a K Vijay Anandh review
எந்த சாதிகளையும் உயர்த்திப் பிடிக்காமல், எந்த மதத்தையும் புண்படுத்தாமல், கருத்துச் சொல்கிறேன் பேர்வழி என்று இம்சிக்காமல், உலகத்தரமான தமிழ்ப்படமாக தொரட்டி வெளியாகிறது.
வாழ்வாதாரத்திற்காகத் தங்களது ஆடுகளுடன் புலம்பெயர்ந்து கொண்டே இருக்கும் மக்களின் வாழ்க்கையை ஒரு கவிதையைப் போலச் சொல்லியிருக்கிறார்கள் திரையில்.
சகவாசம் சரியில்லையென்றால் அதற்கான விளைவுகளை அனுபவித்தே ஆகவேண்டும் என்பது தான் ஒருவரிக்கதை.
இந்தக் கதைக்குள், மாயன் - செம்பொண்ணு ஆகியோருக்கு இடையிலான காதலும் தாம்பத்யமும் தான் திரைக்கதை.
தரிசாகக் கிடக்கும் வயல்வெளிகளில் கிடை போடுவது, அடுத்த சில மாதங்களில் கிடாக்கள் அதாவது ஆடுகள் போடும் புழுக்கை அந்த மண்ணிற்கு உரமாகி, உழுது விவசாயம் செய்தால் உத்திரவாதமான அமோக விளைச்சலுடன் கூடிய அறுவடைக்கு விவசாயி தயாராகிவிடுவார்.
கிடை போடுவபவர்களுக்கும் வருமானம், வயலுக்குச் சொந்தக்காரருக்கும் ஆதாயம். இதுதான் நமது நாட்டின் அதியற்புதமான கிராமப்பொருளாதாரத் திட்டமிடுதலின் ஒரு அங்கம்.
இதனைப் பின்னணியாக வைத்து, அறிவுரையோ பொருளாதாரப் பாடங்களோ எடுத்து ரசிகனை இம்சிக்காமல், கதை நகர்கிறது.
நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்தது என்று சொல்வோமே அதைப் போல அப்பா அம்மா சொல்கேட்டு ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் நாயகனுக்கு மூன்று திருடர்கள் நண்பர்களாகிப் போகிறார்கள்.
கூலி தராத நிலக்கிழாருக்கு செய்வினை செய்யும் இடத்தில் தான் நாயகனின் அப்பா வம்பை விலைக்கு வாங்குகிறார்.
அந்த இடத்தில் தங்களைக் காப்பாற்றும் திருட்டு நண்பர்களுடனான நட்பு ஆழமாகிப் போவது இயற்கை தானே.
அப்பா செய்யும் செய்வினை மகனுக்கு வினைப்பலனாக விளைந்து வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது.
எந்தவிதமான லாஜிக் தவறுகளுமின்றி கதை, ஒரு அழகான வாழ்வியலோடு நகர்கிறது.
குடியும் கும்மாளமுமாக இருக்கும் நாயகனுக்கு யார் தான் பெண் கொடுப்பார்கள்..? அந்தக் காட்சி வழக்கமாக இருக்கிறதே என்று நினைப்பதற்குள், போதையுடன் வந்து உட்கார்ந்திருக்கும் நாயகனின் கன்னத்தில் பொளேர்னு வைக்கிறார் நாயகி - சத்யகலா.
"ஆம்பள சுகத்துக்காகக் கல்யாணம் செய்யல, உங்கப்பா வந்து அழுது புரண்டாரேன்னுதான்... என்னைக்கு உன் உடம்புல ஆட்டு வாசனை வருதோ அன்னைக்குத் தான் எம்முதுகுல மண்ணு.ஒட்டும் உன் முதுகை என் முந்தானை மூடும்.." சத்யகலா பேசும் இந்த வசனம் போதும், கொடுத்த காசுக்கு. என்ன ஒரு நடிப்பு..? கிளைமாக்ஸில் இவருக்காக ரசிகன் அழப்போவது நிச்சயம்.
ஆடுமேய்ப்பவர்களின் பிரதான ஆயுதமே தொரட்டி தான். அதனை அவர்கள் தெய்வத்திற்கு நிகராக மதிக்கிறார்கள், ஏன் பெண்கள் அதனைக் கணவனாகவே கருதுகிறார்கள். நமது மண்ணின் அதியற்புதமான ஒரு பழக்க வழக்கம்.
இன்றைய தலைமுறைகள், குறிப்பாக நகர இளசுகள் இதனைப் பார்த்து பிரமிப்பார்கள் என்றால் அது மிகையல்ல.
நாயகன் ஷமன் மித்ரு பெரிய வரம் வாங்கி வந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். கமல்ஹாசனின் பதினாறு வயதினிலே போல தொரட்டியும் காலத்தை வென்று பேச்சப்படும்.
அட அவர் ஆசையாக வளர்க்கும் செவலக் கிடாக்குட்டி கூட அற்புதமாக நடித்திருக்கிறது. வில்லன்கள இழுத்தும் செல்ல மறுக்கும் காட்சியிலும் சரி, அன்போடு மாயன் அருகே வந்து தலையைக் கொடுக்கும் காட்சியிலும் சரி , கண்கலங்க வைத்துவிடுகிறது.
சாராயக்கடை பாலா வை மிகச்சரியான துருப்புச் சீட்டாக பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
துபாய்க்காரராக வரும் விஜய் பாலாஜி குடும்ப மணவிழாக் காட்சிகள் படத்தின் முக்கியத் திருப்பத்திற்கு காரணமாகிறது. அவரும் சிறப்பாக செய்திருக்கிறார், வில்லன்களைச் செஞ்சும் விடுகிறார். குறிப்பாகத் தன் மகளின் தாலியை அறுத்துட்டாய்ங்கம்மா என்று சத்ய கலாவிடம் புலம்பும் காட்சி அருமை.
செம்பொண்ணு கலந்த அந்த செம்மண் நீரின் அமைதி, ஒளிப்பதிவாளார் குமார் ஸ்ரீதரின் திறமைக்கு ஒரு சோற்றுப் பதம்.
சினேகனின் வரிகளில் பாடல்கள் நம் கலாச்சாரப் பதிவுகள் என்றே சொல்லலாம்.
குற்றவாளிகள், சமீபகாலமாக காவல் நிலையக் கழிவறையில் விழுந்துகொண்டு தங்கள் கைகளை.உடைத்துக் கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. ஏதேச்சையாக, அவர்களின் கை எப்படி.உடைபடுகிறது என்பதை அழகாகக் காட்சிப் படுத்தியிருப்பது சுவராஸ்யம்.
தனது தொரட்டியால் தமிழ் சினிமாவின் களைகளையும் அறுத்தெரிந்திருக்கிறார், இயக்குநர் மாரிமுத்து.
தொரட்டி, சிந்தனை வறட்சியால் நலிவுற்றுக் கொண்டிருக்கும் தமிழ் சினிமா மறுபடியும் கம்பீரமாகத் தலை நிமிர்வதற்கான உரம்.