a K.Vijay Anandh review
படம் ஆரம்பிக்கும் போதே இது தமிழ்ப்படம் தானா என்கிற சந்தேகம் வருகிறது. எலியை மையமாக வைத்து, சர்வதேசப் படங்கள் போன்று எடுத்திருக்கிறார்கள் என்பது, ஏற்கனவே அறிந்த விஷயம். ஆனால், இடதுசாரி சிந்தனையாளர்களால் கருப்பு, நெருப்பு என்று கிட்டத்தட்ட ஒரேயடியாக இழுத்துச் செல்லப்பட்டுவிட்ட தமிழ் சினிமாவில் முதல் காட்சியே வடலூர் இராமலிங்க அடிகளாரின் சன்மார்க்க சபையைக்காட்டியும் அவரது திருவருட்பாவையும் பாடி ஆச்சிரியப்பட வைக்கிறார்கள்.
உலகம் முழுவதும் தீவிரவாதம் தலைவிரித்தாடும் இந்த காலகட்டத்தில், சிவனே என்று இருப்பவர்களையும், சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் தீவிர்வாதிகளாக்க முயலும் இந்தக்காலத்தில், நாலு காட்சிக்கு ஒரு சண்டைக்காட்சி என்று படமெடுத்துக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் , கொல்லாமை அதுவும் வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம் வாடினேன் என்கிற வள்ளலார் வாக்கின் படி, எந்த உயிரையும் கொல்லாமல் இருப்பதை வலியுறுத்திப் படம் இயக்கிய நெல்சன் வெங்கடேசன் மற்றும் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு ஆகியோருக்கு அமைதியை விரும்பும் சமூகம் ஆயுள் முழுக்க நன்றிக்கடன் பட்டிருக்கும்.
சரி, சாமி படமா..? என்றால் அதுவும் இல்லை. அட்டகாசமான பொழுதுபோக்குத் திரைப்படமாக மான்ஸ்டர், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பம் குடும்பமாக இந்தக்கோடையில் கொண்டாடும் படமாக வெளிவந்திருக்கிறது.
தனது முதல் படத்திலேயே அஜித், இரண்டாவது படத்திலேயே விஜய் என்று இயக்கிவிட்டு, அடுத்தடுத்து நாயகன், இயக்குநர், இசையமைப்பாளர் என்று தனி ஆவர்த்தனம் செய்து, இந்தியா முழுவதும் அறியப்பட்ட தென்னக திரைக்கலைஞர் எஸ் ஜே சூர்யாவா இது என்று சந்தேகப்படும் அளவிற்குத் தனது முந்தைய சாதனைகள் எதுவுமே தெரியாத மாதிரி, ஒரு அறிமுக நாயகன் போல அசத்தியிருக்கிறார். அடுத்த கால் நுற்றாண்டு, வேறு ஒரு பரிமாணத்தில் எஸ் ஜே சூர்யாவைப் பார்க்கப்போகிறோம் என்பதற்கான அச்சாரம், மான்ஸ்டர்.
அஞ்சனம் அழகிய பிள்ளை, இதில் பிள்ளை என்பது சாதிய அடைமொழியா அல்லது குழந்தை என்கிற அர்த்தத்தில் இணைத்திருக்கிறார்களா என்று நினைக்கின்ற அளவிற்கு, குழந்தைத்தனமாக முகத்தையும் தனது செயல்பாடுகளையும் வெளிக்காட்டி, கொள்ளைகொள்கிறார், எஸ் ஜே சூர்யா. மின்சாரவாரிய அலுவலராக , ஒரு உயர் நடுத்தரக்குடும்பத்து, முதிர்காளையாக படைக்கப்பட்ட இவருடைய கதாபாத்திரம் அருமை.
எலியுடன் அவர் படும் பாடு, படம் பார்க்கும் ஒவ்வொருவர் குடும்பத்திலும் ஒருவரோ அல்லது பலரோ இந்த அனுபவங்களை நேரிடையாக அனுபவித்திருக்கக்கூடும்.
ஸ்ரீதேவி அறிமுகமானதிலிருந்து இன்று வரை, ஸ்ரீதேவி மாதிரி ஒரு பொண்ணுபார்க்கனும் என்று சொல்வது நமது பேச்சுவழக்கில் கலந்துவிட்ட ஒன்று. மான்ஸ்டருக்குப் பிறகு, பிரியா பவானி சங்கர் மாதிரி ஒரு பொண்ணு பார்க்கவேண்டும் என்று புதிய வழக்கு உருவாகப்போகிறது. வசீகரத்துடன் கண்ணியமான ஒரு அழகுடன், மேகலாவாக மான்ஸ்டருக்கு வலு சேர்த்திருக்கிறார்.
கருணாகரன், வழக்கம்போல இயல்பான நகைச்சுவை விருந்து படைக்கிறார். சரி உட்கார்ந்து பார்க்கலாம் என்று கருணாகரன் சொல்ல, எஸ் ஜே சூர்யா டபக்கென்று தரையில் உட்கார, கருணாகரன் காட்டும் முகபாவனைகள், அதகளம்.
சில நிமிடக்காட்சிகளுக்கு அதிகமான நாட்கள் மெனக்கெட்டு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் கோகுல் பினாய். கார்த்திக் நேத்தா, யுகபாரதி, சங்கர் தாஸ் ஆகியோருட ஜஸ்டின் பிரபாகரன் எழுதிய பாடல்களும் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் நம்மை முணுமுணுக்க வைக்கின்றன. இன்னொரு இளையராஜா என்பதை விட, அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்களுக்கு இவர் ஒரு முன்மாதிரியாக இருப்பார் என்றால் அது மிகையல்ல. மான்ஸ்டர் படத்தில் அந்த லிட்டில் மாஸ்டர்ஸ் Little Masters ஆடிப்பாடும் டபக்குனு தாவி தாவி, கோடைக்கொண்டாட்டம், குழந்தைகளுக்கு. எங்கே இருந்துயா புடிச்சீங்க, அவ்வளவு அழகான கிளிகளை, மன்னிக்கவும் “எலி”களை..?
சமீபத்தில், பார்த்திராத, உள்ளத்தை உருக்கும் கிளைமாக்ஸ், ஜஸ்டின் பிரபாகரனின் இசை படத்திற்கு உள்ளேயும், பார்வையாளர்களின் கைதட்டல்கள் படத்திற்கு வெளியேயுமாகப் பின்னணி இசைகளாக இருக்கும்.
மான்ஸ்டர், மனிதநேயத்தை மட்டுமல்ல மிருகநேயத்தை, கொல்லாமையை வலியுறுத்தும் படம், சர்வதேச அரங்கில், தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்க்கும் படம், அந்த விதத்தில்.