a K Vijay Anandh review
இந்த வார வெளியீடுகளில், தி லயன் கிங் பார்த்துவிட்டு, அடடா இப்படி சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய Content நமது தமிழ் சினிமாக்களில் அமைவது இல்லையே என்று வருத்தம் ஒவ்வொரு தமிழ்த்திரைப்பட ரசிகனுக்கும் ஏற்பட்டிருக்கும் என்றால் அது மிகையாகது.
அட, நம்மாலும் முடியும் என்று சவால் விடும் வகையில் அதே நாளில் வெளியான ஆடை, கொஞ்சம் நெஞ்சை நிமிர்த்தி கர்வம் கொள்ள வைத்தது என்றால் அதுவும் மிகையல்ல.
அமலா பால், நிர்வாணமாக நடித்ததினால் அது சர்வதேச Content ஆ..” என்றால் சத்தியமாக இல்லை, ஒரு இள வயது நடிகையான அமலா பால் நிர்வாணமாகத் தோன்றும் காட்சிகளில் நமது வீடுகளில் உள்ள 3 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் அம்மணக்குண்டியாகச் சுற்றிக் கொண்டிருக்குமே அந்த உணர்வுதான் வருகிறது. அந்தளவுக்கு கண்ணியமாகப் படமாக்கியிருக்கிறார்கள்.
அப்படியானால் எது சர்வதேச தரத்துடன் ஒப்பிட வைக்கிறது என்றால், தலைப்பு ஆடை என்பது தான். நாகரீக மனித சமூகத்தில் ஆடை என்பது தவிர்க்க முடியாதது தானே! அட ஆமாம், அங்கொன்றும் இங்கொன்றுமாக எவனாவது நிர்வாண ஆசாமிகள் திரியலாம். ஆனால், 700 கோடியை நெருங்கிவிட்ட உலக மக்கள் தொகையில், சாப்பிட ஒன்றும் இல்லாமல் எலும்பும் தோலுமாக செத்து விழுந்து கொண்டிருக்கும் உகாண்டா சிறுமி கூட ஆடையில்லாமல் இல்லை.
அந்த வகையில், ஆடை, பெருமைப் பட்டுக் கொள்ளக்கூடிய கதைக்கரு என்பதில் சந்தேகமே இல்லை.
பட ஆக்கத்தில்..? திரைக்கதையில்..? அமலா பாலை நிர்வாணப்படுத்தும் காரண காரியத்தில், கதாபாத்திரத்தில் இயக்குநர் பெரிதாகச் சறுக்கியிருக்கிறார்.
படத்தின் கதை வேறு, ஆனால் தயாரிப்பாளர் இவ்வளவுதான் சுதந்திரம் கொடுத்தார் என்கிற வாதத்திற்கு இங்கே இடமில்லை.
மார்பை மறைக்க, அதாவது நிர்வாணத்தை மறைக்க 200 ஆண்டுகளுக்கு முன் திருவிதாங்கூர் சைக்கோ அரசனுடன் போரிட்ட நாஞ்சிலி யின் பெயர் தாங்கிய இன்றைய இளமங்கை, அமலா பாலை நிர்வாணப்படுத்துவது என்பது கிஞ்சித்தும் ஏற்றுக் கொள்ள முடியாதது.
மாறாக, எதற்கெடுத்தாலும் சவால் விட்டுக் கொண்டும் அதை எப்படியாவது நிறைவேற்றிக் கொண்டும் இருக்கும் அமலா பாலே, நிர்வாணத்திற்கும் ஒரு சவால் விடத்தான் செய்கிறார்.
அன்றைய தினத்தின் கடைசி செய்தியினைத் தன்னை வாசிக்க விடாமல் செய்துவிட்டாளே என்கிற கோபத்தில் ரம்யா வின் தூண்டுதலும், அங்கே நியாயமாக இருக்கிறது.
தவிர, விவேக் பிரசன்னா உள்ளிட்ட நான்கு ஆண் நண்பர்களும், செம போதையில், தங்களது தோழிகளுக்கு ஊற்றிக் கொடுத்துக் கொண்டும்.
அதில் ஒருத்தன், ஏற்கனவே அமலா பாலால் மூக்குடை பட்டு, நல்ல ஒரு வாய்ப்பை நழுவ விட்டுவிடுவானா என்ன..? அதான், பொம்பளப்புள்ளங்களோட சேர்ந்து சரக்கடிக்கிறீங்கள் ல, எங்க லிமிட் எங்களுக்குத் தெரியும் என்று சொன்னால், பச்சைப்புள்ள கூட நம்பாது.
நட்ட நடு ராத்திரி, மகளைக் காணோம்னு காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தால், அப்படிச் சொல்லும்மா, என்னம்மா புள்ளைய வளர்த்திருக்க… என்று தண்ணியடிக்கும் பழக்கம் உள்ள மகளைப் பெற்ற அம்மா ஸ்ரீ ரஞ்சனியிடம் கேட்கிறது காவல்துறை.
அட, நிச்சயம் இந்த காட்சிக்காக ஈவெரா கண்ட பெண்ணியப் போராளிகள் அவர்களின் ஆண் தோழர்கள் இந்தப்படத்திற்குத் தடை கேட்டு நீதிமன்றத்தை அணுக வாய்ப்பியிருக்கிறது.
அது எப்படிக் கேட்கலாம், என்னம்மா புள்ளய வளர்த்து வைச்சுருக்கே என்று..? தோழர்களுடன் இணைந்து சரிக்குச் சமமாகச் சரக்கடித்து மட்டையாவது தானே பெண் சுதந்திரம்..?!
”நாங்களெல்லாம் அன்னைக்கு ஆடை உடுத்துவதற்குப் போராடினால், நீங்கள் சுதந்திரங்கிற பேர்ல அவுத்துக் காட்டுவதற்கு போட்டி போடுறீங்க..” நாஞ்சிலி பேசும் இந்த ஒரு வசனம் போதும், ஆடை படத்தின் குறைகளை மறைக்க.
மற்றபடி, அமலா பாலுக்கும் அனன்யா வுக்கும் பெரிய பாராட்டுகள்.
ரம்யா, விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.
அறிமுக இசையமைப்பாளர் ஊறுகா பிரதீப் குமாரின் இசை அற்புதம்.
திரைக்கதை மற்றும் பட ஆக்கத்தில் கொஞ்சம் சொதப்பினாலும், சர்வதேசத் தரம் வாய்ந்த கதைக்களத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்த இயக்குநர் ரத்னகுமாருக்கும் பாராட்டுகள்.
அதைப்போல, ஆதிக்க சாதி இந்துக்களால் அடிமை சாதி பெண்கள் அரை நிர்வாணப்படுத்தப்பட்டார்கள், அவர்கள் மார்பகத்தை மறைக்க முலை வரி என்று முலைகளின் அளவிற்கேற்ப வரி வசூலிக்கப்பட்டது என்கிற ரீதியில் சொல்லப்படும் வரலாறே தவறு. இந்தியா முழுவதும் ஆண்டு கொண்டிருந்தது இந்து அரசர்கள் தாம். திருவிதாங்கூர் சமஸ்தானம் தவிர, இந்தியாவின் வேறு எந்த பகுதியிலும் இப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை. இந்த முலைவரி சர்ச்சைக்குள்லான திருவிதாங்கூர் அரசன் ஒரு மன நோயாளியாக இருந்திருக்கக் கூடும்., அவன் ஒரு மலையாளி, முலை வரியால் பாதிக்கப்பட்டப் பெண்கள் எல்லோருமே தமிழச்சிகள் தாம். அவனது ஆளுகைக்குட்பட்ட திருவிதாங்கூர் சமஸ்தானத்திலேயே கன்னியாகுமரி அருகே உள்ள சில கிராமங்கள் தவிர முலை வரி என்று எங்கும் வசூலிக்கப்பட்டிருக்க வில்லை.
ஆகவே, இனிமேலாவது, ஆதிக்க சாதி இந்துக்கள் அடிமை சாதி இந்துக்கள் என்று இந்து மதத்திற்குள் பிளவு ஏற்படுத்த முயலாமல், இன்னும் கொஞ்சம் தெளிவாக இந்த விஷயத்தை அணுகுதல் நலம்.