a K Vijay Anandh review
கையை விட்டுப்போகவிருக்கும் மைதானத்தை ஆக்கி விளையாடி ஜெயிக்கும் கதை, நட்பே துணை.
லகான், கதையை அப்படியே ஹாக்கிக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள், காலகட்டங்களை மட்டும் மாற்றி திரைக்கதை அமைத்து.
புரட்சி அது இது என்று பேசிவிட்டு, இந்தத்தீபாவா , இதைக்கூப்பிட்டாலே வந்துடுமே என்று, பெண்ணியத்தை உருவுகண்டு கலாய்ப்பது உச்சக்கட்ட அபத்தம். சொல்லப்போனால் துரதிஷ்டவசமாக அந்தக் காட்சியில் இருந்து தான் சுதாரிப்பே வருகிறது, ஓ நாம படம் பார்க்க வந்திருக்கோம் என்று.
கரு பழனியப்பனின் அரசியல்வாதி அவதாரம் , ஆறுதல். அலட்டிக்கொள்ளாமல் அதிரடி காட்டிவிடுகிறார், நியூஸ் சேனல்களை வெளுவெளு என்று வெளுத்திருக்கிறார். நீ சொல்றது இல்லடா நான் கேட்கிறது தான் கமிஷன் என்று 12 கோடியை 75 கோடியாக்கும் இடம் அதகளம். கடைசி வரைப் போராடிக் கமிஷன் பெற முயலும் மெனக்கெடலில், 1% நேர்மையாக இருந்துவிட்டாலே, இவருக்கும் ஒரு சிலை வைக்கப்பட்டிருக்குமோ என்னமோ!
ராஜ் மோகன், அரசியல்வாதியின் ஹாக்கிமட்டைக்குள் மாட்டிக் கொண்ட பந்தாக படம் முழுவதும் அவஸ்தை காட்டுகிறார், அதாவது அந்தக்கதாபாத்திரத்திற்கு நேர்மையாக உழைத்திருக்கிறார். விக்னேஷ் காந்த், எருமைச்சாணி விஜய் ஆறுதல்கள், ஹரிஷ் உத்தமன், ஹாக்கி கோச் என்றாலே ஏன் ஷாருக் கானைச் சொல்கிறார்கள், அவர் என்ன ஹாக்கி கோச்சா..? இந்தக் கேள்விக்கு விடைகண்டுகொண்டால், அடுத்தடுத்த வாய்ப்புகளில் ஜொல்லிக்கலாம்.
கெளசல்யா, பாண்டியராஜன் செயற்கையின் உச்சம்.
அனகா, மிகவும் அளவாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.
ஹிப்ஹாப் ஆதியை வைத்து என்னதான் முயற்சித்தாலும், இசையும் இசை சார்ந்த விஷயங்களிலுமே அவர் அதிகமாக பொருந்திப்போகிறார் என்பதற்கு நட்பே துணையே ஒரு சாசனம்.
சிறப்பான கதைக்களம், திரைக்கதையிலும் பெரும்பாலான நடிகர்கள் தேர்விலும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கவேண்டும்.
நட்பே துணை, ரசிகர்களே துணை!