a K.Vijay Anandh review
மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் டுக்கு ஆதரவு பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் வானொலியில் உரையாற்றும், மான் கி பாத் நிகழ்ச்சியினைக் கிராம மக்கள் கேட்பது, மகன் இந்திப்படிப்பதை ஊக்குவிப்பது என்று இது தமிழ்ப்படம் தானா என்கிற சந்தேகம் எழத்தான் செய்கிறது, தமிழ்ப்படம் தான். டாஸ்மாக் கினால் தமிழக்குடும்பங்கள் எப்படிச் சீரழிகின்றது என்று சொல்லும் அட்டகாசமான தமிழ்ப்படம்.
பிரதமர் மோடி, உரையாற்றும் மான் கி பாத் நிகழ்ச்சியினை வானொலியில் கேட்டு, கூடியிருக்கும் கிராம மக்களுக்குத் தமிழில் மொழிபெயர்த்து, தங்கபாலு மாதிரி அல்ல, புத்திசாலித்தனமாகவே மொழிபெயர்த்துச் சொல்லும் சிறுவன், தனது தந்தையின் மதுப்பழக்கத்தினால் தரமான கல்வி பயில முடியாமல் சாலைக்கு வருவது தான் குடிமகன் படத்தின் ஒருவரிக்கதை.
சிறுவனாக ஆகாஷ், அவரது தந்தை கந்தனாக ஜெய்குமார், தாய் செல்லக்கண்ணுவாக ஜெனிபர் என்று நிறைவாக நடித்திருக்கிறார்கள்.
நட்புவட்டத்தில் ஒருவராக வரும் வீரசமர் , யதார்த்தமான கிராமத்து இளைஞனாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். அவர் பேசும் வசனங்கள் எதுவும் சினிமாவுக்காக எழுதினமாதிரியே தெரியாத அளவுக்கு மிகவும் இயல்பாகப் பேசுகிறார்.
இன்னொரு கலை இயக்குநர் கிரண், வில்லத்தனமான அரசியல்வாதியா கூப்பிடு அவரை என்கிற அளவுக்குப் படத்துக்குப் படம், ஒரு தவறான அரசியல்வாதியாக வந்து அசத்துகிறார்.
பாலா சிங், மகனையும் மருமகளையும் சரியாகப் புரிந்துகொள்ளாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி ஊர்மக்கள் மத்தியில் மருமகளின் மானத்தை வாங்குபவராக, பல வீடுகளில் பார்க்க முடிகின்ற மாமனாராக நடித்து சிறப்பித்திருக்கிறார், அவர் திருந்துமிடம் யதார்த்தம்.
சினேகன், தை.து.இரவி அரசனின் பாடல்கள் எஸ் எம் பிரசாந்த் இசையில் கேட்கும்படி இருக்கின்றன. சி டி அருள் செல்வனின் ஒளிப்பதிவு இயக்கு நருக்குப் பெரிதும் கைகொடுத்திருக்கிறது.
ஒரு நல்ல கதையை, இன்றைய தமிழக்த்திற்குக் குறிப்பாக கிராமப்புறங்களில் வாழும் பெரும்பாலான தமிழ்க்குடும்பங்களுக்குத் தேவைப்படும் கதையாகப் பொறுப்புடன் எழுதி இயக்கியிருக்கிறார் சத்தீஷ்வரன்.
குடிமகன், ஒவ்வொரு குடிமகனுக்குமான கதைமட்டுமல்ல, குடிப்பழக்கம் அல்லாதவர்களுக்குமான படம்.