a K Vijay Anandh review
சிறியதாகக் கனவு காண்பது பெருங்குற்றம் என்றார் அப்துல்கலாம்.
விடாமல் கனவு காணுங்கள், அதன் வீரியத்தைப் பொறுத்து அதே பிறவியிலோ அல்லது அடுத்தடுத்த பிறவிகளிலோ நனவாக்க முடியும் என்கிறார் சென்னை பழனி மார்ஸ் இயக்குநர் பிஜு., வசனகர்த்தா விஜய் சேதுபதி.
கதையை எப்படிச் சொல்லியிருக்கிறார்கள் என்று போவதற்குள், எப்படிக் காட்சிப் படுத்தியிருக்கிறார்கள் என்று பார்ப்போம்.
இதுவரை பார்த்திராத தளங்கள், பசுமையும் செம்மையும் கலந்த அடர்த்தியான புதர்கள் நடுவே சாலைகள், ஒத்தைப் பாறை, இன்ன பிற தளங்கள் என்று சமீபத்தில் தமிழ் சினிமாவில் பார்த்திராத வித்தியாசமான காட்சிப் பதிவுகள்.
அட நாயகியே இல்லயே என்கிற யோசனை வருவதற்குள், அட எந்த காட்சியிலும் பெண்களே இல்லையே என்று ஆச்சிரியப்படும் அளவிற்கு, இது ஆண்கள் மட்டுமே நடித்திருக்கும் படமாக, அதிலும் வித்தியாசம்.
அந்த பேராசிரியர் மறைவுச் செய்தியை வீட்டில் பணியாற்றும் ஒருவர் தொலைபேசியில் நாயகனுக்குத் தகவல் சொல்லும் காட்சியில் மட்டும், பெண்கள் இருந்திருக்கக் கூடும், அது கூட அவுட் ஆஃப் போகஸ் தான்.
இன்னொரு கவுண்டமணி - செந்தில் ஜோடி கிடைத்துவிட்டது போலும் என்கிற அளவிற்கு இன்ஸ்பெக்டரும் கான்ஸ்டபிளும் நகைச்சுவையில் தனி ஆவர்த்தனம் செய்கிறார்கள்.
படத்தின் ஒளிப்பதிவு அபாரம், அதையும் இயக்குநர் பிஜுவே கையாண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கதாபாத்திரங்களின் ஒப்பனை மற்றும் தோற்றம் சார்ந்த குறியீடுகளில் அறம் இல்லாமல் இருக்கிறது.
பழனியிலிருந்து செவ்வாய்க்குப் போக ஒரு முயற்சி, ஒரு தற்கொலை முயற்சி, ஒரு போதைப்பொருள் கடத்தல் முயற்சி என்று ஆளுக்கு முப்பத்தைந்து நிமிடங்கள் அப்புறம்.கிளைமாக்ஸில் அனைவரும் ஒன்றாக ஒரு 10 நிமிடங்கள் என்று கதை ரசிகர்களை முழுவதுமாக engage செய்ய வேண்டும் என்கிற அளவிற்கு திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.
காதல் இல்லை , அதனால் டூயட் இல்லை ஆனாலும் நிரஞ்சன் பாபு இசையில் ஏழு பாடல்கள் கதையோடு நகர்கிறது. விக்னேஷ் ஜெயபால் எழுதிய பாடல்களில் ஒன்றைப் பாடகி ஒருவர் பாடியிருப்பதால், படத்தில் பெண்குரல் இல்லாத குறையைப் போக்கிவிடுகிறது.
சாமியார், 48 நாள் மருந்து என்கிற அபத்தங்கள் இல்லாமல் கதையை நேர்மையாகவே சொல்லியிருக்க முடியும், இயக்குநர் மற்றும் வசனகர்த்தா ஏதோ திட்டமிடுகிறார்கள் என்று மட்டும் ஊகிக்க முடிகிறது.
அறம் வழுவாமல் அறிவியலை இன்னும் கொஞ்சம் சுவராஸ்யப்படுத்தி இருந்தால், சென்னை பழனி மார்ஸ் ஒரு சர்வதேசத் தமிழ்ப்படமாகியிருக்கும்.