a K Vijay Anandh review
இந்தியா என்றாலே திருவிழாக்கள் தான், அதிலும் கேரள மா நிலத்தில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் அந்த மா நில மக்களே லட்சக்கணக்கில் கூடி சாதி பேதங்களை மறந்து குடும்பம் குடும்பமாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள். அவர்கள் கொண்டாடும் பண்டிகைகளுள் மிக முக்கியமான பண்டிகை பூரம் திருவிழா.
நமது திருவிழாக்களில் இசைக்கு அதிகமுக்கியத்துவம் இருந்தாலும் திருச்சூரில் கொண்டாடப்பட்டுவரும் பூரம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான இசைக்கலைஞர்கள் குழுமி வாசிக்கும் செண்டை மற்றும் பாண்டிமேளங்கள் அவற்றிலிருந்து புறப்படும் வசீகரிக்கும் அதே நேரம் எழுந்து ஆட வைக்கும் இசை, அத்துடன் யானைகளின் பிளிறல், விண்ணைப்பிளந்து வெடிக்கும் நாட்டு வெடிகளின் சத்தம், மக்களின் ஆரவாரம் என்று பூரம் விழாவின் போது எழும் இசை அற்புதத்திலும் அற்புதம் என்று சொன்னால அது மிகையாகாது.
அப்படி, ஒரு பூரம் இசைவிழாவைப் பதிவு செய்ய அனுப்பப்படுகிறார் ரசல் பூக்குட்டி. இதனை, ஒரு ஆவணப்படமாகவே எடுத்திருக்கலாம் தான். ஆனாலும், அதற்குள் ஒரு கதையை வைத்து, மனதைத் தொட்டுவிடுகிறார் இயக்குநர், பிரசாத் பிரபாகர்.
ஒரு சிறந்த படைப்பை மக்களுக்குக் கொடுக்க, படைப்பாளி எவ்வளவு சவால்களைச் சந்தித்து சாதிக்கவேண்டியிருக்கிறது என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறார்கள், அதுவும் ஆஸ்கர் விருது வாங்கிய படைப்பாளிக்கே அந்த நிலைமை.
ஒரு கட்டத்தில், சரி இதை இத்தோடு விட்டுவிடலாமா என்று கிளம்பும் ரசல் பூக்குட்டியை, பார்வையற்ற மாற்றுத்திறனாளி இசையமைப்பாளர் அப்சல் தடுத்துவிடுகிறார்.
அவரது காப்பகத்தில் வாழும் பல நூறு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் வேண்டுகோளுக்கு இணங்கி, திருச்சூர் பூரம் திருவிழாவின் இசையை பதிவு செய்கிறார் ரசல் பூக்குட்டி.
அவர், களத்தில் இறங்கியதும் சதி நடக்கின்றது. அந்தச் சதியை முறியடித்து, தனது கனவையும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் ஆசையையும் வெற்றிகரமாக நிறைவேற்றுகிறார் ரசல் பூக்குட்டி.
ஒரு கதை சொல்லட்டுமா வை சினிமாவாக்க முயற்சிக்காமல், திருச்சூர் பூரம் திருவிழாவினைப் பற்றிய ஆவண்ப்படமாகவே கொடுத்திருக்கலாம், அப்படிக் கொடுத்திருந்தால், மறுபடியும் இந்தக்குழுவிற்கு ஆஸ்கர் விருதுகள் கிடைத்திருக்கக்கூடும்.
மற்றபடி, ஒரு கதை சொல்லட்டுமா என்று கேட்டுவிட்டு நல்ல இசையைச் சொல்லியிருக்கிறார்கள்.