a K Vijay Anandh review
போபால் விஷவாயு கசிந்த போது அந்த மக்கள் இப்படித்தானே துடித்திருப்பார்கள்../ ஓடித்தப்பிக்க முடியாத முதியவர்கள் இப்படித்தானே தெருவில் சுருண்டு விழுந்து செத்துப்போயிருப்பார்கள்.? சுருண்டு விழும் தாய் தந்தையரை விட்டுவிட்டு ஓடுவதா..? அல்லது இவர்களுடனேயே செத்துப்போய்விடுவதா..? என்று இப்படித்தானே குழந்தைகள் துடித்திருப்பார்கள்..?
அந்த நேரத்திலும் குழந்தையாவது பாதுகாப்பாக இருக்கட்டுமே என்று பீரோவில் வைத்துப்பூட்டிவிட்டு, இப்படித்தானே தாய்மார்கள் செத்துப்போயிருப்பார்கள்..?
என்ன..? ஏது..? என்று தெரியாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இருக்கின்ற வசதிகளைக் கொண்டு இப்படித்தானே சிகிச்சை அளித்திருப்பார்கள் மருத்துவர்கள்…?
இப்படி நம் பார்வைக்கு வெகுதூரத்தில் நடந்த துயரங்களை, நம் பார்வைக்குப் பக்கத்தில் நடக்கவிருக்கும் துயரங்களை நம் கண் முன் கொண்டு வந்து பயமுறுத்தியிருக்கிறார் இயக்குநர் விஜய் குமார்.
கொள்ளை லாபம் அடிக்கத் துடிக்கும் முதலாளி, அவன் வீசும் எலும்புத்துண்டுகளுக்கு ஆசைப்படும் அதிகாரி, தூக்கியெறியும் பணமூட்டைகளுக்காகத் தன்னை நம்பி ஓட்டுப்போட்ட மக்களைக் காவு கொடுக்கும் அரசியல்வாதி என்று ஒவ்வொரு துரோகிகளையும் துகிலுரித்திருக்கிறார்கள்.
உன் சாதி மக்களெல்லாம் அவர்களை உனக்கு என்ன எழுதிக் கொடுத்திருக்காங்களா..? என்று கேட்கும் வசனம் சாதியை முன்னிறுத்தி அரசியல் செய்து ஆதாயம் அடையும் ஒவ்வொருத்தனுக்குமான செருப்படி.
ஆலை வெடித்து விஷ வாயு கசியப்போகிறது என்கிற நிலையிலும் கடைசி வரை போராடி இதனை எப்படியாவது தடுத்துவிடமுடியுமா..? என்று முயற்சிக்கும் ஒவ்வொரு தொழிலாளியும் இராணுவ வீரர்களுக்குச் சமமானவர்களாகவே தெரிகிறார்கள்.
என்ன பிரச்சினை..? உண்மையில் எதனால் இந்தப்பேரழிவு ..? என்பதை மறைக்க முயற்சிப்பது அல்லது மடைமாற்ற முயற்சிப்பதுதான் உண்மையில் பேரழிவுக்கெல்லாம் பேரழிவு என்பதைக் காட்சிகளால் , குறிப்பாகப் பிணக்குவியல் சூழ்ந்த மருத்துமனைக் காட்சிகளால் விவரித்து பயமுறுத்திவிடுகிறார்கள்.
எம் ஐ சி கசிய ஆரம்பிக்கும் இடைவேளைக்குச் சில நிமிடங்கள் முன்பு இருந்து அடுத்து வரும் முழுப்படத்தையும் தன் இசையால் சுமக்கிறார் கோவிந்த் வசந்தா.
விஜய், சாதிவெறி எப்படி ஆபத்தானதோ, காழ்ப்புணர்ச்சியுடன் ஒரு குறிப்பிட்ட தலைவரை இருட்டடிப்பு செய்வது அதை விட ஆபத்தானது. வ உ சிதம்பரம்பிள்ளைக்கு அடுத்து இமானுவேல் சேகரனைக் காண்பிக்கும் போது, முத்துராமலிங்கத்தேவரை இருட்டடிப்புச் செய்தது ஏன்..? தேசியமும் தெய்வீகமும் என்று தான் அவர் சொல்லியிருக்கிறாரே தவிர தேசியமும் தெய்வீகமும் சாதியும் என்று அவர் சொல்லியிருக்கவில்லையே..?
ஸ்டாலின் போன்று அம்மா பூசிவிடும் விபூதியை அழிப்பது, இந்தப்படத்தின் வெற்றிக்கு உதவுமானால் , நல்லது தான்.
அழித்தொழிக்க வேண்டியது, ஆபத்தான நிர்வாகிகளையும், அதைவிட அபாயகராமான அரசியல்வாதிகளையும், எல்லாவற்றையும் விட கொடூரமான சாதீய அரசியலையும் தான்!, அதையும் செய்திருக்கிறார் விஜய்குமார்.
உறியடி II , சாதீய அரசியலுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் உக்கிரமான அடி.