a K Vijay Anandh review
வேண்டாம் அண்ணா விட்டுருங்க… உன்னை நம்பித்தானே வந்தேன்… என்று பொள்ளாச்சியில் நடந்த அக்கிரமங்களின் குரல்கள் இன்னும் நம் மனதை ஈட்டியாய்க் குத்தி ரணப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.
வேண்டாம், No என்பனவெல்லாம் வார்த்தைகள் அல்ல, அவை வாக்கியங்கள். அதன் அர்த்தம் எழுதி முடிக்க ஒரு ஆக்ஸ்போர்டு டிக்ஷனரி Oxford Dictionary கூடப் போதாது தான். அவை வெறும் வார்த்தைகள் அல்ல, மிகப்பெரிய அசம்பாவிதம் ஏன் மிகப்பெரிய பிரளயம் போன்றவற்றிற்கான தடுப்பான்கள் என்று கூடச் சொல்லலாம்.
பாதிக்கப்பட்ட ஷ்ரத்தா ஸ்ரீ நாத், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா ஆகியோருக்காக வாதாட ஆரம்பிக்கும் போதிலிருந்தே, எதிர்தரப்பினரைக் குறுக்கு விசாரணை செய்கிறீர்களா என்று நீதிபதி கேட்கும்போதெல்லாம் மிகவும் உறுதியாக No சொல்லிவிடுகிறார். அந்த No தான் கிளைமாக்ஸில் ஒரு முடிவுரை எழுதுவதற்கான ஆயுதமாக இருக்கப்போகிறது என்பதை யாராலும் ஊகிக்க முடியவில்லை என்பதே நேர் கொண்ட பார்வையின் வெற்றிதான்.
இந்திய அளவில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் பரவலாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில், ஹிந்தியில் வெளியான பிங்க் இன் மறு ஆக்கமாக வெளிவந்திருக்கும் நேர்கொண்ட பார்வை, தமிழகத்திற்கும் மிக மிக அத்தியாவசியமான ஒன்றே!
ஆண் சிரித்துப் பேசினால் அவன் தோழன், அதுவே பெண் சிரித்துப் பேசினால் ஒரு மாதிரியானவள். ஆண் சரக்கடித்தால், வெறும் உடல் நலனுக்குக் கேடு, அதுவே பெண் சரக்கடித்தால், அவளை எதற்குக் கூப்பிட்டாலும் வருபவள் என்கிற முத்திரை.
என்கிற மிகவும் யதார்த்தமான மற்றும் கூர்மையான வசனங்கள் படத்திற்குப் பெரிய பலம்.
இடைவேளைக்கான ஆரம்பம் முதல் இரண்டாம் பாதி முழுவதும் நீதிமன்றக் காட்சிகள் தாம்.
அந்தக் காட்சிகளை இமைக்காமல் பார்த்தே ஆகவேண்டும் என்பதற்கான காரணிகளாக, மேற்குறிப்பிட்ட இயல்பான, ஆழமான வசனங்கள் மட்டும் அல்ல, கதாபாத்திரங்களின் உணர்வுகளை வெளிக்காட்டும் நடிகர்கள். அது அஜித் ஆகட்டும், குற்றவாளிகள் சார்பாக அரசு தரப்பில் வாதாடும் ரங்கராஜ் பாண்டே ஆகட்டும், மூன்று தோழியர் & அவர்களது குடும்பத்தார் அவர்களுக்கு தொந்திரவு கொடுத்த மூன்று வில்லன்கள் என்று ஒவ்வொருவரின் முகபாவனைகள், வசன உச்சரிப்புகள் அபாரம்.
ஷ்ரத்தா ஸ்ரீ நாத் ஒன்றிரண்டு தம்ழ்ப்படங்களில் நடித்திருந்தாலும் , அஜித் தவிர நேர்கொண்ட பார்வையில் சொல்லிக் கொள்ளும் படியான பிரபல நடிகர்கள் இல்லை. அப்படி ஒரு குறை தெரியாத அளவிற்கு, பிரகாஷ் ராஜ் போன்ற ஜாம்பவான்கள் நடிக்க வேண்டிய ஒரு கதபாத்திரத்தை அநாயசமாக நடித்துச் செல்கிறார் ரங்கராஜ் பாண்டே. ஒரு ஐ ஏ எஸ் நினைத்தால், முதலமைச்சர் ஆகிவிடலாம்… ஆனால், ஒரு முதலமைச்சர் நினைத்தால் ஐ ஏ எஸ் ஆக முடியாது என்கிற பிரபலமான ஒரு தமிழ்ப்படத்தின் வசனம் நினைவுக்கு வருகிறது. எல்லாரையும் கேள்வி கேட்டு தர்மசங்கடப்படுத்துபவர்கள் தானே, வந்து நடித்துப்பார்த்தாத்தானே தெரியும் என்று இனி ஊடகவியலாளர்களைப் பார்த்து யாரும் கேள்வி கேட்டுவிட முடியாத அளவிற்குச் சிறப்பாக நடித்திருக்கிறார் பாண்டே.
அஜித் ரசிகர்களைத் திருப்திப் படுத்துவதற்காகவே என்றாலும், 50 பேர் வரை முடமாகிப் போகும் அந்த நீண்ட சண்டைக் காட்சியின் நேரத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம். ஒரே ஒருத்தன் தலையில் அடிபட்டுத்தான் இந்தப்படமே ஆரம்பிக்கின்றது என்கிற வகையில், 50 பேர்களுக்கு மேல் அஜித்திடம் மிகவும் மோசமாக அடிபட்டு விழுகிறார்கள் என்பது கொஞ்சம் முரணாகத் தெரிகிறது. தனியாகப் பார்த்தால் செமயான மாஸ் ஆக்ஷன் Mass action காட்சிகள் தான். குறிப்பாகக் கேள்வி கேட்காமலே பதில் சொல்லு என்று அஜித் சொல்லும் போது, அடிபட்டவர்கள் அலறிக்கொண்டு பதில் சொல்லும் காட்சிகளெல்லாம் வேற லெவல் level.
அதைப்போல மீரா கிருஷ்ணன் தனது 19 வயதில் தானாக விருப்பப்பட்டுக் கன்னித்தன்மையை இழப்பதும் அதன்பிறகும் நாலைந்து பேர்களுடன் உறவு வைத்துக் கொண்டதும் எப்படி அர்ஜுன் சிதம்பரத்திற்குத் தெரியும் என்கிற கேள்வியும் எழாமல் இல்லை. இப்படிப்பட்ட பெண் No சொன்னாலும் விலகிச் சென்றுவிடவேண்டும் என்று நீதிபதியும், எதிர்தரப்பு வக்கீலும், படம் பார்க்கும் ரசிகர்களும் புரிந்துகொள்வதற்காக என்பது தான் பதிலாக இருக்க முடியும்.
பிராமிஸ் Promise செய்து கொடுத்தால் அதைக் காப்பாற்றாமல் போய்விடுமோ என்கிற பயம் தான் ஏன்னா, இப்படித்தான் அவர் மனைவி வித்யபாலன்… என்று ஒரு வரியில் ஜூனியர் பாலையாவை வைத்துச் சொல்லிவிடலாமே என்கிற அளவிலான காட்சிக்கு அவ்வளவு பெரிய பிளாஷ்பேக் Flashback வைத்திருக்க வேண்டுமா என்று தோன்றுகிறது.
நம்மூர்ப்பக்கம் சொல்வார்கள், பார்வை ஒரே இடத்தில் இருந்தால், நிலை குத்தி இருக்கிறது, என்று அப்படி நிலை குத்திப் பார்க்கும் ஒரு குறைபாடு, தனது மனைவியையும் சிசுக்களையும் பிணமாகப் பார்த்த தருணத்திலிருந்து அஜித்திற்குத் தொற்றிக் கொள்கிறது. பல வருடங்களானலும் அதிலிருந்து மீண்டு வர இயலாத நிலையில், பரத் சுப்ரமணியன் என்கிற வழுக்குரைஞராக நேர் கொண்ட பார்வையுடன் வாதாடி, நிரபராதிகளுக்கு விடுதலை பெற்றுத் தருகிறார் அஜித். அவரது உடல்மொழிகளில் வசன உச்சரிப்புகளிலும் அப்படி ஒரு கம்பீரம். இமேஜ் Image பற்றிக் கவலைப்பட்டுத் தன்னை ஒரு வட்டத்திற்குள் சுருக்கிக்கொள்ளாத ஆளுமையாக அஜித், சிறப்பாக நடித்திருக்கிறார். முன்பே குறிப்பிட்டது போல அவருக்கு டஃப் பைட் Tuff Fight கொடுக்கிறார் சத்யமூர்த்தியாக நடித்த பாண்டே.
ஷ்ரத்தா ஸ்ரீ நாத், எவ்வள்வு அழுத்தமான உணர்ச்சிகளானலும் மிகவும் சுலபாகக் கொட்டும் திறமையான நடிகை. தமிழ் நாட்டின் மிகப்பெரிய ஒரு மாஸ் Mass நாயகன் அஜித் படத்தில் பேசும் முதல் வசனமே தன்னோடுதான் அந்தப்படத்தில், ஒரு நிமிடம் என்னைப் பேசவிடுங்க என்று அஜித்தையே அமர வைத்து விட்டு கோர்ட்டில் வசனங்கள் பேசி அசத்துகிறார், படம் வெளியாகி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது, இவை எதுவும் தெரியாமல் அபிராமி பிக்பாஸ் வீட்டிற்குள். மாநகரங்களில் மட்டுமல்ல தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் இப்படி ஒரு வட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பெண்ணைப் பார்க்க முடியும் என்கிற அளவிற்கு இயல்பாக ஆண்ட்ரியா. அதிக வசனங்கள் இல்லாவிட்டாலும், தன் மகளிடம் செக்ஸ் ஜோக் sex joke சொல்லுமாறு வக்கீல் கேட்கும் போது, மெளனமாக எழுந்து வெளியே செல்லும் டெல்லி கணேஷ், அற்புதம்.
தொழில் நுட்பங்களில், இசையில் யுவனும் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷாவும் கச்சிதமாகப் பணியாற்றியிருக்கிறார்கள்.
இன்றைய தேதியில், சமூகத்திற்குத் தேவைப்படும் செய்தியை, அஜித்தை வைத்து மிகவும் அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறார் ஹெச் வினோத்.
நேர் கொண்ட பார்வை, நம்மை சீராக்க வந்த படம், மனைவி No சொன்னாலும் வற்புறுத்தக்கூடாது என்கிற அளவுவரை.