a K Vijay Anandh review
கல்லாக்கட்டலாம் என்று ஊராட்சித்தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்து, அது ஏடாகூடமாக மாறி, காதலியைக் கட்டுவதற்காவது போட்டியிட்டுவிடுவோம் என்று களம் இறங்கும் அறிக்கியின் கதை, களவாணி 2.
பட ஆக்கத்தில் கொஞ்சம் மெதுவாகச் செல்கிறதோ என்கிற சிறு உறுத்தல் தவிர, கலகலப்பான பொழுதுபோக்குப் படம் தான், கூடவே சில சமூக அக்கறைகளுடனும்.
படித்து முடித்துவிட்டு, சம்பாதிப்பதற்கென்று வெளி நாடு போய் ஒரேயடியாய் சொந்த கிராமத்தையும் உறவுகளையும் மறந்துவிடும் உத்தமர்களை விட, களவாணித்தனம் செய்தாலும் உள்ளூரிலேயே இருந்துகொண்டு நல்லது கெட்டதுகளில் பங்கெடுக்கும் அயோக்கியர்கள் மாதிரித் தெரிபவர்கள் நல்லவர்கள் தான் என்று சொல்லியிருக்கிறார் இயக்கு நர் சற்குணம்.
இதுபோன்று, முற்றிலும் கிராமவாசியாகவும் இல்லாமல், முற்றிலும் நகரவாசியாகவும் இல்லாமல் என்று ஒரு இடைப்பட்ட நிலையில் எழுதப்படும் கதாபாத்திர வடிவமைப்புக்கு அன்று ரஜினிகாந்த் என்றால் இன்று விமல். அப்படிக் கச்சிதமான உடல்மொழி வசன நடை என்று பட்டையைக் கிளப்புகிறார்.
களவாணி முதல்பாகத்தில் பள்ளி மாணவியாக இருந்து 10 வருடத்தில் மகளிர் குழு தலைவியாகியிருக்கும் ஓவியா, அற்புதமாக அந்தக் கதாபாத்திரத்திற்கேற்ற முதிர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். இவருக்கும் விமலுக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி அருமை.
இது படமல்ல, ஏதோ அப்படி ஒரு கிராமத்திற்குச் சென்றிருக்கிறோம் என்கிற உணர்வை ஏற்படுத்துபவர்கள் அறிக்கியின் பெற்றோர்களான இளவரசு மற்றும் சரண்யா தம்பதியர்.
விக்னேஷ் காந்த், நகர்ப்புற நடிகர் போல அந்நியப்படுகிறார். சூரி கதாபாத்திரத்திற்கு மாற்று என்று வரும் போது, இன்னும் மெனக்கெட்டிருக்க வேண்டும், உடல்மொழி மற்றும் வசன நடைகளில்.
மணி அமுதவன் இசையில் ஒட்டாரம் பண்ணாத… பாடலும் அது படம்பிடிக்கப்பட்ட விதமும் அருமை. வி2 , ரொனால்ட் ரீகன் ஆகியோரின் பாடல்களும் அருமை.
கோயில் குளம் என்று பாராமல் கண்ட இடங்களில் அமர்ந்து சரக்கடிப்பது போன்ற காட்சிகளைத் தவிர்த்து இருக்கவேண்டும். தேவைப்பட்டால், இடம்பொருள் பார்த்து அமைக்கப்பட்டிருக்க வேண்டும். விமல் கூட்டாளிகளுடன் சரக்கடித்துக் கொண்டிருக்கும் போது, பின்னணியில் தெரியும் கோயில், சிதிலமடைந்துதான் இருக்கிறது என்றாலும், மனமொப்பவில்லை.
சிறப்பான கதைக்களம், முதல்பாகத்தை விட இன்னும் சிறப்பாகக் கொடுத்திருக்க வேண்டும். ஏதோ மிஸ் miss ஆகுது, சூரி உட்பட…