a K.Vijay Anandh review
காதலுக்கு சாதி இல்லை, மதம் இல்லை, கண் இல்லை என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்போம், அந்த அடிப்படையில் பல சினிமாக்களும் வந்துவிட்டன.
காதலைச் சொன்னவுடனே கட்டிலில் காமத்தையும் பூர்த்தி செய்துவிடும் இந்தக் காலத்த்தில், காதலுக்கு காமமும் இல்லை என்று சொல்லியிருக்கிறது மெஹந்தி சர்க்கஸ்.
அது ஏன்..? எப்படி..? என்று ஏப்ரல் 19 ஆம் தேதி பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
இங்கே கதை தான் பிரச்சினை. அதனால், ராஜு முருகன் கதை என்று சொன்னவுடனேயே ஒரு உத்திரவாத வெற்றி கிடைத்துவிடுகிறது.
அதனை இயக்குவது அவருடைய உடன்பிறப்பு என்கிற வகையில், கதையைச் சிதைத்துவிடாமல் இயக்கப்பட்டும் விடுகிறது, சரவணன் ராஜேந்திரனால்.
போட்டோ ஷாப் என்கிற மென்பொருளில் ஸ்க்யூஸ் என்று ஒரு செயல்பாடு இருக்கிறது. அதாவது, ஒரு புகைப்படத்தில் உள்ள குறிப்பிட்ட நபரை மட்டும் தேர்ந்தெடுத்து கொஞ்சம் பெரிதோ சிறியதோ ஆக்கிக் கொள்வது. அப்படிக் கொஞ்சம் சிறிய உருவமாக்கப்பட்ட நம்ம பூவே பூச்சுடவா ரகுமான் மாதிரி கவர்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ். சொல்லப்போனால், கதை நடப்பதாகச் சொல்லப்படும் காலம், ரகுமான் அறிமுகமாகி.பட்டையைக் கிளப்பிய காலம் தான்.
கொடைக்கானலில் ராஜ கீதம் இசைக்கடை நடத்தும் ஜீவாவாக , மா.ரங்கராஜ். மிகவும் எளிமையான களமென்றாலும் கர்ணம் தப்பினால் மரணம் என்கிற சவாலான திரைக்கதையில், நன்றாகப் பொருந்திப் போய்விடுகிறார்.
அவரது நண்பனாக ஒத்தவெடி ஆர் விக்னேஷ், சரவெடியாக நடித்து அசத்தியிருக்கிறார்.
இன்றைக்கு, இசை மலிவாகிவிட்டது. ஸ்மார்ட் போன் இருந்தால் ஏகப்பட்ட செயலிகள். சாதாரண போனாகவே இருந்தாலும், சிப் பில் பல்லாயிரக்கணக்கான பாடல்கள். எதுவுமே இல்லாவிட்டாலும் திரும்பின பக்கமெல்லாம் எஃப் எம் மற்றும் தொலைக்காட்சிகள். சரி, ஆபீஸ்ல கம்யூட்டர்ல உட்காருவோம் என்றால் அங்கேயும் யூடியூப்.
ஆனால், 80 களில் அப்படியெல்லாம் மலிவாக இசையை வாங்கிவிட முடியாது.
நல்ல உணவகத்தில் மெனுவைப் பார்த்து வேண்டிய உணவுகளை ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருப்பது போல, கேசட் கையில் வரும் வரைக் காத்திருக்கவேண்டும்.
அந்தக்.காத்திருப்பு, இன்றைய தலைமுறைக்குக் கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காதது. சென்ற தலைமுறைக்காகத் திரையில் நினைவுகளாய் கொண்டுவந்த மெஹந்தி சர்க்கஸ் குழுவினருக்குப் பாராட்டுகள்.
நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் சன்னி சார்லஸ், தமிழ் சினிமாவுக்குக் கிடைத்திருக்கும் நல்ல ஒரு குணச்சித்திர நடிகர். அட, ஜாதவாக வரும் அங்கூர் விகாலும் தாங்க. ஒரு நிரந்தரப் புன்னகையுடனேயே பிரமாதப்படுத்தியிருக்கிறார்.
பங்குத்தந்தையாக , ஒழுக்கம் முக்கியம்.ஒழுக்கம்.முக்கியம் என்று விரைப்பு காட்டும் வேல ராம மூர்த்தி, இதில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்
மாரிமுத்து, சொல்லவும் வேண்டுமோ! அவர் ஒத்தவெடியின் கன்னத்தில், இரண்டு வெங்காய வெடிகளை வெடிப்பது, யதார்த்தம்.
ஹீரோயின், ஸ்வேதா திருபாதி, கண்களை விரித்து முகத்தை லேசாகத் தூக்கி என்ன என்பது போல் பார்க்கும் பார்வையை, தாக்குபிடிக்கமுடியுமா என்பதே கேள்விக்குறிதான்.
கத்திகளை எறிவது பெரிதல்ல, தைரியமாக நிற்பது தான் பெரிது. அவரைத் தவிர, அத்தனை பேரும், அதாவது படம் பார்க்கும் அத்தனை பேரும் பயப்படுவது உறுதி.
படத்தில் சர்க்கஸ் இருக்கிறது, சர்க்கஸ் என்றாலே முன்பே குறிப்பிட்டமாதிரி கர்ணம் தப்பினால் மரணம் தானே, தப்பாமல் இருக்க பேலன்ஸ் என்று சொல்லப்படும் சமநிலை முக்கியமல்லவா, அந்த பேலன்ஸ் சந்தேகமில்லாமல் ஷான் ரோல்டன் இசைதான்.
குறிப்பிட்ட நிறக்கலவையோடு செல்வக்குமாரின் ஒளிப்பதிவும் அருமை.
மெஹந்தி போட்டால் அது மறைய சில நாட்கள் பிடிக்கும், இந்தப்படமும் , பார்த்த சில நாட்களுக்கு நெஞ்சை விட்டகலாது.