குப்பத்து ராஜாவுக்குள் சொருகியிருக்கவேண்டிய ஆறேழு காட்சிகளை, இழுத்து அதுவும் 90 நிமிடங்களுக்கு மேல் இழுக்கவும் முடியவில்லை, ஒரு படமாகக் கொடுத்திருக்கிறார்கள்.
ஏதாவது செய்து, ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்கைத் தரவேண்டும் என்று மெனக்கெடும் இயக்குநர் விஜய் மீதோ, மூர்த்தி சிறுதாக இருந்தால் என்ன கீர்த்தி பெரிது என்று தனது படங்களால், இசையமைக்கும் தனித்திறமையால் பேச வைத்துக் கொண்டிருக்கும் ஜீவி பிரகாஷ் குமார் மீதோ எந்தத்தவறும் இல்லை.
ரெண்டு கிரவுண்டு இடத்துல கட்டப்பட்ட 2000 சதுர அடி வீட்டுக்குள்ளே ஒரு அதிகாரியை எத்தனை மணி நேரத்திற்கு தேடுவார்கள், அதுவும் ஆயுதம் தாங்கிய 5 தீவிரவாதிகள்..?
படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், பி டி செல்வக்குமார் செளக்கிதார் – இராணுவவீரர்கள் என்று பேசிய அளவின் பிரமாண்டத்தில் ஒரு 10%கூட படத்தில் இல்லை.
விஜய் அறிமுகப்படுத்திய நாயகிகள் எல்லோரும் வெற்றிகரமான நாயகிகளாக வருவார்கள் தாம். ஆனால், அதற்கு அவர்களிடம் அழகுடன் ஆடல், நடிப்பு, ஆளுமை என்று இன்னபிற தனித்திறமைகளும் இருக்கும், இருந்தது.
ஆனால், தயாரிப்பாளருக்கு இருக்கும் ஒரே தனித்திறமை, முதலீடு தான். அந்த முதலீட்டைக் கொஞ்சம் தாராளாமாக்கியிருந்தால், படைப்பாளியின் தளம் இன்னும் கொஞ்சம் விரிந்து முழுமையான ஒரு விருந்து படைத்திருக்க முடியும்.
வாட்ச்மேன் என்றால், அவர்களுக்கென்று பிரத்யேகமான சீருடை, தொப்பி, காலணி வாங்கிக் கொடுக்கவேண்டும். வாட்ச்மேன் என்று எழுதி நெற்றியில் ஒட்டிவிட்டால் மட்டும் போதாதே!
வாட்ச்மேன், ஒரு பெரிய குறும்படத்திற்குள் அடக்கியிருக்கவேண்டிய கதை, திரைப்படத்திற்குப் போதவில்லை.