a K Vijay Anandh review
இன்னொரு ஸ்லம் டாக் மில்லயனர் போன்று நடிப்பு, இசை, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இயக்கம் என்று அனைத்து துறைகளிலும் ஆகச்சிறந்த பங்களிப்புடன், பக்கிரி.
தமிழ் ரசிகர்களைப் பொறுத்தவரை இதை ஒரு மோனா ஆக்ட் படம் என்று கூடச் சொல்ல்லாம், அதாவது ஒரே ஒருவர் மட்டும் நடித்த படம். அந்தளவிற்கு, நமக்கு பரிட்சியமானவராகத் திரையில் தோன்றும் தனுஷ் மட்டும் தான் முழுப்பட்த்தையும் துளி சலிப்பில்லாமல் கொண்டு செல்கிறார்.
தனது தந்தை யாரென்று தெரியாமல் வளரும் சிறுவயது தனுஷ், தன் தாய் மீது கனிவுடன் நடந்துகொள்ளும் காய்கறி கடைக்கார்ர் முதல் முதலாளி வரை அவரா இவரா என்று கேட்கும் குழந்தைத்தனத்தை ரசிக்க முடிகிறது.
தாயின் இறப்பினையடுத்து தந்தையைத் தேடி பிரான்ஸ் பயணப்படும் தனுஷ், எதிர்பாராத விதமாக இங்கிலாந்து, ஸ்பெயின், லிபியா, பிரான்ஸ், இந்தியா என்று பந்தாடப்படுவது தான் பக்கிரி கதை, அந்தக் கதையையும் தனுஷே சொல்வது போல் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதை ரசிக்க முடிகிறது.
அதுவும், சிறார் குற்றவாளிகளை பள்ளிக்கு வரவழைத்து நல்வழிப்படுத்த, தனது சுவராஸ்யமான அனுபவங்களைக் கதையாகச் சொல்கிறார், தனுஷ். அல்லது தனது வலிமிகுந்த அனுபவங்களைச் சுவராஸ்யப்படுத்தி சொல்கிறார் என்றும் வைத்துக் கொள்ளலாம்.
தனுஷ், தன் அப்பாவின் கடிதத்தை அவர் கேட்டுக் கொண்டபடியே ஈபிள் டவரில் இருந்து அவர் வசிக்கும் மேலோகத்திற்கே ராக்கெட்டாக அனுப்பும் அந்தக் காட்சி அழகு.
Bérénice Bejo , Erin Moriarty என்று ஹாலிவுட் நாயகிகள். இதில் முதலாமானவரை அவரது காதலனுடன் சேர்த்து வைத்ததற்குக் கைமாறாகத் தன் கையை விட்டுப் போகும் நிலையிலும் இரண்டாமானவர் தனுஷிடமே வந்து சேர்கிறார்.
பிரஞ்சு இசையமைப்பாளர் Nicolas Errèra இந்திய இசையமைப்பாளர் Amit Trivedi உடன் சேர்ந்து துள்ளலான பாடல்களையும் பின்னணி இசையையும் கொடுத்திருக்கிறார்கள்.
இங்கிலாந்து குடியுரிமை அதிகாரி பென் மில்லர் ஆடிப்பாடிக் கொண்டே பணியாற்றுவது சுவராஸ்யம். பர்காத் அப்டி, ஆரம்ப கால வடிவேலு வை நினைவு படுத்துகிறார், தனுஷுக்குக் கிடைக்கும் அகதி நண்பன் இவர்.
சர்வதேச அகதிகள் தினமான ஜூன் 20 இல் வெளியாகியிருக்கும் பக்கிரியில் , தனுஷ், தான் சம்பாதித்த பணம் முழுவதையும் புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவுவதாகக் காட்டியிருக்கும் காட்சி அற்புதம், அதில் ஒரு ஈழத்தமிழரையோ தமிழச்சியையோ காட்டியிருந்தால் இன்னும் கொஞ்சம் அழுத்தமாகவேத் தமிழ் ரசிகர்களைத் தொட்டிருக்கும்.
ஒரு வாசனைத் திரவிய விளம்பரத்தில் வேற என்ன வேண்டும் என்று கேட்கப்படும். அதைப்போலத்தான், தனுஷ் இருக்கிறார், வேறு என்ன வேண்டும் என்று கேட்கத் தோன்றும் அளவிற்கு, தனது பல்வேறு பரிமாணங்களைக் காட்டிக் கவர்கிறார், பக்கிரி.