a K Vijay Anandh review
சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் புதிதாகப் பதவியேற்றியிருக்கும் தலைமையாசிரியை என்று ஜோதிகா தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் காட்சி செம மாஸ். சாமி மற்றும் சிங்கம் படத்தில் விக்ரம் மற்றும் சூர்யா காவல்துறை உயரதிகாரிகளாகப் பதவியேற்கும் போது, சக காவலர்கள் மத்தியில் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டது போன்ற, மிடுக்கு, கம்பீரம். இராணுவத்தில் பணியாற்றிவிட்டு தலைமையாசிரியராக வருகிறார் என்பதே மிகவும் ரசிக்கும் படியான புதுமையான பாத்திரப்படைப்பு.
சம்பளம் பத்தலனு (போதவில்லை என்று ) மட்டும் போராடாதீங்க, அரசுப்பள்ளியின் தரம் பத்தலன்னும் போராடுங்க, அதற்கு முன் வாங்குகிற சம்பளத்திற்கு வஞ்சனை இல்லாமல் பணியாற்றுங்க என்கிற அறிவுரையைப் படத்தில் வரும் ஆசிரியர்களுக்கும் படம் பார்க்கப் போகும் ஆசிரியர்களுக்கும் சொல்கிறார்.
கண்ணியமான உடை, உணர்வுகளைப் பிரதிபலிக்கும் போது காட்டும் கச்சிதம் , தந்தை இறந்ததைத் தனியாளாகச் சமாளித்து, கடைசி காரியம் முடித்துவிட்டு மதியம் பள்ளிக்கு வரும் ஜோதிகா என்று படம் முழுவதும் ரசிகர்களைக் கவரும் மையப்புள்ளியாக மிளிர்கிறார்.
ஜோதிகாவுடன் சூர்யா இல்லாத குறையை அந்தக்குட்டிப்பையன் கதிர் போக்குகிறான். அப்படி ஒரு கள்ளம் கபடம் இல்லாத மாணவனாகத் தன் ஆசிரியையை ஆராதிக்கின்றான்.
கடமையைச் செய்யாமல், சக ஆசிரியர்களையும் கடமையைச் செய்யவிடாமல், கபட ஆசிரியராக கவிதா பாரதியும் மிரட்டியிருக்கிறார்.
தனியார் பள்ளி நிறுவனராக வரும் ஹரிஷ் பெரடியும் கச்சிதமாக நடித்திருக்கிறார்.
33 வருடங்கள் பணியாற்றிவிட்டு ஓய்வு பெறப்போகும் , தன் கடமையைச் சரிவர செய்து வாழ்க்கையில் சுகங்களை இழந்த ஆசிரியையாக பூர்ணிமா பாக்யராஜும் கடைசி காட்சியில் கண்கலங்க வைக்கிறார், ஜோதிகாவையும் ,ரசிகர்களையும். உண்மையில், கதையின் ஆரம்பப்புள்ளியும் அங்கே தான் இருக்கிறது.கதை ஆரம்பித்த புள்ளியை கடையில் வைத்திருப்பது, இயக்குநரின் திரைக்கதை உக்தி, பாராட்டலாம்.
யுகபாரதி, தனிக்கொடி, முத்தமிழ், சீன் ரோல்டன், சை.கெளதம்ராஜின் பாடல் வரிகள் சீன் ரோல்டனின் இசையில் மிகவும் அற்புதமாக இருக்கின்றன. பின்னணி இசையும் அற்புதம்.
உண்மைதான், இன்றைய தேதியில் அரசுப்பள்ளிகள் பெரிய அச்சுறுத்தலில் தான் உள்ளன. அரசுப்பள்ளிகளை மூடிவிட்டுத் தனியார் பள்ளிகள் செழிக்க, அரசு இயந்திரமே பல இடங்களில் காரணமாக இருப்பது, நிஜம்..
அப்படி இருக்கும் போது, அரசுப்பள்ளிகளைத் தரம் உயர்த்தி, அரசுப்பள்ளி ஆசிரியர்களைச் சிறந்த கல்வி கொடுக்க ஊக்குவித்து அதன் மூலம் அரசுப்பள்ளி மாணாக்கர்களையும் முன்னேற்றுவது என்கிற கருத்தைச் சொல்கிற அளவில் ராட்சசி இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற படம் தான் என்றாலும்,
தங்களது தனிப்பட்ட இடதுசாரி சிந்தனைகளைத் தேவையில்லாமல் புகுத்தி, ஒரு குறிப்பிட்ட மதத்தவர் நடத்தும் பள்ளி அரசுப்பள்ளிகளை அழிக்கப் பார்க்கிறது என்பது போன்று காட்சிப்படுத்தியிருப்பதும், நெற்றியில் விபூதியுடனேயே வலம் வரும் உதவித் தலைமையாசிரியர், “ பள்ளிக்கூடத்துல குண்டு வைப்பீங்கன்னுல நினைச்சேன்..” என்று சொல்வதாகக் காட்சிப்படுத்தி , நிஜத்தை மடைமாற்ற முயற்சித்ததிலும் இப்படத்தின் கதாசிரியர் சை.கெளதம்ராஜ் மற்றும் வசனகர்த்தா பாரதி தம்பி ஆகியோர் அறத்தோடு செயல்படத் தவறிவிட்டார்கள் என்பதைக் காட்டுகிறது. நிஜமான சமூக அக்கறையுள்ளவர்களாயிருந்தால், தனியார் கல்வி நிறுவனர் ராஜலிங்கமாக ஹரிஷ் தோன்றும் காட்சிகளில் மத அடையாளங்களை முற்றிலும் தவிர்த்திருக்க வேண்டும். அதைப்போலவே , கோயில் கருவறை - அரசுப்பள்ளி கக்கூஸ் போன்ற அபத்தமான ஒப்பீட்டு வசனங்களையும் தவிர்த்திருக்கவேண்டும்.