது மிகையாகாது. படத்திலும் ஆயிரக்கணக்கான நடிகர்களைக் கொண்டு மிகவும் அற்புதமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இறுதிக்காட்சியில் துரியோதனனுக்கும் பீமனுக்கும் ( டேனிஷ் அக்தர் ) இடையிலான கதா யுத்தம், இதுகாறும் நாம் திரையில் ரசித்திராத பிரமாண்டம்.
ஜெயனன் வின்செண்ட்டின் ஒளிப்பதிவு, ஹரிகிருஷ்ணாவின் இசை படத்திற்குப் பெரிய பலம்.
துரியோதனனாக வரும் தர்ஷன், கர்ணனாக வரும் அர்ஜுன், திரெளபதியாக வரும் சினேகா ஆகியோர் தங்களது தனித்திறமைகளால் அந்தந்த கதாபாத்திரங்களாக மிளிர்கிறார்கள்.
சகுனியாக வரும் பி ரவிசங்கரும் மிரட்டுகிறார். துரியோதனன், ஒரு கூட்டத்தையே அதாவது தனது மாமா சகுனி உள்ளிட்ட அம்மா வீட்டார் அனைவரையும் கொலை செய்ய முடிவெடுத்துவிட்டு பாதாளச் சிறையில் தள்ளும் போது, சகுனியை மட்டும் உயிரோடு இருக்க வைத்து, துரியோதனைப் பழிவாங்குவதாகக் காட்டுவது பிரமிப்பின் உச்சம்.
கிருஷ்ணனாக நடித்த வி ரவிச்சந்திரன், அர்ஜுனனாக நடித்த சோனு சூட் என்று அத்தனை கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
முனிரதனா வின் குருஷேத்திரம் , நிச்சயம் பார்த்து ரசிக்க வேண்டிய பிரமாண்டம்.