a K Vijay Anandh review
விக்ராந்த் - வசுந்த்ரா வசிக்கும் வீடு, பெரும்பாலும் முற்றத்திலேயே சமையல் காட்சிகள் என்று கடந்துவிடுவதால், அந்தச் சுவர் மட்டுமே தெரிகிறது. ஆனால், வீடு ஒன்றும் சிறியதாக இல்லை, விசாலமாகத் தான் இருக்கிறது. பசுமாடுகள், காளை மாடுகள், போதாக்குறைக்கு புதிய வரவாக ஒரு ஒட்டகம்.
தமிழர்களின் கலாச்சாரம் என்பது கால் நடைகளுடன் பின்னிப்பிணைந்திருப்பதை அழகாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர் ஜெகதீசன் சுபு.
சகோதரர்களுக்கிடையில் சட்டப்போராட்டம், பல வருடங்கள் கழித்து மீட்ட விவசாய நிலத்தில் உழுது பயிரிடக் கடன் வாங்க வங்கிக்கு நடையாய் நடக்கும் விக்ராந்த். அட, இவர் நடிகரா..? இது ;படத்திற்கான படப்பிடிப்பா..? அல்லது நிஜமான விவசாயியைக் கேண்டிட் கேமராவில் பதிவு செய்திருக்கிறார்களா என்கிற அளவிற்கு, மனிதர் அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
வசுந்த்ரா கேட்கவே வேண்டாம், கிராமத்தில் ஒரு குடும்பத்தலைவி எப்படி இருப்பாரோ அப்படிப்பட்ட தோற்றம் மட்டுமல்ல, கணவரின் எல்லா சுக துக்கங்களிலும் முகத்தைக் காட்டிவிடாமல், பங்குகொள்ளும் இயல்பான கிராமத்து மனைவியாக ஜொலிக்கிறார்.
பக்ரீத் பிரியாணிக்காக இறக்குமதி செய்யப்பட்ட குட்டி ஒட்டகத்தைப் பார்த்துக் கோபப்படும் இஸ்லாமியர். மிகவும் நேர்மையாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். பெரிய ஒட்டகத்தை வெட்டப்போறாய்ங்களே என்கிற எண்ணம் வரவில்லை, அட குட்டி கண் முன்னால் தாயை எப்படிப்பா வெட்டுவது என்று நியாயமாக நடந்துகொள்வது மனதில் நின்றுவிடுகிறது.
ஏதோ ஒரு வீம்பில் குட்டி ஒட்டகத்தைத் தன் வீட்டிற்கு ஓட்டி வருகிறார், விக்ரந்த். அதன் பின் அதுவும் அவர் குடும்ப உறுப்பினர் ஆகிவிடுகிறது. ஆனாலும் , நமது சீதோஷ்ண நிலைக்கு அது தாக்குபிடிக்குமா, ஆகவே இராஜஸ்தானிலேயே கொண்டு போய் விட்டுவிட்டு வரலாம் என்கிற கால் நடை மருத்துவர் எம் எஸ் பாஸ்கரின் அறிவுரையை ஏற்று, குட்டி ஒட்டகத்துடன் லாரி ஏற, அமர்க்களம் ஆரம்பாகிறது.
அவ்வளவு சிரமப்பட்டு இராஜஸ்தானில் கொண்டு போய் விட்டாலும், அதை வளர்த்து சில வருடங்களில் மீண்டும் பக்ரீத்துக்கு பங்குபோடத்தான் அனுப்பப்போகிறார்கள் என்பதை அறிந்து திரும்பவும் ஊருக்கே அழைத்து வருவது அழகு.
லாரி டிரைவர் ரோஹித் பதக்கும் அவரது உதவியாளர் மோக்லியும் ஒட்டகத்துடனும் விக்ராந்துடனும் மாட்டிக் கொண்டு முழிப்பது ரசிகர்களைக் குதூகலப்படுத்தும். மஹாரஷ்டிராவில் , மாடுகடத்துபவர்களை சிவாஜி சேனைகள் நையப்புடைத்துக் கொண்டிருக்க இவர்களும் சிக்குகிறார்கள். பணத்திற்காக ஒத்துக் கொண்டு, பின் விக்ராந்தின் மனதை அறிந்து, பணத்தைத் திரும்பக் கொடுத்து வண்டியேற்றி விடுவதில் ரோஹித் நம் கண்களைக் குளமாக்கிவிடுகிறார்.
அந்தக் காவல் நிலையத்தில் வரும் காட்சிகள் அற்புதம். எவ்வளவு இயற்கையாக நடித்திருக்கிறார்கள், அந்தக்குணச்சித்திர நடிகர்கள். அவர்களது உடல்மொழிகளில் 25% கூட நமது ஊரில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பவர்களிடம் பார்க்க முடியாது.
நடுவில், கோசாலைக்கு அனுப்பப்படும் போது தப்பித்துவிடும் சாரா, தனது புத்தி சாதுர்யத்தால், காயமடைந்த இராணுவ வீரர்களைக் காப்பாற்றி, சமூக வலைத்தளங்களில் பிரபலமாகிவிடுகிறது.
விக்ராந்த் சந்திக்கும் ஒரு அமெரிக்க வழிப்போக்கர் என்று ஒரு கதாபாத்திரம் மனம் கவர்கிறது.
சாரா வந்தவுடனேயே வீச ஆரம்பித்த வசந்தம், முறைத்துக் கொண்டு போன விக்ராந்தின் மூத்த சகோதரரையும் உறவாட வைக்கிறது. தம்பியுடனான சொத்துப் பிரச்சினையில் கோர்ட்டுக்குப் படியேறிய அண்ணன், ஒரு கட்டத்தில் தம்பி வயல் வாடிக்கிடப்பதைக் கண்டு தண்ணீர் பாய்ச்ச வயலுக்குள் இறங்குவது அட்டகாசமான காட்சியமைப்பு.
ஞானக்கரவேல் மற்றும் மணி அமுதவன் எழுதிய பாடல்கள் இமான் இசையில் கதையோடு பயணிக்கின்றன.
அட, இயக்குநரே ஒளிப்பதிவும் செய்திருக்கிறார், இரட்டைக்குதிரையில் சவாரி செய்வது சவாலான விஷயம் தான். அதை வெற்றிகரமாகவே செய்திருக்கிறார் ஜெகதீசன் சுபு
விஜய் நடிக்கும் காதலுக்கு மரியாதை போல,
இது விக்ராந்த் நடிக்கும் செல்லப்பிராணிகளுக்கு மரியாதை என்று சொல்லலாம். அத்துடன் பக்ரீத், தேசிய ஒருமைப்பாடு பேசும் படமாகும் ஜொலிக்கிறது.
விலங்குகளை வைத்துப் படங்கள் எடுக்கும் போது, அரசு ஒத்துழைப்பு நல்கவேண்டும், படைப்பாளிகளுக்கு. அப்பொழுது தான் இதுபோன்ற பல நல்ல படங்களை எடுக்க படைப்பாளிகளும் தயாரிப்பாளர்களும் முன்வருவார்கள். ஏனென்றால், முன்பே குறிப்பிட்டது போல, நமது கலாச்சாரங்களிலும் வாழ்வியலிலும் கால் நடைகள் தவிர்க்கவே முடியாத அங்கம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
எம் எஸ் முருகராஜ் தயாரிப்பில் ஜெகதீசன் சுபு படைத்த இந்த பக்ரீத், அனைத்து மதத்தவரும் கொண்டாடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.