a K Vijay Anandh review
காடுகள் மற்றும் புலிகளின் முக்கியத்துவத்தைப் பற்றிய படம், தும்பா.
கணக்கில் வராத புலி காட்டுக்குள் வந்துவிட்டால், அதிகாரமட்டம் சில சமூகவிரோதிகளிடம் சேர்ந்துகொண்டு காசு பார்ப்பதற்குப் போடும் திட்டத்தை முறியடிக்கிறார், புகைப்படம் எடுக்க்க் காட்டுக்குள் வரும் நாயகி கீர்த்தி பாண்டியன். அவருக்குத் தெரிந்தோ தெரியாமலோ பக்க பலமாக நாயகன் தர்ஷனும் அவரது பெயிண்டர் நண்பன் தீனாவும்.
புலிக்குப் பெயிண்ட் அடிக்க அதாவது ஆனைமலை புலிகள் சரணாலயத்தில் அமைக்கப்பட்ட புலி சிலைக்குப் பெயிண்ட் அடிக்க தீனாவும் தர்ஷனும் செல்வதும் அங்கே , வன அலுவலகத்தில் பணிபுரியும் பாலா வுடன் சேர்ந்து செய்யும் சேட்டைகளும், அதகளம்.
குறிப்பாக, சரி விடுங்க அது பழைய கதை என்று சொல்லிச் சொல்லி தீனாவையும் தர்ஷனையும் பீதியில் உறைய வைக்கும் பாலாவின் யதார்த்தமான நகைச்சுவை , அதிலும் குறிப்பாக தீனாவின் டைமிங் என்று மிகச்சிறப்பாக வேலைசெய்திருக்கிறது, அதாவது நம்மைச் சிரிக்க வைக்கிறது.
கனா பட்த்தில் அவ்வளவாகப் பேச வாய்ப்பில்லாத தர்ஷனுக்கு, இதில் அதிக வசன்ங்கள் கொடுத்து முழுமையான நாயகனாக அடையாளம் காட்டியிருக்கிறார்கள். இந்தப்படம் தான் உண்மையாகவே தர்ஷனுக்குச் சவாலான அறிமுகம் என்றும் கூடச் சொல்லலாம். ஒரு நாயகனாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள, உடல் மொழியும் வாய்மொழியும் அதாவது பேசும் வசனங்களும் ஒரே அலைவரிசையில் இருக்கவேண்டும் என்பதைக்கற்றுக் கொண்டால், வீறு நடை போடலாம்.
Double Hero படம் போல Double Heroine படம் என்று தான் சொல்லவேண்டும். ஒருவர் கேரள நாயகி தும்பா, இன்னொருவருர் தமிழச்சி கீர்த்தி பாண்டியன். இருவருக்கும் சிறப்பாக கெமிஸ்ட்ரி Chemistry வேலை செய்திருக்கிறது. டைகர் Tiger என்கிற குரங்கு மற்றும் காட்டுவாசிகள் உதவியுடன் தும்பாவைக் காப்பாற்ற கீர்த்தி பாண்டியன் எடுக்கும் முயற்சிகள் மனதை வருடும் ரகம். கீர்த்தி பாண்டியன் கச்சிதமான தேர்வு. இன்னொரு நாயகி தும்பாவிற்குத் திரையை அதிகமாக விட்டுக் கொடுத்திருக்கிறார், தும்பாதான் கதையின் நாயகியாக இருப்பதால்.
உண்மையான நேசம் இருந்தால், புலியைக் கூட அரவணைத்துக் கொள்ளமுடியும், தரணி வாசுதேவ் போன்ற சுய நலத்திற்காக எவ்வளவு எல்லைக்கும் போக்க்கூடிய மனிதர்களிடமிருந்து தான் இயற்கையையும் மனிதர்களையும் இறைவன் காப்பாற்ற வேண்டும்.
ஜார்ஜ் விஜய் நெல்சனும் கலையரசன் கண்ணுசாமியும் புலிவேட்டையில் தங்கள் பங்கினைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
இயற்கை வளங்கள் குறிப்பாக்க் காடுகளும் மிருகங்களும் மனிதர்களின் சுய லாபங்களுக்காக அதிவிரைவாக அழிக்கப்பட்டு வரும் இந்த காலகட்ட்த்தில், நமது தேசியவிலங்கான புலியைப் பாதுகாக்கும் ஒரு விழிப்புணர்ச்சியை மிகவும் சரியான நேரத்தில் ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ஹரீஷ் ராம்.
KNACK ஸ்டுடியோவின் கணிப்பொறி வரைகலை மற்றும் VFX பணிகள் பட்த்திற்குப் பெரிய பலம்.
ஒரு சிறந்த படத்தைத் தயாரித்த திருப்தி சுரேகா நியபதிக்குக் கிடைத்திருக்கும். அதனை முன் கூட்டியே கணித்து வாங்கி வெளியிட்டிருக்கும் கே ஜே ஆர் ஸ்டுடியோஸ்க்கு இது லாபகரமான வாரம் என்றால் மிகையல்ல.
தும்பா, நல்லவர்களுக்கு நல்லவள்